இராகவன் கருப்பையா – நம் நாட்டின் அரசியல் அரங்கில் காணப்படும் வினோதமான ஒரு சூழல் என்னவென்றால் மதத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி, அவற்றையே ஏணிப் படிகளாக பயன்படுத்தி உச்சத்தைய அடைய எண்ணும் அரசியல்வாதிகளின் போக்குதான்.
குறிப்பாக இளம் மலாய் அரசியல்வாதிகள் காலங்காலமாக இவ்விவகாரத்தையே கையிலெடுத்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இத்தகைய போக்கு தற்போதைய காலக்கட்டத்தில் எந்த அளவுக்கு ஆக்ககரமாக உள்ளது என்பது ஒரு கேள்விக் குறிதான்.
கிராமப் புறங்களில் உள்ள சாமானிய மக்களிடையே வேண்டுமானால் இவர்களுடைய ஜம்பம் பலிக்கக் கூடும். ஆனால் நகர்ப் புறங்களில் வசிப்பவர்களில் எத்தனை பேர் இவர்களுடைய கோமாளித் தனத்தை அவ்வளவாக ஏற்றுக் கொள்கின்றனர் என்று தெரியவில்லை.
பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக இப்படித்தான் அரசியல் நடத்துகின்றனர். மற்ற இனத்தைப் பற்றியோ சமயத்தைப் பற்றியோ அவர்கள் அவ்வளவாக பொருட்படுத்துவது இல்லை.
அக்கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி அதன் முத்த அரசியல்வாதிகளும் கூட அப்படிதான். இந்நாட்டில் மற்ற இனத்தவர் இருப்பதை முற்றாக மறந்துவிட்டதைப் போல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
எனினும் அம்னோவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அதன் இளைஞர் பிரிவில் இருப்பவர்கள் தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு சமயத்தையும் இனத்தையும் பிரதான ஆயுதமாக பயன்படுத்தும் வழக்கம் பல்லாண்டுகளாக இருந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளை முன்னிறுத்தி, பிற இனத்தையும் சமயத்தையும் தரம் தாழ்த்தி பேசினால், தங்களுடைய வட்டத்தில் ‘ஹீரோ’ அந்தஸ்தைப் பெற முடியும் எனும் ஒரு நம்பிக்கையில் வீர வசனம் பேசுவார்கள்.
பெரும்பாலும் அவர்களுடைய ஆண்டுப் பேரவையின் போது பேராளர்களின் முன்னிலையில்தான் இப்படி ‘ஹீரோ’க்களாக அவர்கள் காட்சியளிக்க விரும்புவார்கள்.
கடந்த 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையின் போது அப்போதைய இளைஞர் தலைவர் ஹிஷாமுடின் மலாய்க்காரர்களின் பாரம்பரிய ஆயுதமான ‘கிரிஸ்’ ஒன்றை மிரட்டலானத் தோரணையில் உயர்த்திக் காட்டியது நமக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
மூன்று ஆண்டுகள் கழித்து 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாதாரின் வாக்குகள் அம்னோவுக்கு கனிசமான அளவு குறைந்ததைத் தொடர்ந்து தனது செயலுக்கு அவர் பொது மன்னிப்புக் கேட்டதும் நாம் அறிந்ததே.
அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து இளைஞர் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்ற கைரி ஜமாலுடினும் அசிராஃப் வாஜ்டியும் தீவிரவாதப் போக்கை அவ்வளவாகக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் அப்பிரிவின் தற்போதையத் தலைவரான அக்மால் சாலே வரம்பு மீறி முரட்டுத்தனமாகப் பேசித் திரிவது மலாய்க்காரர்களுக்கே எரிச்சலூட்டுவதாகத் தெரிகிறது.
அண்மைய மாதங்களாக, கே.கே.மார்ட் கடைகளுக்கு எதிரான புறக்கணிப்பு, மாரா கல்லூரியில் மலாய்க்காரர் அல்லாதாருக்கான இட ஒதுக்கீடு, தமிழ் சீனப்பள்ளிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும், போன்ற சர்ச்சைகளை கிளப்பிய அவர் ஜ.செ.க.வின் உதவித் தலைவர் திரேசா கோக்கை தரக் குறைவாகவும் விமர்சித்தது பெரும்பாலான மலேசியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் ஹிஷாமுடினைப் போல இவரும் ஒரு வாளை உயர்த்தி அக்காட்சியை படமெடுத்து பிறரை மிரட்டும் தோரணையில் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இச்செயலையும் கூட பலர் கண்டித்தார்களேத் தவிர யாரும் பாராட்டி வரவேற்றதாகத் தெரியவில்லை.
தனது இனத்தையும் சமயத்தையும் தாய் நாட்டையும் உயிரைக் கொடுத்தாவது தற்காக்கப் போவதாக அவர் பேசிய வீரவசனம் எத்தனை பேருக்கு ஏற்புடையதாக அமைந்தது என்றும் தெரியவில்லை.
ஆக அரசியலில் முண்டியடித்து முன்னே நிற்க வேண்டும் எனும் தீராத வேட்கையில் காலம் கடந்த பழைய யுக்திகளை இவரைப் போன்றவர்கள் கையாள்வது அநாகரிகமாவே தோன்றுகிறது!