தேசியதின சிறப்பு கட்டுரை– கி. சீலதாஸ் – ஜனநாயகம் என்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொது தேர்தலில் வாக்களித்து நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைப்பதோடு நின்றுவிடுகிறது என எண்ணுவது வெகுளித்தனத்தைப் பகிரங்கப்படுத்துவதாகும்.
அத்தகைய மனநிலை ஜனநாயகத்தின் உண்மை பொருளை உணராத தரத்தையும் பளிச்சிடச் செய்கிறது. இப்படிப்பட்ட இடித்துரைகள் நியாயமானவை. எனவே, ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்குச் சான்று வேண்டுமானால் தேர்தல் முடிந்தவுடன் வாக்களித்த மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் புலப்படும்.
தேர்தல் முடிந்தவுடன் தாம் வாக்களித்தவர் தெரிவு செய்யப்பட்டால் மகிழ்வும், தேர்வு செய்யப்படாவிட்டால் “இதுதான் ஜனநாயகம்” என்று துண்டை உதறிவிட்டு வேறு வேலையைக் கவனிக்க ஆயுத்தமாகிவிடும் மனநிலை ஜனநாயகத்தை ஆட்சிமுறையாக மேற்கொண்டிருக்கும் நாடுகளில் காணப்படுகிறது.
ஜனநாயகத்தைப் பற்றி கூறும் ஆங்கிலேய இலக்கியப் படைப்பாளர் வில்லியம் ரேஃப் இங் (1860-1954), ஜனநாயகமானது ஆட்சி முறையின் ஒரு பரீட்சார்த்திரம் மட்டும்தான். அதில் தெளிவான தரம், வாக்குகளை எண்ணுவதில் தானே தவிர அதன் முக்கியத்துவத்தில் அல்ல என்கிறார்.
இது கவலையான நிலையாகும். இதற்குக் காரணம் மக்கள்தான் என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். இந்த நிலைக்கு மக்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லுவதில் நியாயம் இருந்தாலும் அதுவே முழுமையான நியாயம் என்று சொல்ல முடியாது; ஏனெனில், மக்களை சிந்திக்கும் ஆளுமையைப் பெறுவதற்கான சூழ்நிலையை ஆட்சியில் இருப்போர் அமைத்து தர வேண்டும் என்றால் அதுதான் ஏற்புடைய நிலையாகும்.
ஜனநாயகம் என்றால் வாக்களிப்பதோடு பொறுப்பு முடிந்துவிட்டது. அதாவது, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பார்ப்போம் என்று வாளா இருப்பது அல்ல மக்களின் ஜனநாயகக் கடமை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள்,
- அவர்களின் ஆட்சிமுறை நாட்டை எவ்வாறு பாதிக்கிறது,
- குடிகளின் வாழ்க்கை எப்படி பாதிப்படைந்துள்ளது,
- பொருளாதாரம் எப்படி வளமடைகிறது,
- கல்வியின் தரம் எப்படி இருக்கிறது,
- சமூக சூழல் எப்படி இருக்கிறது,
- குற்றச்செயல்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன,
- நீதித்துறையின் நடவடிக்கைகள் மக்களுக்குத் திருப்திகரமாக இருக்கின்றனவா,
- காவல்துறை செவ்வென பாராபட்சமின்றி செயல்படுகின்றதா, சட்டத்துறை தனது அணுகுமுறையில் களங்கம் கற்பிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொறுப்பில் கவனமாக இருக்கிறதா?
போன்றவை யாவும் அடிக்கடி எழும் பிரச்சினைகளாகும். இவற்றில் மக்களின் கவனம் ஒரு பொழுதும் குறையக்கூடாது என்பதுதான் மக்களின் ஜனநாயகக் கடமை.
ஆட்சியைப் பற்றி, ஆட்சியை நடத்தும் பல துறைகளில் நிகழும் தவறுகளைப் பற்றி மக்கள் கவலை கொள்ளாமல் “நடப்பது நடக்கட்டும்” என்றிருந்துவிட்டால் அது ஜனநாயகக் கடமை அல்ல. நம்மால் என்ன செய்ய முடியும் என்று கைகளைப் பிசைந்தால் போதாது.
ஏன் தெரியுமா?
அரசும் அதன் பல துறைகள் மக்கள் மவுனமாக இருப்பதையே விரும்புவர். மக்களின் மவுனத்தைச் சுட்டிக்காட்டி மக்கள் நிம்மதியாக வாழ்வதாகப் பறைசாற்றுவர்.
இதுதான் நாகரீக அரசியல் முறை. இன்றைய ஜனநாயகம் நாணயமான அரசியலை நடத்துவதைத் தவிர்த்து அற்பத்தினத்திற்குச் சிறப்பிடம் நல்கும் கலாச்சாரமாகப் பல நாடுகளில் நிகழ்வதைக் காண முடிகிறது.
நாம் நாடு அதில் விழுந்துவிடக் கூடாது.
அரசியல் கட்சிகள் மக்களின் தேவைகளை, விருப்ப வெறுப்புகளை சுட்டிக்காட்டி, அவற்றிற்குப் பரிகாரம் காணும் சக்திகளாக விளங்க வேண்டுமென மக்கள் விரும்புவதில், நம்புவதில் தவறு இல்லை.
ஆனால், அரசியல் தலைவர்களின் கரிசனம் எதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை மக்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்தது உண்டா? நல்ல கேள்விதான்!
மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் தங்களின் குறைகளை, தேவைகளை, ஏமாற்றங்களை அம்பலப்படுத்தாவிட்டால் அந்த மவுனத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் என்பது திண்ணம்.
