இராகவன் கருப்பையா – ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது ரதம் ஊர்வலமாகச் செல்லும் வழி நெடுகிலும் பல்வேறு விதமான உணவுகளுக்கும் பானங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
நம் நாட்டில் தைப்பூசம் கொண்டாடப்படும் கிட்டதட்ட எல்லா இடங்களிலும் இந்த இலவச உணவு வினியோகக் கலாச்சாரம் நிலவுவதை நம்மால் காண முடிகிறது.
இறை பக்தியையும் அன்பையும் பரிவையும் வெளிக்கொணரும் இந்த வழக்கம் மகிழ்ச்சிகரமான, வரவேற்கத்தக்க ஒன்று என்பதில் துளியளவும் ஐயமில்லை.
தலைநகர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம் பத்துமலைச் செல்லும் போதும், பிறகு தைப்பூசத்திற்கு மறுநாள் மீண்டும் தலைநகர் திருப்பும் வேளையிலும் வழங்கப்படும் இந்த உணவு வகைகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
தொடக்கத்தில் வெறும் குடிநீராக மட்டுமே இருந்த இந்த வழக்கம் நாளடைவில் ‘நெஸ்கஃபே,’ ‘மைலோ,’ ‘ஜுஸ்,’ போன்றவையோடு நின்றுவிடாமல் சன்னம் சன்னமாக இட்லி, தோசை, ‘மீஹூன்,’ இடியப்பம், பொட்டுக் கடலை, ‘நாசி லெமாக்,’ லடு மற்றும் புளிச்சோறு என நீண்ட பட்டியலாகிவிட்டது.
இந்த உணவு வகைகள் மிதமிஞ்சி, இலவசமாகக் கிடைப்பதால் அவற்றை வாங்கிக் கொண்டு விரயமாக்கும் ஒரு சிலருக்கு அவற்றின் மவுசு தெரியாமல் போய்விடுகிறது.
அவற்றுக்குப் பின்னால் பலருடைய கடுமையான உழைப்பு மறைந்திருப்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர் அல்லது உணர்வதில்லை. அன்பை அடையாளமாகக் கொண்டு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றை நன்றியுணர்வோடு பாராட்டத் தெரியாத இவர்களுடைய போக்கு வேதனைக்குரியதுதான்.
இதனைவிட வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால் உண்மையிலேயே தாகத்துடன் பரிதவிக்கும் பக்தர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் குடிநீர் கிடைப்பதில்லை.
அதாவது பத்துமலையின் 272 படிகளையும் கடந்து முருகன் சந்நிதானம் சென்றடைந்தவுடன் மிகுந்த களைப்புடன் இருக்கும் பக்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் குடிநீர் கொடுக்க அங்கு யாருமே இல்லை.
அத்தனை படிகளையும் ஏறுவதற்கே சிறமப்படும் பலர், குறிப்பாக முதியோர், தண்ணீர் போத்தல்களையும் சுமந்துச் செல்வது எளிதான காரியமில்லை.
குடிநீரையும் குளிர்பானங்களையும் விற்பனை செய்யும் கடையொன்று அங்கு உள்ளது. ஆனால் அவற்றின் விலையோ வரம்பு மீறி உச்சத்தைத் தொட்ட நிலையில் இருந்தது. அந்தக் கடை தேவஸ்தானத்திற்கு சொந்தமானதா அல்லது தனியார் உடமையா தெரியவில்லை.
தொண்டை வரண்ட நிலையில் முருகன் சந்நிதானததில் காலடி எடுத்து வைக்கும் நிறைய பேர்களுக்கு, குறிப்பாக காவடி ஏந்திச் சென்றோருக்கு அந்த பானங்கள் வெறும் ‘எட்டாக் கனிதான்.’ ஏனெளில் அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய பணப் பைகளை மேலே கொண்டுச் சென்றிருக்கவில்லை.
நிறைய பிள்ளைகளோடு கோயிலுக்குச் செல்லும் பெற்றோர்களின் நிலை என்னவென்று சொல்லவா வேண்டும்?
எனவே பிரத்தியேக உரிமை வழங்கி ஒரேயொரு கடைக்கு மட்டும் அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கும் நடைமுறையை மாற்றி, எதிர்வரும் காலங்களில் பக்தர்களுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கீழே அடிவாரத்தில் இலட்சக் கணக்கானோருக்கு அன்னதானம் வழங்குவதற்கும் தண்ணீர் பந்தல்களையும் ஏற்பாடு செய்துள்ள கோயில் நிர்வாகம் முருகன் சந்நிதானத்தில் நா வரண்டு பரிதவிக்கும் பக்தர்களையும் மறந்துவிடக் கூடாது.