ஜனநாயகத்தை அற்புதமான அரசியல் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்தக் கோட்பாடு மக்களின் உரிமையை, அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்பது உண்மை. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது சில கட்டுப்பாடுகள் இருப்பதைக் காணலாம்.
அதுபோலவே மக்களின் அதிகாரம் எனும்போது அது என்ன, அது எப்படி இயக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழும். மக்களின் உரிமை தெளிவாக விளக்கப்பட்டிருந்தாலும் மக்களின் அதிகாரம் வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்பார்கள். அதாவது மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தில் எந்தக் குறையும் காண முடியாது. ஆனால், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தப் பின் மக்களின் ஆட்சி அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
எனவே, தற்காலிகமான மக்கள் தங்களின் அதிகாரத்தைத் தங்களின் நம்பிக்கைக்கு உட்பட்டவர்களுக்கு மாற்றப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு ஆயுள் ஐந்தாண்டுகள் தான்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொது தேர்தலின் போது ஆயுள் நீட்டிக்கப்படலாம். ஆனால், உரிமைகள் எனும்போது அவற்றிற்குக் காலக்கெடு கிடையாது; மாறாக, புதுப்புது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
பேச்சுரிமை இருந்தாலும் அளவற்ற கட்டுப்பாடுகள் அதன் சிறப்பை, முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும். அப்படி நிகழும்போது பேச்சுரிமை அரசமைப்புச் சட்டத்தை அலங்கரிக்கும் ஆபரணமாக மாறிவிடுகிறது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
வாக்களிக்கும் உரிமை பலமாக இருக்கும் போது “வாக்கு உரிமை” அதாவது “பேச்சுரிமை” பலமாக இருக்க வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோருவதில் பிசகு காண கூடாது என்கின்ற வாதத்தை மதித்தாக வேண்டும்.
மனிதன் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். அந்த ஆற்றலை அவன் பிறப்பிலிருந்தே பெற்றவன். அந்தச் சிந்தனையில் இருந்து தோன்றும் கருவூலங்களை வெளிப்படுத்த உதவுவது பேசும் ஆற்றல். இந்தப் பேசும் ஆற்றலைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு வேண்டுமென நினைப்போரிடம் விளக்கம் கோரினால் கிடைப்பது வெறும் மழுப்பல்தான்.
சட்ட ஒழுங்கு, இன, சமய அன்னியோன்யம் போன்றவை பாதிப்படையக் கூடாது என்று மழுப்பதுவது அரசியல் நாகரீகமாகவே வளர்ந்துவிட்டதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வலுவடைந்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு உட்பட்டதா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முறையா?
கிடையவே கிடையாது! ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையே பேச்சுரிமைதான். அது செம்மையாகப் பயன்படுத்தினால் மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தலாம். அரசும் பலனடையலாம். வெறும் கட்டுப்பாடானது மக்களின் உண்மை மனநிலையைப் பொசுக்கும் தரத்தை அடையலாம். அது வேதனை மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தலாம்.
பொதுவுடைமை தத்துவம், சர்வதிகார ஆட்சி யாவும் மக்களின் வேட்கையைப் புரிந்து கொள்ளும் தராதரத்தைப் பெறாததால் அவை நீடிக்கவில்லை. பொய்மை, அவதூறான கருத்துக்கள், இன, மத துவேஷங்கள் யாவும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் ஜனநாயகம் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லைதான்.
ஆனால், எல்லோரும் சட்டத்தின் முன் சமம் எனும்போது என்னைத் தூற்றுபவரை, என் இனத்தைத் தூற்றுபவரை, என் சமயத்தைத் தூற்றுபவரை நான் சகித்துக்கொள்ள வேண்டும் – அது நியாயமாகக் கருதப்படுகிறது. அதற்கு அடிப்படை என்ன? பகுத்தறிவாளர்களின் கருத்து மூட நம்பிக்கையைப் புறக்கணிக்க எடுக்கப்படும் சீர்த்திருத்த நடவடிக்கை என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, என் சிந்தனையை, என் மனித உரிமையை, சுதந்திரத்தைக் கழற்றி எறித்துவிட்டு பகுத்தறிவாளர் பாசறைக்கு மாற வேண்டும். அதுதான் நான் செய்ய வேண்டும். என் கருத்து எவ்வளவு நியாயமானதாக இருப்பினும் புறக்கணிக்கப்பட வேண்டியதாகும். சட்டம் இவ்வாறு சொல்லவில்லையே.
என்னைத் துன்புறுத்தும் எந்தச் செயலும், சொல்லும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நடவடிக்கை தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றல்லவா சொல்லுகிறது. நான் கேட்கும் நியாயம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எனவே, குற்றம்! நான் விமர்சிக்கப்படும் போது என் சிந்தனையை, என் பேச்சு மதிப்பளிக்காமல் என்னைக் குற்றப்படுத்துவது மட்டும்தான் நோக்கம் என்றால் அது ஜனநாயகம் அல்ல! அது ஒருதலைபட்ச அகங்காரப் போக்கு என்று சொல்லுவதில் என்ன தவறு?
ஜனநாயகம் சம உரிமைகளை, மனித உரிமைகளை மட்டும் பாதுகாக்கவில்லை. அது எல்லா மக்களுக்கும் சம நீதி, சம பொருளாதார வாழ்வு நீதி, சமுதாய நீதி, சம கல்வி நீதி எனப் பல நீதிகளைப் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது.
ஜனநாயகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு தேவை. உள்ளார், இல்லார் யாவரும் ஜனநாயகத்தில் நீதி பெறும் நோக்கோடு அரசு செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பது நியாயம். அந்த நியாயத்தை எல்லோரும் உணர்ந்து செயல்பட்டால் நாட்டின் செழிப்பான எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். நம் மூதாதையர் வளர்த்த அரசியல் கலாச்சாரம் பொறுமையை வெளிப்படுத்தியது.
இன்று பொறுமைக்கு மதிப்பளிக்கும் குணம் தேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுவும் ஜனநாயகம் அல்ல. குறுகிய தேசிய மனப்பான்மை கொடுந் தேசியத்திற்கு (ஃபாசிஸம்) இடமளித்து அராஜகத்திற்குத் துணை நிற்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இத்தகைய கொடுமையான அரசியலை விரும்ப மாட்டார்கள். கொடுந் தேசியத்தின் ஆயுள் கம்மி என்பதும் புரிந்து கொண்டால் நல்லதே.
பேச்சுரிமை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை வலுவடையக் காரணம், பேச்சுரிமையை எந்தப் பிரச்சினையினாலும் பேசித் தீர்வு காண முற்படுவர். பேச்சுரிமையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அடக்கி ஆளுவதில் மட்டும்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பேச்சுரிமைக்கு மதிப்பளிப்பது ஜனநாயகம். பேச்சுரிமையை மறுப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது ஃபாஸிசம்.