இந்தியர்களுக்கான ஏய்ம்ஸ்-இல் இந்திய மாணவர்கள் குறைவு

இராகவன்  கருப்பையா- நம் சமூகத்தைச் சார்ந்த இளையோரின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே விசேஷமாக நிறுவப்பட்ட ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் (ஆசிய மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) தற்போது அங்கு பயிலும் 3,500க்கும் அதிகமானவர்களில்   60 விழுக்காட்டுக்கும் மேல் சீன மாணவர்கள் பயில்கின்றனர்.

இதற்கு யார் காரணம்? நம் இனத்தைச் சார்ந்த எண்ணற்ற மாணவர்கள் ஏன் இன்னமும் பல்கலைக் கழகங்களில் இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்?

இது போன்ற வினாக்களுக்குத் தெளிவான விளக்கங்களைப் பெறுவதற்கு துல்லியமான மீளாய்வுக்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இந்திய சமூகம் வாரி வாரி வழங்கிய நன்கொடைகளைக் கொண்டு சுமார் 21 ஆண்டுகளுக்கு முன் ம.இ.கா. இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் உள்பட ஏறத்தாழ 32 துறைகளில் 3,500 மாணவர்களுக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பெறுவதற்கான வசதிகளை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

அதிக அளவிலான இந்திய பட்டதாரிகளை உருவாக்குவதற்கான தூர நோக்கத்தோடு இந்த கல்விக் கழகம் நிறுவப்பட்டது.

ஆனால் தற்போது நம் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை விட சீன சமூகத்தினர்தான் அதிக அளவில் அங்கு பயன் பெறுகின்றனர் என்பது நமக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக உள்ளது.

மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 200 இடங்களைக் கூட போதுமான அளவில் நம் பிள்ளைகள் நிரப்பவில்லை என ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

தகுதி பெறும் மாணவர்களுக்கு கடனுதவியும் உபகாரச் சம்பளமும் கூட வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

பொருளாதார பலம் கொண்ட சீன சமூகத்தினரை விட, கடனுதவிக்கான நம் மாணவர்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இத்தகைய எதிர்பார்ப்புகளையும் நிலவக் கூடிய இதர குறைபாடுகளையும் மீளாய்வு செய்யும் போது, கடனுதவி மற்றும் உபகாரச் சம்பளம் வழங்குவதில் நியாயமான, வெளிப்படைத்தன்மை இருக்கிறதா என்பதை ஆராய்வது அவசியமாகும்.

கடனுதவிகளையும் உபகாரச் சம்பளங்கையும் பெறுவதற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மிகவும் கடுமையாக வைத்திருந்தால் கூட அதிக அளவிலான நம் மாணவர்கள் பயனடைய வாய்பில்லாமல் போகும்.

ஏனெனில் இத்தகைய அனுகூலங்களைப் பெறுவது சுலபம் எனும் சூழலை சித்தரிப்பதைப்  போலான காணொளிகளை சில அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக கடந்த காலங்களில் தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.

எனவே நம் சமூகத்தினரின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, அதிகமான இந்திய மாணவர்கள் பயனடையும் வகையிலான சூழலை உருவாக்குவதற்கான வழித்தடத்தை அமைத்துக் கொடுப்பதும் நிர்வாகத்தின் கடப்பாடாகும்.

பொருளாதாரச் சுமையையும் தாண்டி, கல்விக்காக அள்ளிக் கொடுத்த நம் சமூகத்தினரின் சந்ததியினர் அதிக அளவில் பயனடையாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்தான்.