இராகவன் கருப்பையா – மலாக்கா, ஜாசினில் அமைந்துள்ள ‘ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி’யின் வரலாறு அப்பகுதியில் உள்ள நம் சமூகத்தினரைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்த அப்பள்ளியின் கட்டுமானம் தொடர்பான வேலைகளை 3 வெவ்வேறு அரசாங்கங்களுடன் விடாப்பிடியாகப் போராடி வெற்றி கண்டுள்ளார் அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகன் இராஜப்பன்.
கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு வரையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு மருத்துவமனையாக விளங்கிய அக்கட்டிடம் அதன் பிறகுதான் பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டது.
பிறகு 1960ஆம் ஆண்டு வாக்கில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பக்கத்திலேயே சிறியதொரு இணைக் கட்டிடம் எழுப்பப்பட்டது.
எனினும் 70ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் காலையில் தமிழ்ப்பள்ளியாகவும் மதியத்திற்குப் பிறகு சீனப் பள்ளியாகவும் அக்கட்டிடம் விளங்கியது.
இருப்பினும் 1990ஆம் ஆண்டில் சீனப் பள்ளி அதன் சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாகிச் சென்ற பிறகு கனிசமான அளவில் தோட்டத் தொழிலாளர்களும் நகர் புறங்களுக்கு குடிபெயர்ந்ததால் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இருந்த போதிலும் ஏறத்தாழ 100 மாணவர்களைக் கொண்டு செயல்பட்ட அப்பள்ளியின் 80 ஆண்டுகாலக் கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் மோசமாக இருந்தது.
பிறகு 2011ஆம் ஆண்டில் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அப்பள்ளிக்கு விமோசனம் பிறக்கப் போவதைப் போலான ஒரு தோற்றம் உருவானது.
ஏனெனில் அம்னோ சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் நேரடியாக பள்ளிக்கு வந்து “உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் கேட்டு நம்பிக்கையூட்டியுள்ளார்.
“எங்களுடைய பிள்ளைகளுக்கு புதிய கூட்டிடம் ஒன்றை கட்டிக் கொடுங்கள்” எனும் கோரிக்கைக்கு “சரி” என்று சொல்லிச் சென்ற அவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்தப் பக்கமே தலைகாட்டவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தலைமையேற்ற முருகன் இப்பிரச்சனையை கையிலெடுத்து மேலிடத்திற்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து மாநில அரசு தாமான் ஆயர் மெர்பாவ் பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
எனினும் கட்டிடம் எழுப்புவதற்கான எவ்வித முன்னெடுப்பும் இல்லாததால் அதுகுறித்து பத்திரிகைகளிடம் தாங்கள் முறையிட்டதாக முருகன் குறிப்பிட்டார்.
பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் பார்த்து அங்கு விரைந்த அப்போதைய கல்வித் துறை துணையமைச்சர் கமலநாதன், 2018ஆம் ஆண்டு வாக்கில் கட்டிடம் தயாராகிவிடும் என்று உறுதியளித்துச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஏனெனில் அவருடைய வாக்குறுதியும் கூட வெறும் புஸ்வானமானது.
தனது விடா முயற்சியிலிருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்காத முருகன், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளித்தவணை தொடங்குவதற்கு முதல்நாள் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒன்று திரட்டி பள்ளி வளாகத்திற்கு வெளியே அமைதி மறியலில் ஈடுபட்டார்.
கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் பணித்த போதிலும் “சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் இங்கு வந்து கடிதம் வழியாக எங்களுக்கு உறுதியளித்தால்தான் நாங்கள் இந்த அமைதி மறியலை கைவிடுவோம்” என முருகன் திட்டவட்டமாக் கூறிவிட்டார்.
மாலை 5 மணி போல அங்கு வந்த அவ்விரு அரசியல்வாதிகளும் 3 நாள்கள் கழித்து புத்ரா ஜெயாவுக்கு வருமாறு 5 பிரதிநிதிகளை அழைத்தனர்.