இந்தக் காலகட்டத்தில் மக்களின் உரையாடலைக் காண முடியவில்லை அல்லது குறைந்துவிட்ட நிலையை அடைந்துவிட்டது என்ற குறை இருப்பதை நாம் உணர மறுக்கிறோம். காரணம் தரமான உரையாடலைக் கண்டு காலம் பலவாகிவிட்டது.
பேச்சுரிமை இருப்பதாக அரசமைப்புச் சட்டத்தின் பத்தாம் பிரிவு விளக்குகிறது. அதே விதி மக்கள் ஓர் இடத்தில் கூடுவதையும் அனுமதிக்கிறது. பேச்சுரிமை என்றால் என்ன?
என் மனதில் பட்ட நியாயமான கருத்தை வெளியிடுவதைத்தான் அது உறுதிப்படுத்துகிறது. அந்த உரிமையை எப்படி பயன்படுத்துவது?
விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என் அறிவை, என் சிந்திக்கும் ஆற்றலை சந்தேகிப்பது போல இருக்கிறது என்று சொன்னால் சட்ட காவலர்கள், சட்ட நிபுணர்கள், அரசியல் விற்பனர்கள் யாவரும் புருவத்தை உயர்த்துவார்கள்.
பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடு விதிப்பது பேச்சுரிமையை மறுப்பதற்கு ஒப்பம் என்று கூறப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கட்டுப்பாடற்ற பேச்சுரிமை பலவிதமான வேதனை மிகுந்த விபரீதங்களை ஏற்படுத்தும் தரத்தைக் கொண்டிருக்கும் என்று சொல்லுவதில் தவறு காண முடியாது.
ஆனால், பேச்சுரிமையில் கட்டுப்பாடு தேவை என்று சொல்லும்போது அது எல்லா குடிமக்களையும் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சாரார் பிறரை இழித்தும், பழித்தும் பேசுவதைப் பொறுத்துக் கொள்ளும் தைரியம் அரசுக்கும் அதன் அமலாக்கத்துறைகளுக்கும் இருக்கலாம். ஆனால், அது பிறரைப் பாதிக்காமல், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அரசுக்கும் அதன் அமலாக்கத் துறைக்கும் உண்டு என நினைவுபடுத்தும் கடமை மக்களுக்கு உண்டு.
பிறரைத் தூற்றாதே எனச் சட்டம் சொல்லும்போது நான் தூற்றினால் குற்றம், மற்றவர் நம்மைத் தூற்றினால் குற்றமாகாது என நினைத்துச் செயல்படுபது ஜனநாயக மரபு அல்ல என்பதைவிட அதுவே அநீதியின் உச்சமாகும்.
இன்றைய உலக அரசியல் நிலவரத்தைப் பார்க்கும் போது நியாயமாக உரையாட முடியாது நிலை உருவாகி வருவதை நாம் காண்கிறோம். மக்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவர்களின் குறை எவர் காதிலும் விழாது. மக்கள் கட்டுப்பாடு அறிந்து பேச வேண்டும். இதைத்தான் தேசிய உரையாடல் என்பார்கள். இது பலன் தருமா என்று கேட்பதை விட பேச முயற்சிக்கலாம் என்ற துணிவு தேவை. அதற்கு அரசு உதவுமா? எல்லா மக்களும் அவர்கள் சார்ந்திருக்கும் பொது இயக்கங்களாக ஒத்துழைப்பார்களா என்பதே பெரும் கேள்வி.
மனிதர்கள் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனவேதனை வெளிப்படும். வெறும் கட்டுப்பாடுகளை விதிப்பதால் பேச்சுரிமை பொலிவிழந்து வெறும் வார்த்தைகளாக உறங்கிவிடும் என்பதை உணர வேண்டும்.
மவுனம் காக்கும் சமூகம் ஆபத்தானது என்பதை உணராமல் செயல்படுவது விபரீதமான விளைவுகளுக்கு வித்திடும். அதே சமயத்தில், அதிகாரத்தை வைத்து மக்களைக் கட்டுப்படுத்தலாம், அச்சுறுத்தி அடக்கலாம் என்று நினைத்துச் செயல்படுவது ஆபத்துதான் – ஜனநாயகம் அல்ல.
மக்கள் பேசுவதைத் தவிர்க்கக்கூடாது. நியாயமான முறையில் சட்டத்திற்கு உட்பட்டு மக்கள் தங்கள் முறைகளை வெளிப்படுத்தலாம். வெளிப்படுத்துவதற்கு அரசு உதவ வேண்டும்.
அரசு துறைகளில் காணப்படும் குறைகளைப் பற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது. அது போதாது. குறைகளைப் பகிரங்கமாகப் பேசுவதுதான் அவற்றிற்கான தீர்வு காண முடியும். அதிகாரிகளின் மீதான விசாரணை பலன் அளிக்கும் என்று மக்கள் நம்பும் காலம் இன்னும் வரவில்லை.
மக்கள் உரையாட வேண்டும். கட்டுப்பாடோடு, நாகரீகமான முறையில் உரையாட வேண்டும். மக்கள் கையில்தான் நாட்டின் நலமே இருக்கிறது. ஜனநாயகத்தின் பலமானது நாட்டு மக்கள் தங்களின் நியாயமான கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது. ஜனநாயகம் மக்களின் உரையாடலை விரும்புகிறது. அதற்குத் தடையாக இயங்குவது ஜனநாயகம் அல்ல. மக்களின் நியாயமான கோரிக்கை, குமுறல் அரசின் காதுகளுக்கு எட்ட வேண்டும். அதற்கான பாதுகாப்பை அரசு தர வேண்டும்.
ஜனநாயகம் வாழ வேண்டுமானால் மக்கள் பேச வேண்டும், வேண்டுமானால் ஏசவும் வேண்டும்!