அஸ்தமயமாகும் அரசியலில் சிக்கிய கோபிந் சிங்

இராகவன் கருப்பையா- ஒர் எதிர்கட்சி அரசியல்வாதியாக இருந்த காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்துக் கொண்டிருந்த ஜ.செ.க. துணைத் தலைவர் கோபிந் சிங்ஙின் அரசியல் வாழ்க்கை தற்போது இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தை நோக்கி பயணிப்பதைப் போல் தெரிகிறது.

இலக்கவியல் அமைச்சராக தற்போது அவர் பொறுப்பு வகிக்கும் போதிலும் கட்சியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில் இந்தப் பதவியும் கூட அவருக்கு நிரந்தரம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தேசிய நிலையில் கோபிந் சிங் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார். எனினும் அண்மையில் நடைபெற்ற கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலின் முடிவுகள்தான் அவருடைய அரசியல் எதிர்காலத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.

மாநிலத் தலைவராக இருந்த அவர், முதல் 15 இடங்களுக்குத் தேர்வு பெறாமல் மோசமானத் தோல்வியைத் தழுவியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்வலைகளைத் தூண்டியுள்ளது.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான பாப்பா ராயுடு உள்பட பல ‘கத்துக்குட்டிகள்’ கூட கோபிந் சிங்ஙை முந்திக் கொண்டு மகத்தான வெற்றிகளை பதிவு செய்துள்ளது யாரும் எதிர்பாராத வியக்கத்தக்க ஒன்றுதான்.

அவருடைய இந்தப் பின்னடைவுக்கு  ஜ.செ.க. வட்டாரத்தில்  பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் பிரதானமாக இருப்பது அவருக்கு அடிமட்ட ஆதரவு இல்லாமை என்று பேசப்படுகிறது.

தனது தந்தை, மறைந்த கர்ப்பால் சிங் கட்சியின் உச்சத்தில் இருந்த போதே அரசியலில் நுழைந்து கிடுகிடுவென உயர்ந்து, ‘கவனிக்கப்பட வேண்டிய’ ஒரு அரசியல்வாதியாக தடம் பதித்த கோபிந் சிங், தனக்கென அடிமட்ட உறுப்பினர்களின் அபிமானத்தை சம்பாதிக்கத் தவறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

தேசிய முன்னணி ஆட்சியின் போது, ஒரு எதிர்கட்சி உறுப்பினராக  நாடாளுமன்றத்தில் அவருடைய விவாதங்கள் மிகவும் சுவாரசியமாகவும் அனல் பறக்கும் வகையிலும் இருந்தது ஏதோ உண்மைதான். ஆனால் தற்போது ஆளும் கட்சி உறுப்பினர் எனும் வகையில் அதற்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.

எனினும் அடிமட்ட கட்சி உறுப்பினர்களை கோபிந் சிங் அவ்வளவாக பொருள்படுத்துவதில்லை எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. உயர்மட்டத் தலைவர்களின் செல்வாக்கில்தான் இதுநாள் வரையில் கட்சித் தேர்தல்களில் அவர் ஜெயித்து வந்தார் என ஜ.செ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத் தேர்தல்களின் போது அந்த உயர்மட்டத் தலைவர்கள் ஏதோ காரணங்களுக்காக அவரை கைவிட்டுள்ளதைப் போல் தோன்றுகிறது.

சிலாங்கூர் மாநிலத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் மாநில ரீதியில் சக்திமிக்க, செல்வாக்குடைய ஒரு தலைவராக கோபிந் சிங் திகழ்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநிலத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். கிளேங் தொகுதியில் அதன் முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தொடர்ந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததற்கும் இவர்தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக இப்படிப்பட்ட அதிகாரத்தையெல்லாம் இழந்த நிலையில் அரசியல் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிட்டதால் அவருடைய அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

ஜ.செ.க.வில் சீனர்களின் ஆதிக்கம்தான் அதிகம் என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி.’ அது ஒரு இனவாதக் கட்சி இல்லை என துணிச்சலாக நாம் சொல்லிவிடவும் முடியாது.

ஏனெனில் அரசியலைப் பொருத்த வரையில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ‘அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்,’ எனும் நிலைதான் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறத்தாழ இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

அந்த சமயத்தில் கோபிந் சிங்ஙின் பதவி பறிக்கப்பட்டால் வேறொரு இந்தியர் நியமிக்கப்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாறாக இந்தியர் ஒருவர் இல்லாத அமைச்சரவை அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அதோடு ‘இந்தியர்’ என்ற வகையில் இன அடிப்ப்டையில் ஒருவர் தேவையா? அப்படி தேவவை என்றால் அதனால் என்ன நன்மை என்ற மீளாவ்வும் தேவை.