புத்ரா ஜெயாவில் மற்றொரு ‘டிராமா’வை அரங்கேற்றிய அவர்கள், “பள்ளியைக் கட்டுவதற்கு நாங்கள் அனுமதி வழங்கிவிட்டோம். ஜாசின் நகராண்மைக் கழகமும் தீயணைப்பு இலாகாவும் நீர்பாசன இலாகாவும் அனுமதி வழங்கவில்லை” என்று பழியை திசை திருப்பினர்.
ஆனால் ஜாசின் திரும்பிய முருகனும் அவருடைய செயலவை உறுப்பினர்களும் நகராண்மைக் கழகத்தை அனுகிய போது, “நாங்கள் கடந்த ஆண்டே அனுமதி வழங்கிவிட்டோம்” என அங்குள்ள அதிகாரிகள் உண்மையை போட்டு உடைத்துள்ளார்கள்.
அதே காலக் கட்டத்தில் கமலநாதனும் ஒரு குட்டி நாடகத்தை அரங்கேற்றி “4.6 மில்லியன் ரிங்கிட் செலவில் பள்ளியைக் கட்டவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே அந்த ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து எல்லாமே நிலை குத்தியது என்றார் முருகன்.
பக்காத்தான் அரசாங்கத்தின் நிதியமைச்சர் லிம் குவான் எங் நிறைய துறைகளுக்கான நிதியை முடக்கியதால் நிலைமை மேலும் மோசமானது.
இருந்தபோதிலும் கடுகளவும் மனம் தளராத முருகன் மீண்டும் புத்ரா ஜெயா சென்று அப்போதைய பிரதமர் மகாதீரை சந்திக்க முற்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் மத்திய அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசிடம் ஒப்படைத்தது. மாநில அரசாங்கம் அதன் பங்குக்கு 1.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி, கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான வேலைகளை தொடங்கவிருந்த சமயத்தில் மற்றொரு இடி விழுந்தது.
சுமார் 22 மாதங்களில் அந்த அரசாங்கமும் கவிழ்ந்ததால் கட்டிடம் எழுவதில் மீண்டும் தடங்கல் ஏற்பட்டது. எனினும் இந்த சோதனையையும் எதிர்கொள்வதற்கு முருகன் திட்டம் தீட்டினார்.
புதிய அரசாங்கத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்த அவர், நிலமும் நிதியும் இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு முறையிட்டார்.
அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் ஒரு வழியாகக் கட்டி முடிக்கப்பட்ட அப்பள்ளியில் தற்போது சுமார் 100 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
நஜிப் தலைமையிலான பாரிசான் அரசாங்கம் நிலத்தை வழங்க, மகாதீர் ஆட்சியிலான பக்காத்தான் அரசு நிதியை ஒதுக்க, முஹிடினின் பெரிக்காத்தான் அரசு பள்ளியை கட்டி முடித்தது.
தங்களுக்கு வாக்களித்து பதவியில் அமரச்செய்த மக்களின் நலனை கிஞ்சிற்றும் கவனத்தில் கொள்ளாமல் பதவி மோகத்தில் அலையும் அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கினால் பள்ளிப் பிள்ளைகள் கூட எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.
நம் சமூகத்தை பிரதிநிதிப்பதாக பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் கூட இந்த பள்ளிக்கூடத்திற்கு உதவாதது வருந்தத்தக்க ஒன்று. தங்களுடைய முயற்சிகளுக்கு அவர்கள் கொஞ்சமாவது ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என முருகன் கூறினார்.
அப்பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லாததால் அதற்கான முயற்சிகளை தாங்கள் தற்போது முடுக்கிவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சங்கத்தின் ஏற்பாட்டில் எல்லா அரைகளிலும் குளிரூட்டியும் 4 அறைகளில் கற்றல் கற்பித்தலுக்கான அதி நவீன தொலைக்காட்சிப் பெட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்று விவரித்தார்.
தனது தாய் தொடங்கி தானும் தனது பிள்ளைகளுமாக மொத்தம் 3 தலைமுறையைச் சேர்ந்த தனது குடும்பத்தினர் அப்பள்ளியில் பயின்ற வரலாறு உள்ளது என்றார் அவர்.