திருமணத்தின் போது குத்தாட்டம் ஆடுவது பண்பாடா?

இராகவன் கருப்பையா – நம் சமூகத்தின் திருமண சடங்கு சம்பிரதாயங்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் தனித்துவம் வாய்ந்த ஒரு கலாச்சாரமாகும்.

திருமண வைபவங்கள் கோயில்களில் நடந்தாலும் மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் வாழ்வின் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் நமக்கே உரிய அந்த கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை.

எனினும் அண்மைய காலமாமாக ஒரு சில திருமண வைபவங்களில் நடைபெறும் கலாச்சார சீரழிவு நம் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பகுதியினருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்து வருகிறது.

பொதுவாக மணமேடையை நோக்கி நடந்துவரும் மண மக்கள்  எவ்விதமான ஆரவாரமுமின்றி சகல கலையம்சங்களையும் தாங்கி அமைதியாகவே நடந்து வருவார்கள்.

ஆனால் சமீப காலமாக ஒரு சில மணப்பெண்கள் மற்றும் மாப்பிள்ளைகள்  மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் குத்தாட்டம் போட்டவாறு மணமேடையை நோக்கி ஆடிக்கொண்டு வருவது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

நவீனமயம் எனும் பெயரில் அரங்கேற்றப்படும் இத்தகைய கலாச்சார சீர்குலைவு நம் சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.

“இது எங்கள் வீட்டுத் திருமணம், நாங்கள் எப்படி வேண்டுமானாலும் வருவோம், ஆடுவோம், பாடுவோம்” என அவர்கள் வாதம் செய்யலாம். ஆனால் நம் கலாச்சாரமும் பாரம்பரியமும் அதில் ஒன்றரக் கலந்துள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

இருபது ஆண்டுகளுக்கு முன் நம் மணப்பெண்கள் நடத்து வந்ததைப் போல நாணத்துடன் தலைகுனிந்து அன்ன நடை போட்டு வர வேண்டும் என அவசியமில்லை. அப்படியொரு எதிர்பார்ப்பும் இல்லை.

ஆனால் குறைந்த பட்சம் அமர்க்களமில்லாமல் அமைதியாக நடந்துவர வேண்டும் என்பதுவே பொதுவான எதிர்பார்ப்பாகும்.

மணப்பெண்ணை அழைத்து வரும் அவருடையத் தோழிகளோ உறவுப் பெண்களோ ஆடிக் கொண்டு வருவதில் தவறில்லை.

ஆனால் மணமேடைக் காணவிருக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் நம் கலாச்சாரத்திற்குட்பட்டு ஒரு வரையறை உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

இது போன்ற அநியாயங்கள் கோயில் திருமணங்களின் போது நடைபெறுவதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் மண்டபங்களில்தான் இப்படிபட்ட குத்தாட்டங்களெல்லாம் அரங்கேறுகின்றன.

ஆக நவீன மயம் எனும் பெயரில் வழக்கங்களையும் வழிமுறைகளையும் எவ்வளவுதான் வளைத்தாலும் நமது கலாச்சாரம் கொஞ்சமும் சிதறாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.