தியோ பெங் ஹொக் வழக்கை போல இந்திராவுக்கும் நியாயம் வேண்டும்

இராகவன் கருப்பையா – கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் முன்னாள் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக் மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் தொடரும் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

அதே போல மதம் மாறி விவாகரத்தான கணவரிடமிருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்கும்படி15 ஆண்டுகளாக போராடும் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கும் நீதி கிடைப்பதை அன்வார் உறுதி செய்ய வேண்டும்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் உதவியாளராக பணியாற்றிய தியோ பெங் ஹொக் கடந்த 2009ஆம் ஆண்டில் ஊழல் வழக்கொன்று தொடர்பாக விசாரிக்கப்படுவதற்காக, 14ஆவது மாடியில் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஆனால் விடிந்த போது அந்தக் கட்டிடத்தின் 6ஆவது மாடிக்கு வெளியே அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை என முதலில் கூறப்பட்ட போதிலும் அது விபத்தோ தற்கொலையோ அல்ல என மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறகு தீர்ப்பு வழங்கியது.

எனினும் ஏதோ காரணங்களுக்காக அந்த வழக்கு அதற்கு மேல் நகராமல் இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.

இருந்த போதிலும் தியோ பெங் ஹொக்கிற்கு நீதி வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் விடாப்பிடியாக இத்தனை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடைசியில் அன்வாரையும் சந்தித்து முறையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இம்முறை யாருடைய தலையீடும் இல்லாமல் நியாயமாகவும் வெளிப்படையாகவும் அந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என அன்வார் உறுதியளித்துள்ளார்.

அதனைப் போலவே இந்திரா காந்தி விவகாரத்திலும், யாருடைய தலையீடும் இல்லாமல், நீதிமன்ற உத்தரவுபடி அவருடைய மகள் பிரசன்னா டிக்சாவை மீட்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அன்வார் உறுதியளிக்க வேண்டும்.

இந்திராவின் முன்னாள் கணவர் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தாயிடம் பிள்ளை ஒப்படைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் காவல் துறையினர் அந்தத் தீர்ப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

நான்கு பிரதமர்களின் ஆட்சியில் 6 புதிய காவல்துறைத் தலைவர்கள் பதவியேற்ற பிறகும் இந்திராவுக்கு விமோசனம் பிறக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

பத்மநாதன் தொடர்பாக இந்திராவின் வழக்கறிஞர்கள் தக்க ஆதாரங்களை முன்வைத்த போதிலும் காவல்துறை தரப்பில் மெத்தன போக்குதான்.

தியோ பெங் ஹொக் வழக்கு தொடர்பாக தற்போதைய காவல் படைத் தலைவர் ரஸாருடினை சந்தித்து பேசவிருப்பதாக அன்வார் அறிவித்தார். அந்த வேளையில் இந்திராவின் நிலை குறித்தும் உறுதியான ஒரு நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்த வேண்டும்.