இராகவன் கருப்பையா – சில தினங்களுக்கு முன் நடந்தேறிய பாஸ் கட்சியின் பொதுப் பேரவையில் பேசப்பட்ட விஷயங்களில் சில, வழக்கம் போல் மதம் -இனம் என்ற அடையாளம் வழி நம்மை ஒரளவு புண்படுத்தினாலும் பகிரப்பட்ட இதர பல கருத்துகள் சற்று வேடிக்கையாகத்தான் இருந்தன.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத வகையில் சற்று அதிகமானத் தொகுதிகளைக் கைப்பற்றிய அக்கட்சி எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலிலும் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்ததிலிருந்து அரசாங்கத்தைக் கைப்பற்றுவது பற்றி அவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
அந்த இஸ்லாமிய கட்சிக்கு மலாய்க்காரர்கள் வழங்கி வரும் ஆதரவை பார்க்கப் போனால் அதற்கான சாத்தியம் உண்டு என்பதை நாம் நிராகரிக்க முடியாது.
இத்தகைய சூழ்நிலையில் மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவை ஈர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தங்களுடைய பொதுப் பேரவையில் அவர்கள் கருத்து பரிமாற்றம் செய்தனர்.
பிற இனத்தவரை மணமுடித்தால் ஒவ்வொரு திருமணத்தின் வழியும் நூற்றுக்கணக்கான புதிய வாக்குகளைப் பெற முடியும் என்று யோசனை கூறுகிறார்கள்.
பாஸ் கட்சி உறுப்பினர்களை திருமணம் செய்வதற்கு நம் சமூகத்தைச் சார்ந்த இளம் பெண்களும் இளைஞர்களும் அப்படியா ஆவலோடு வரிசை பிடித்து நிற்கின்றனர்?
இப்படி பேசுவது விவேகமற்ற, கோமாலித்தனமான ஒன்று என்பது மட்டுமின்றி பிற இனத்தவர் மீதான தரம் தாழ்த்திய சிந்தனையாகவும் உள்ளது.
அந்தக் கட்சி ஆட்சி செய்யும் பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு, ஆகிய 4 மாநிலங்களில் ஒன்றன் பின் ஒன்றாத அவர்கள் அமல்படுத்தி வரும் சமய சார்புடைய சட்ட விதிகளைப் பார்த்தாலே நமக்கு ‘அலர்ஜி’தான் ஏற்படுகிறது.
இந்நிலையில், எந்த தைரியத்தில் நம் சமூகத்தைச் சார்ந்த இளையோரைக் கவருவதற்கு அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர் என்று தெரியவில்லை.
சமய தீவிரவாதப் போக்கு அவர்களுடைய கட்சியின் அடையாளம் எனும் போதிலும் பிற இனத்தவரை மதித்து அவர்களை புண்படுத்தாமல் இருந்தாலே அக்கட்சியின் மீது நமக்கு பதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
பிற இனத்தவரின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் அரசியலமைப்புக்கு ஏற்ப எல்லாருக்கும் எல்லாத் துறைகளிலும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் துணிச்சல் வேண்டும்.
யாரும் ஒதுக்கப்படமாட்டார்கள், புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்று உரக்கக் கூறுவதற்கான தைரியம் வேண்டும். அதனை நடைமுறைபடுத்துவதற்கான வழித்தடத்தை அவர்கள் காண்பிக்க வேண்டும்.
தமிழ், சீன மொழிகளைக் கற்றுதான் நமது கவனத்தை அவர்கள் ஈர்க்க வேண்டும் என்பதற்கு அவசியமே இல்லை.
அதோடு பிற இனத்தவரை திருமணம் செய்தால் தேர்தலின் போது அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்பதெல்லம் வெறும் சில்லறைத்தனமான சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும்.