கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இந்து கோயில்கள் வலுக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவது, இரவோடு இரவாக அகற்றப்படுவது, மூர்க்கத்தனமாக தகர்க்கப்படுவது, போன்ற சம்வங்கள் இன்று நேற்று முளைத்தப் பிரச்சனை இல்லை.

காலங்காலமாக இத்தகைய அவலங்களை தொடர்ச்சியாக நாம் அனுபவித்துக் கொண்டுதான் வேதனையில் வாடுகிறோம்.

இத்தகைய பிரச்சனைகள் இந்துக் கோயில்களை மட்டும்தான் துரத்திக் கொண்டு வருகிறதா அல்லது கிருஸ்துவ, சீக்கிய, புத்தமத மற்றும்  இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளங்களுக்கும் இதே நிலைதானா எனும் கேள்வியை நாம் கேட்க வேண்டியத் தருணம் வந்துள்ளது.

இந்துக்களுக்கு மட்டும்தான் இந்நிலை என்றால் கண்டிப்பாக இதனை நாம் ஆராயத்தான் வேண்டும். காரணங்களை கண்டறிய வேண்டிய அவசியமும் உள்ளது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் இருந்து சஞ்சிக் கூலிகளாக இங்கு வரவழைக்கப்பட்ட இந்தியர்கள் ஆங்காங்கே தாங்கள் குடியிருந்த பகுதிகளில் கோயில்களை நிர்மாணித்துக் கொண்டார்கள் என்பது வரலாறு.

கோயில்களும் தெய்வ வழிபாடுகளும் அவர்களுடைய அன்றாட வாழ்வியலில் ஒன்றித்த முக்கியமானதொரு அம்சம் என்பதும் நாம் அறிந்ததே.

இத்தகைய சூழல்களில் உருவான ஆயிரக்கணக்கான கோயில்கள்தான் தற்போது நாடு தழுவிய நிலையில் நூறாண்டுகளையும் கடந்து நிலைத்திருக்கின்றன.

பல வேளைகளில் அவற்றின் நிர்வாகத் தேர்தல்களின் போது தோல்வியுறும் தரப்பினர் அருகிலேயே தங்களுடைய வசதிக்கேற்ப இன்னொறு கோயிலை நிர்மாணித்துக் கொள்வது கடந்த காலங்களில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.

நாடலாவிய நிலையில் இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இவ்வாறு நிறுவப்படும் கோயில்கள் யாருடைய நிலத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன, நில உரிமையாளர்களின் அனுமதி பெறப்பட்டதா போன்ற கேள்விகள் எழவேச் செய்கின்றன.

நில உரிமையாளர்களின் அனுமதியின்றி தான்தோன்றித்தனமாகக் கட்டப்படும் கோயில்களுக்குதான் பிற்காலத்தில் ‘இடியப்பச் சிக்கல்’கள் ஏற்படுகின்றன.

அரசாங்க நிலமாக இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான இடமானாலும், தோட்டப்புற நிலமானாலும், சம்பந்தப்பட்டத் தரப்பினரின் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

கோயில் குடிகொண்டுள்ள  அந்நிலத்தை, தொடக்கத்தில் இல்லாவிட்டாலும் நாளடைவில் அதிகாரப்பூர்வமாக கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அதன் நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

நிலத்தை கோயிலுக்குச் சொந்தமாக்கி அதற்கான பத்திரங்களை முறைப்படுத்தி வைத்திருந்தால் எந்தக் கொம்பனாலும் அதனை விற்கவோ வாங்கவோ முடியாது அல்லவா!

இத்தகைய அதிகாரப்பூர்வ கடமைகளை செய்யத் தவறிவிட்டு, ‘பூனை அதன் கண்களை மூடிக் கொண்டு உலகமே இருண்டதென்று நினைத்தக் கதை’யாக வெறுமனே காலத்தைக் கடத்திவிட முடியாது.

பிறகு அந்நிலத்தின் அதிகாரப்பூர்வ உரிமையாளர் பத்திரத்துடன் வந்து நிற்கும் போது, எத்தனை ஆண்டுகாலம் அந்தக் கோயில் அங்கு குடிகொண்டிருக்கிறது எனும் சர்ச்சையெல்லாம் வலுவிழந்து போய்விடுகிறது என்பதை நாம் உணரவேண்டும்.