அரசு ஊழியர்களின் சம்பள உயர்வும் விலைவாசியும்  

இராகவன் கருப்பையா – எதிர்வரும் டிசம்பர் மாதத்திலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படவிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வினால் எத்தனை பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்று தெரியவில்லை.

நாட்டின் வரலாற்றில் ஆகப்பெரிய சம்பள உயர்வு என கருதப்படும் 7% முதல் 15% வரையிலான இந்த அதிகரிப்பு குறிப்பிட்ட ஒரு சாராரை உற்சாகப்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும் கூடவே தொத்திக் கொண்டு வரக்கூடிய விலை வாசி உயர்வை எண்ணிப் பார்க்கும் போது பெரும்பாலோரின் உற்சாகம் சுவடு தெரியாமல் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் தனியார் துறையில் பணி செய்பவர்களின் நிலை சற்று பரிதாபம்தான். ஏனெனில் ஊதிய உயர்வு இல்லாமலேயே அவர்கள் விலை வாசி அதிகரிப்பை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை சமாளிக்க முடியாமல் வெகுசன மக்கள், குறிப்பாக பி40 தரப்பினர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கம் டீசல் விலையையும் மின்சாரக் கட்டணத்தையும் அதிகரித்ததிலிருந்து சங்கிலித் தொடராக கிட்டதட்ட எல்லா பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது அரசாங்கத்திற்கும் தெரியும். ஆனால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு எம்மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றுதான் தெரியவில்லை.

வழக்கமாக சம்பந்தப்பட்ட அமைச்சர் குறிப்பிட்ட ஒரு சந்தைக்குச் சென்று, பத்திரிகையாளர்கள் படமெடுப்பதற்கு ஏதுவாக ஒரு பெரிய மீனை அல்லது கோழியை தூக்கிக் காண்பித்து, இதன் விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது. எனவே விலை உயராது என அங்கேயே அறிவிப்பு செய்வார். அவருடைய வேலை அதோடு நிறைவுபெறும்.

ஆனால் அமைச்சர் அவ்விடத்தை விட்டு நகர்ந்த மறுகணமே ‘பழைய குருடி கதவைத் திறடி’ நிலைதான் எனும் விவரம் எல்லாருக்குமே தெரியும்.

நொந்துப்போகும் பயனீட்டாளர்கள் அமைச்சரை அழைத்து புகார் செய்யவா முடியும்? அதற்கான சாத்தியமே இருக்காது. அவர் மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுவார். இதுதான் யதார்த்தம்.

காலங்காலமாக இதுதானே நடந்து வருகிறது! இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை.

ஆக ஏற்கெனவே அதிகரித்துள்ள விலைகளை குறைப்பதற்கும் எதிர்வரும் மாதங்களில் மேலும் விலைவாசி உயராமல் இருப்பதற்கும் அரசாங்கம் எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

அதே வேளையில் அரசாங்கம் இதற்கும் பாராமுகமாக இருந்தால் எத்தரப்பினரும் மகிழ்ச்சியடைய வாய்ப்பில்லை.

சம்பள உயர்வினால் வாழ்க்கைத் தரம் உயரவில்லையென்றால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?