இராகவன் கருப்பையா- அண்மையில் சிலாங்கூர், செப்பாங் அருகில் இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான சர்ச்சை முற்றாக ஓய்வதற்குள் மற்றொரு ஈனச் செயல் நம்மை ஈட்டி போல் தாக்கியுள்ளது வேதனைக்குறியது.
அதுவும், இந்த அறிவிலித்தனத்தை அரங்கேற்றியது ‘எரா எஃப் எம்’ எனப்படும் ஒரு வாணொலி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் நமக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
‘வேல் வேல்’ என நய்யாண்டிச் செய்து அவர்கள் ஆட்டம் போட்டக் காட்சிகள் சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு நாடலாவிய நிலையில் எல்லா சமயத்தினரிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தங்களுடைய தவறுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பொது மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், ‘திருவிளையாடல்’ திரையில் வரும் வசனத்தைப் போல ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே,’ எனும் அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
பிற மதத்தை இழிவுபடுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருவதால், குற்றம் புரிவோர் உடனுக்குடன் நிதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அது மட்டுமின்றி இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிப்பது பற்றியும் நீதிமன்றங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
செப்பாங் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், எதிர்வரும் காலங்களில் இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கு அந்த தண்டனை எந்த அளவுக்கு ஆக்ககரமாக அமையும் என்று தெரியவில்லை.
அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் இலகுவான தண்டனைதான் விதிக்கப்பட்டது.
இத்தகைய குற்றங்களை புரியும் எல்லாத் தரப்பினர் மீதும் சரிசமமாக சட்டம் பாய வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.
ஏனெனில் பெரும்பாலான வேளைகளில், குற்றம் புரியும் சாமானிய மக்கள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்களேத் தவிர மத போதகர்கள் மீது நடிவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
கடந்த காலங்களில் அத்தகையோர் மீது எண்ணற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைதான் நாம் பார்த்திருக்கிறோம்.
அநேகமாக இந்த நிலைப்பாடுதான் சாமானிய மக்களும் அதே குற்றத்தைப் புரிவதற்கு ஊக்கப்படுத்துகிறதோ என்று கூட நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
எனவே பிற இனத்தவரின் சமயத்தை இழிவுபடுத்தும் அனைத்துத் தரப்பினர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுப்பதோடு நீதிமன்றங்கள் அவர்களுக்குக் கூடிய பட்ச தண்டனை வழங்கினால் இத்தகையக் குற்றங்களை வருங்காலங்களில் நாம் குறைக்க வாய்ப்புண்டு.