அன்வாருக்கான இந்தியர்களின் ஆதரவு சரியும்

இராகவன் கருப்பையா- தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பான  சர்ச்சைகளுக்கு ஒரு வழியாக முடிவு காணப்பட்டுள்ளது.

“முடிவு காணப்பட்டுள்ளது,” என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சில அரசியல்வாதிகள் பெரிய சாதனை புரிந்துவிட்ட எண்ணத்தில், சுயமாக தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் போல அந்த முடிவு சுமூகமான முடிவுதானா, கோயிலைக் காப்பாற்ற பாடுபட்ட எல்லா தரப்பினருக்கும் மகிழ்ச்சியளித்ததா என்பதுதான் பலரது மனங்களில் உள்ள, அகநிலைக்குரிய ஒரு கேள்விக் குறியாகும்.

அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக எவ்வாறெல்லாம் பேசுவார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் எவ்வகையிலெல்லாம் மற்றவர்களை பணிய வைப்பார்கள் என்பதற்கு இந்த விவகாரம் நல்லதொரு உதாரணம்.

சுமார் 132 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, அன்றாடம் அப்பகுதியில் துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்த சில இந்திய தொழிலாளர்கள் நிறுவியதாகக் கூறப்படுகிறது.

அந்த காலக்கட்டத்தில் அப்பகுதி காடு மேடாகவோ அல்லது வெறும் சதுப்பு நிலமாகவோ கூட இருந்திருக்கலாம். அருகில் எந்த ஒரு கட்டிடமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அங்கு இந்து ஆலயமொன்றை நிறுவுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் கூட நிலவியிருக்கக் கூடும். இதுதான் அக்கோயிலின் தொடக்ககால வரலாறு என்று நம்பப்படுகிறது.

அவ்வாட்டாரம் தலைநகரின் மையப் பகுதியாதலால் அக்கோயில் குடிகொண்டிருக்கும் இடமும் காலப்போக்கில் டி.பி.கே.எல். எனப்படும்  கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் கீழ் வந்துள்ளது.

ஆலயம் அமைந்துள்ள அந்நிலத்தை பிற்காலத்தில், அதாவது 2012ஆம் ஆண்டில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு  டி.பி.கே.எல். விற்பனை செய்துள்ளது.

அச்சமயத்தில், நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஒரு இந்து வழிபாட்டுத் தளம் அங்கு குடிகொண்டிருப்பதை அந்தத் தனியார் நிறுவனமும் மாதகர் மன்றமும் சற்றும் கவனத்தில் கொள்ளாதது வேடிக்கையான ஒரு விஷயம்தான்.

நிலத்தை வாங்கும் தரப்பினர் அந்த இடத்தை பார்க்காமலா வாங்குவார்கள், எனும் கேள்வியும் எழுகிறது. அவ்விரு தரப்பினரும் அந்த கோயிலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்படவுள்ளதால் ஆலயம் அகற்றப்பட வேண்டும் என கடந்த வாரம் பேச்சு எழுந்தபோதுதான் உண்மையான நிலவரம் நிறைய பேர்களுக்குத் தெரிய வந்தது.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில்(தோரணையில்) பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கு களமிறங்கியதால் நிலைமை பூதாகரமானது எல்லாருக்கும் தெரியும்.

வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திரன் மற்றும் ஸாயிட் போன்ற பிரபல வழக்கறிஞர்களை உள்ளடக்கிய சமூகவியலாளர்கள் குழுவும் கூட களமிறங்கி அக்கோயிலை காப்பாற்ற முற்பட்டது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

ஏனெனில் பல்வேறு ‘டிராமா’க்களை அரங்கேற்றிய அரசியல்வாதிகள் மத்தியில் இவர்களுடைய முயற்சி நீதிக்காவும் நியாயத்தின் அடிப்படையிலும் அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதற்கிடையே அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை 27/3/25ஆம் தேதியன்று பிரதமர் அன்வார் நடத்தி வைப்பார் என செய்தி வெளியான போது, ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் தீர்க்கப்படுவதற்கு முன் அன்வார் அந்நிகழ்வை தவிர்ப்பது நல்லது என முன்னாள் சட்டத்துறையமைச்சர் ஸைட் இப்ராஹிம் மற்றும் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் உள்பட பலரும் ஆலோசனை வழங்கினர்.

ஆனால் அன்வார் அவற்றுக்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. அவருடைய நிலைப்பாடு மாறுபட்டிருந்தது. அங்கு பள்ளிவாசலைக் கட்டுவது தனியார் நிறுவனம் ஒன்றின் திட்டம் எனும் போதிலும், “குறிப்பிட்ட தேதியன்று நான் அங்கு செல்வேன். கோயில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சுமூகமாகத் தீர்வு காணப்படும்,” என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

“அந்த ஆலயம் சட்டவிரோதமானது அல்ல. ஏனெனில் தண்ணீர் மற்றும் மின்சாரத் தொடர்புகளை டி.பி.கே.எல். அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது,” என ம.இ.கா. தலைவர்கள் வாதிட்ட வேளையில், அந்நிலம் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பான பத்திரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என அம்பிகா தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

டி.பி.கே.எல். வசமுள்ள ஒரு நிலத்தை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைத்தான் அம்பிகா தரப்பினர் வலியுறுத்த முற்பட்டதைப் போல் தெரிகிறது.

எனினும் இந்த கருத்துக்களையெல்லாம் அன்வார் சற்றும் பொருட்படுத்தாதது நம் சமூகத்தைச் சார்ந்த பலருக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, அன்வார் அங்கு செல்வதற்கு இரண்டே நாள்கள் இருக்கையில், “பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது. கோயில் 50 மீட்டர் தள்ளி மறுநிர்மாணம் செய்யப்படும். ஆலய நிர்வாகம் இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. அன்வாருக்கு நன்றி.” என வெளியான தகவல் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

“காளியம்மனை இங்கிருந்து ஒருபோதும் நாங்கள் நகர்த்தப் போவதில்லை,” என தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருந்த கோயில் நிர்வாகத்தினருக்கு சில அரசியல் தரப்பினர் இரவோடு இரவாக அழுத்தம் கொடுத்திருக்கக் கூடும் என பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் இராமசாமி வெளியிட்ட அறிக்கையிலும் நியாயம் இருக்கவேச் செய்கிறது.

அன்வாரின் போக்கில் அதிகாரமும் அகம்பாவமும் உள்ளதாவே எண்ண த்தோன்றுகிறது. அவரின் அவசரமும், அழுத்தமும் நாம் அவர் மீது கொண்ட நம்பிக்கையை அகற்றிவிட்டது.