இராகவன் கருப்பையா- நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன.
ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஸலேஹா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இந்த யோசனையை அறிவித்தார். கூட்டரசுப் பிரதேச நகராண்மைக் கழகம் இதன் தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்தாலோசிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்த கல்வியமைச்சர் ஃபட்லினா, பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் முதலில் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறினார்.
கேட்க நல்லாத்தான் இருக்கிறது. ஆனால் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தற்போதைக்கு இவர்களுடைய கவனம் முழுவதும் நம் நாட்டின் கல்வித் தரத்தை அதிகரிப்பது மீதாகத்தான் இருக்க வேண்டுமேத் தவிர கட்டிடத்தின் உயரத்தை அதிகரிப்பது மீது அல்ல.

அதனை தரம் உயர்த்துவதற்கு எம்மாதிரியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரியவில்லை. ஆனால் பள்ளிக்கூடக் கட்டிடத்தின் உயரத்தை அதிகரிப்பது பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தலைநகரில் இடப் பற்றாக்குறையாக உள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அப்படியா இடமில்லாமல் போய்விட்டது?
ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும் பல்லாண்டுகளாக சரிந்து கிடக்கும் கல்வித்தரத்தை உயர்த்துவதற்குதான் இவர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் கூட சமயத்தைப் பற்றி விவாதம் புரிவதற்கும் அரசியலைப் பற்றி பேசுவதற்கும்தான் நமது பிரதிநிதிகளுக்கு நேரம் சரியாக உள்ளது. நாட்டின் கல்வித் தரத்தைப் பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தற்போதைய பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியும் பிரதமர் அன்வாரின் புதல்வி நூருல் இஸாவும் மலேசியாவின் கல்வித் தரம் குறித்து அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார்கள். இப்போது அரசாங்கத்தில் இருக்கும் அவர்களும் கூட மவுனமாகத்தான் உள்ளனர்.
“தேசிய பள்ளிகள் சமய பள்ளிகளைப் போல் மாறிவிட்டன. அதனால்தான் மலாய்க்காரர் அல்லாதாரிடையே அப்பள்ளிகள் புகழ் இழந்துவிட்டன,” என்று முன்னாள் பிரதமர் மகாதீர் சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பட்டமாகவே குறிப்பிட்டிருந்தார்.
இது போன்ற உணர்ச்சிமிக்க விஷயங்களை ஒழிவு மறைவின்றி அவர் மட்டுமே துணிச்சலாகப் போட்டு உடைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது பாடத் திட்டத்தில் அளவுக்கு அதிகமாக சமயம் திணிக்கப்பட்டுள்ளது என்பது அவருடைய ஆதங்கம் மட்டுமின்றி கல்விமான்களின் கவலையும் கூட.
உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெறுவோரில் நிறைய பேர்களுடைய மொழி ஆளுமையும் அறிவுத் திறனும் கேள்விக் குறியாக உள்ளது. அதனால்தான் பல வேளைகளில் தனியார் துறையில் அவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
மலேசிய பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலை கிடைப்பது கூட அரிதாகிவிட்டது. ‘குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டும்’ நிலைதான்.
நமது கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது என்பதற்கு இவற்றை விட வேறு உதாரணங்கள் தேவையா என்ன?
அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க தரமானக் கல்விதான் வழிகோலும். நாட்டின் எதிர்காலம் இதில்தான் உள்ளது. இல்லையேல் தற்போது தரமின்றி பேதலித்துத் திரியும் சில இளம் அரசியல்வாதிகளைப் போல்தான் எதிர்கால அரசியல் தலைவர்களும் இருப்பார்கள்.
எனவே நமது பிள்ளைகளுக்கு சிறப்பான பாடத்திட்டத்தின் வழி தரமான கல்வி வழங்க இயலவில்லையென்றால் அவர்கள் வகுப்பறைகளுக்கு எத்தனை மாடிகள் ஏறிச் சென்றாலும் அது பயனுள்ள ஒன்றாக அமையாது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.