ஹம்மாஸை துடைத்தொழிக்க அமெரிக்க அதிபர் வீயூகமோ?

இராகவன் கருப்பையா – அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன் செய்த ஒரு திடீர் அறிவிப்பு உலகை உலுக்கியது என்றால் அது மிகையில்லை.

கடந்த 15 மாதங்களாக கடுமையான போரினால் சீரழிந்துள்ள பாலஸ்தீனின் காஸா கரையை “அமெரிக்கா எடுத்துக் கொள்ளும்,” என அவர் செய்த அந்த அறிவிப்பை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

ஏறத்தாழ 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட காஸாவின் சுமார் 80 விழுக்காட்டுப் பகுதி இஸ்ரேலின் சரமாரியான குண்டு வீச்சால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது அனைத்துலக சமூகம் அறிந்த ஒன்றுதான்.

அதன் மக்கள் தொகையான 2.2 மில்லியன் பேரில் கிட்டதட்ட 50 ஆயிரம் பேர் போரில் மடிந்துள்ள நிலையில் மீதமுள்ளோரை தங்களுடைய நாடுகளில் மறு குடியேற்றம் செய்யுமாறு அண்டை நாடுகளான ஜோர்டானுக்கும் எகிப்திற்கும் கடந்த ஒரு வார காலமாக ட்ரம்ப் பரிந்துரை செய்து வருவகிறார்.

இந்த யோசனைக்கு நாலா பக்கமுமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணமாக இருக்கும் வேளையில், காஸா கரையை ‘மத்திய கிழக்கின் புகழ்பெற்றத் தளமாக’ தாம் மாற்றப் போவதாக அவர் அறிவித்தார்.

ஜோர்டானிடமும் எகிப்திடமும் ட்ரம்ப் செய்த பரிந்துரைக்கு இப்போதுதான் அர்த்தம் புரிகிறது. ‘சோழியின் குடுமி சும்மாவா ஆடும்?’

“இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல்களினால் காஸா முழுவதும் சீர்குலைந்துவிட்டது. நிறைய இடங்களில் ஏகப்பட்ட வெடிகுண்டுகள் இன்னுமும் வெடிக்காமல் கிடக்கின்றன. அதனால் அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை,” என்று எச்சரித்த ட்ரம்ப், அந்த இடத்தை மறுநிர்மாணம் செய்து சிறப்பானதொரு இடமாக உருவாக்கத் திட்டம் கொண்டுள்ளதாக விவரித்தார்.

காஸாவை பாலைவனமாக மாற்றுவது ஒருபுறமிருக்க, அங்குள்ள ஹம்மாஸ் பயங்கரவாதிகளை கூன்டோடு துடைத்தொழிப்பதே ட்ரம்ப்பின் பிரதான நோக்கம் என்று நமக்குத் தோன்றுகிறது.

ஹம்மாஸ் பயங்ரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரையில் போர் ஓயாது என இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாஹு பல முறை சூளுரைத்த போதிலும், 15 மாதங்கள் கடந்தும் அது சாத்தியப்படவில்லை.

இஸ்ரேலிடம் இருக்கும் பலத்திற்கு நொடிப் பொழுதில் அதனை நடத்திக் காட்டியிருக்க முடியும். ஏனெனில் காஸாவை ஆட்சி புரியும் ஹம்மாஸ் பயங்கரவாதிகளிடம் உருப்படியான ராணுவம் இல்லை.

ஆனால் 240 அப்பாவி இஸ்ரேலியர்களை அத்தீவிரவாதிகள்  பிணை பிடித்து சுரங்கத்திற்குள் மறைத்து வைத்திருப்பதால்தான் இஸ்ரேலின் தற்காப்புப் படை தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் தனது செல்வாக்கை ஊடுருவச் செய்வதற்கு ஹம்மாஸ் கும்பலை ஒரு பகடைகாயாக ஈரான் பயன்படுத்தி வருகிறது.

அதே போல அந்நாடு, மறைமுகமாக வழங்கிவரும் ஆதரவைக் கொண்டுதான் இந்த பயங்கரவாதிகளும் அட்டூழியங்களை புரிந்து வருகின்றனர்.

ஆக காஸாவை எடுத்துக் கொள்வதன் வழி ‘ஒரே கல்லில் 2 மாங்காய்களை’ அடிக்க ட்ரம்ப் வியூகம் வகுத்துள்ளதைப் போல்தான் தெரிகிறது.

இந்நடவடிக்கையின் வழி ஈரானின் கொட்டத்தையும் ஓரளவு அடக்க முடியும் என்று ட்ரம்ப் நம்புவதாகவே நமக்குத் தெளிவாக புலப்படுகிறது.

எது எப்படியாயினும் காஸா கரையில் கடந்த 15 மாதங்களாக ஒலித்துவரும் மரண ஓலங்களுக்கு ஒரு முடிவு பிறக்குமாயின், அவ்வட்டாரத்தின் அமைதிக்கு அது வழிக் கொணரும் என்று நம்பலாம்.