இராகவன் கருப்பையா- கடந்த 2 வாரங்களாக சர்வதேச நிலையில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து, பட்டித் தொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டு வருவது இரு முக்கியமான விஷயங்களாகும்.
அதாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல நாடுகளுக்கு எதிராக விதித்துள்ள ‘காப்பு வரி,’ மற்றும் ‘டீப் சீக்'(DeepSeek) எனப்படும் சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவுத் தளம், ஆகியவற்றினால் உலக மக்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கம், ஆகிய அம்சங்களே அனைத்துலக நிலையில் வெகு சன மக்களின் தற்போதைய விவாதங்களாக உள்ளன.
ஆனால் சில தரம் குன்றிய அரசியல்வாதிகளின் பிடியில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் மலேசியாவின் நிலை என்ன?
‘ஹெம்'(Ham) எனப்படும் இறைச்சி பதனிடும் வழிமுறை தொடர்பான வாக்குவாதங்கள் மற்றும் பாலஸ்தீனுக்கு உதவி செய்வது தொடர்பான பிரதமர் அன்வாரின் அறிவிப்பு மீதான விவாதங்கள், ஆகியவையே நம் நாட்டை தற்போது உலுக்கிக் கொண்டிருக்கும் விஷயங்களாகும்.
சர்வதேச நிலையில் அன்றாடம் துரித மாற்றம் கண்டு வரும் சூழல்களினால் ஏற்படக் கூடிய தாக்கத்தை எப்படி சமாளித்து மக்களுக்கு நற்சேவைகள் வழங்குவது என்பதைப் பற்றி இவர்கள் கொஞ்சம் கூட சிந்திப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, தங்களுடைய மதத்தை முன்னிறுத்தி, இவர்கள்தான் அதன் முதன்மைக் காவலர்கள் எனும் தோற்றத்தை உருவாக்கி, அதனால் அரசியல் ஆராயம் தேடுவதில்தான் முனைப்பாக உள்ளனர்.
‘கே.கே. மார்ட்,’ எனப்படும் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலணிகள் தொடர்பான சர்ச்சைகள் மாதக் கணக்கில் வழவழவென இழுக்கப்பட்டு, இப்போதுதான் சற்று ஓய்ந்துள்ளதைப் போல் தோன்றியது.
அதற்குள் இந்த ‘ஹேம்’ தொடர்பான விஷயத்தில் மீண்டும் அரசியல் நுழைக்கப்பட்டு, கட்சிகளிடையே சர்ச்சைகள் முற்றி, பாம்பும் கீரியும் கடித்துக் குதறிக் கொள்வதைப் போல வாதங்கள் பூதாகரமாகி, அப்பாவி மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டது.
கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையேதான் இந்த சொற்போர் நடைபெறுவதால் ‘ஒற்றுமை அரசாங்கத்தில் ஒற்றுமை எங்கே இருக்கிறது,’ என மக்கள் கேலியாகப் பார்க்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணும் எதிர்க்கட்சிகள், ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்,’ என்பதற்கு ஏற்ப,
யாருடன் யார் கூட்டணி சேர்வது என்பதைப் பற்றி அனுமானிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே பாலஸ்தீனுக்கு உதவி செய்வது குறித்த அன்வாரின் அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
துன்பத்தில் பரிதவிப்பவர்களுக்கு நாம் பரிவு காட்ட வேண்டும் என அன்வார் விளக்கம் சொல்ல முற்பட்ட போதிலும், ‘தனக்கு மிஞ்சியதுதானே தானம்,’ என்பது அவருக்குத் தெரியாதா என்ன, என்று முன்னாள் அமைச்சர் ரஃபிடா அஸிஸ் மற்றும் சமூக ஆர்வளர் சித்தி காசிம் உள்பட பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
உள்நாட்டில் நமக்கு எண்ணற்றப் பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன என்று அவர்கள் சுட்டிக் காட்டிய போது, அன்வார் அதற்களித்த விளக்கம் நமக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது.
“சில பிரச்சனைகளுக்கு கடைசி வரையில் நாம் தீர்வுகாண முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்,
நாட்டின் முதன்மை சக்திமிக்க பொறுப்பில் உள்ள பிரதமரால் ஒரு பிரச்சனையை தீர்க்க முடியவில்லையென்றால் யார்தான் அதற்கு தீர்வு காண்பது, எனும் கேள்வி எழவேச் செய்கிறது.
பாலஸ்தீனின் காஸாவில் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதியிலிருந்து 42 நாள்களுக்குத் தற்காலிக போர் நிறுத்தம்தான் அமுல்படுத்தப்பட்டுள்ளதேத் தவிர, போர் நிரந்தரமாக ஒரு முடிவுக்கு வராத பட்சத்தில் ஏன் இந்த அவசரம், எனும் கேள்வியும் கூட எழுகிறது.
ஆக, இவர்களெல்லாம் சில்லறைத்தனமான அரசியல் விவாதங்களில்தான் நம்மை மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறார்களேத் தவிர அறிவார்ந்த சிந்தனைக்குரிய விஷயங்களுக்கு நம்மை ஈட்டுச் செல்லாதது வருந்தத்தக்க ஒன்று.
இவர்களுடைய தரம்தாழ்ந்த போக்கானது, போட்டித்தன்மை வாய்ந்த உலகில் நம் நாட்டை மேலும் பின்நோக்கித்தான் இழுத்துச் செல்லும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.