திரைக்கு பின்னால்தான்  ஜ.செ.க.யின் இந்தியத் தலைவர்கள்

இராகவன் கருப்பையா – இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள ஜ.செ.க.வின் மத்திய செயற்குழுவிற்கான தேர்தல், என்றும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள 30 இடங்களுக்கு மொத்தம் 70 பேர்கள் போட்டியிடவிருக்கின்றனர். அவர்களில், கணபதிராவ், கோபிந் சிங், நேத்தாஜி ராயர், ராம் கர்ப்பால் சிங், சிவகுமார் மற்றும் கஸ்தூரி ராணி பட்டு உள்பட 16 பேர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன சமூகத்தின் ஆதிக்கத்தில் உள்ள இத்தேர்தலில் இந்த 16 பேர்களுடைய பங்களிப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியாது.

ஏனெனில் சீனர்கள் மத்தியில் அனல் பறக்கும் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் இவர்கள் ஒரு பொருட்டாகவே இல்லை என்றே நம்பப்படுகிறது.

நாட்டின் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இத்தேர்தலில் முத்த அரசியல்வாதியான அக்கட்சியின் தலைவர் லிம் குவான் எங்ஙை வீழ்த்துவதற்கு அப்பட்டமாகவே திட்டம் தீட்டப்பட்டுள்ள வேளையில் அவருடைய ஆதரவாளர்களும் ‘ஒரு கை பார்த்துவிடுவோம்,’ எனும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

கட்சி மீதான ‘லிம்’ குடும்பத்தினரின் ஆதிக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என இளம் தலைவர்கள் மிகவும் சிரத்தையெடுத்து பாடுபடுவதாகத் தெரிகிறது.

மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் ஆரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள போதிலும் அவருடைய இளைய மகளும் லிம் குவான் எங்ஙின் தங்கையுமான லிம் ஹுய் யிங்ஙின் பரபரப்பான அரசியல் பிரவேசம் கட்சி வட்டாரத்தில் பலருடைய புருவங்களை உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் தனது குடும்பத்தின் செல்வாக்கில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் எடுத்த எடுப்பிலேயே கல்வித் துறை துணையமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பிறகு சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு பிரதமர் அன்வார் செய்த அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு நிதித்துறை துணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கட்சித் தேர்தல் இம்முறை மிகவும் காட்டமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் ஜ.செ.க. தற்போது ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வதிப்பதுதான்.

காலங்காலமாக எதிர்கட்சியாகவே இருந்த அது, அண்மைய ஆண்டுகளாக ஆளும் கூட்டணியில் இடம் பெறத் தொடங்கியதிலிருந்து அரசாங்கப் பதவிகளும் இதர நியமனங்களும் நிறையவே கிடைக்கின்றன.

எனவே இத்தகைய பதவிகள்தான் கட்சித் தேர்தலில் மிகப்பெரியதொரு தாக்கத்ததை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

எத்தகைய காலக் கட்டத்திலும் மிகத் துணிச்சலாக கேள்வி எழுப்பும் ஆளுமையை லிம் குவான் எங் கொண்டிருக்கும் வேளையில், இளம் தலைவர்கள் அரசாங்கப் பதவிகளுக்காக சோரம் போகின்றனர் எனும் குற்றச்சாட்டுகளும் கூட பரவலாக நிலவுகின்றன.

இந்நிலையில் லிம் குவான் எங் அணிக்கும் இளையத் தலைவர்களுக்கும் இடையே நிலவும் இந்த கட்சிப் போராட்டத்தில் நம் சமூகத்தைச் சார்ந்தவர்களின் நிலைப்பாடு வலுவிழந்த ஒன்றுதான்.

அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் படுதோல்வியடைந்த கோபிந் சிங் இந்தக் கூற்றுக்கு சரியானதொரு எடுத்துக்காட்டு.

ஜ.செ.க.வில் சீனத் தலைவர்களின் தயவின்றி சுய காலில் நிற்கும் அளவுக்கு நம் தலைவர்களுக்கு அரசியல் பலமில்லை எனும்  நிலையைத்தான் இது பறைசாற்றுகிறது என்பதே நிதர்சனம்.