கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது?

இராகவன் கருப்பையா – நம் நாட்டின் அரசாங்க அதிகாரிகள் ஒரளவு முன்னெச்சரிக்கையோடு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களேயானால் பொது மக்கள் சம்பந்தப்பட்ட, குறிப்பிட்ட அளவிலான அசம்பாவிதங்களை குறைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் நடப்பது என்ன? பெரும்பாலான வேளைகளில் ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்,’ எனும் நிலைப்பாடுதான் நிலவுகிறது.

கடந்த 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று சிலாங்கூர், உலு கிளேங் பகுதியில், ‘ஹைலண்ட் டவர்ஸ்’ எனப்படும் 12 மாடி ஆடம்பர அடுக்கு மாடிக் கட்டிடம்  சட சடவென சரிந்து விழுந்த சம்பவத்தை நிறைய பேர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

கடுமையான அடை மழையின் போது நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தில் மொத்தம் 49 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்ததும் நமக்குத் தெரியும்.

அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள மலைச்சரிவுகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என அச்சமயத்தில் துனைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

அச்சிந்தனை சற்று முன்னதாகவே உதித்திருந்தால் பல குழந்தைகள் உட்பட்ட அந்த 49 பேர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் அல்லவா!

இதே நிலைப்பாடுதான் இன்னமும் நம் நாட்டில் பலதரப்பட்ட சோகங்களுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமான விஷயம்.

உதாரணத்திற்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் விபத்துக்களின் பின்னணிகளை சற்று புரட்டிப் பார்த்தோமேயானால் இந்த உண்மை மிகத் தெளிவாக புலப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் ஜொகூர், குளுவாங் அருகே நிகழ்ந்த, 4 வாகனங்கள் சம்மந்தப்பட்ட சாலை விபத்தொன்றில் ஒரு கைக் குழந்தை உள்பட ஐவர் உயிரிழந்தனர்.

வடக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு சுமையத்தின் ‘டயர்’ ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைக்குள் பாய்ந்து மற்ற பல வாகனங்களை நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதே போல கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மலாக்கா, அலோர்காஜா அருகே நிகழ்ந்த, 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்தில் எழுவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொத்தம் 27 பயணிகளுடன் வடக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து தறிகெட்டு எதிர் திசையில் நுழைந்து பல வாகனங்களை மோதியது.

ஒவ்வொரு முறையும் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்த பிறகுதான் அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் போன்றோரின் கண்கள் அகலத் திறக்கின்றன. “தீவிரமாக விசாரிக்க வேண்டும், விபத்துக்கு யார் காரணம் என கண்டறிய வேண்டும்,” போன்ற அறிவிப்புகளுடன்  துடிக்கின்றனர்.

‘வருமுன் காப்போம்,’ எனும் நிலைப்பாடு அவர்களுடைய எண்ணத்தில் துளியளவும் உதிப்பதில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.

அண்மைய காலமாக கனரக வாகனங்கள் கட்டுப்பாடிழந்து எதிர் திசையில் நுழையும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதால் இரு திசைகளுக்கும் இடையிலான சாலைத் தடுப்பு அரணை வலுப்படுத்துவது பற்றி அவர்கள் யோசித்தார்களா தெரியவில்லை.

சுமார் 770 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் நெடுகிலும் தற்போது உள்ள சாலைத் தடுப்பு அரண் மெல்லிய இரும்பினால் செய்யப்பட்டதாகும். ஒரு மோட்டார் சைக்கிள் கூட அதனை இடித்துத் தள்ள வாய்ப்பிருக்கிறது.

அவற்றை அகற்றிவிட்டு, திண்கரையினாலான(concrete) அரண்களை சாலைத் தடுப்பாக நிர்மாணித்தால் கனரக வாகனமாக இருந்தாலும் அவற்றை மோதித் தகர்த்து எதிர் திசைக்குள் ஊடுருவக் கூடிய வாய்ப்பு மிகவும் குறைவு.

இவ்வாறு செய்வதற்கு செலவுகள் சற்று அதிகமாகும் என்பதை மறுக்கலாகாது. எவ்வளவு செலவாகும் என்று அரசாங்கத்தைச் சேர்ந்த யாரும் தலையை சொரிய வேண்டிய அவசியமில்லை.

ஏனெனில் பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சாலைகள் பயணிப்பதற்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

வாகனமோட்டிகள் ஆண்டுதோறும் தவறாமல் சாலை வரி செலுத்துவது மட்டுமின்றி அதிக அளவிலான டோல் கட்டணங்களுக்கும் இலக்காகின்றனர் என்பதை அரசாங்கம் உணரவேண்டும்.