ம.இ.கா-வின் ஆவேசம்: பதவிகளுக்கா மக்களுக்காகவா?

இராகவன் கருப்பையா- அண்மைய மாதங்களாக ம.இ.கா.வின் போராட்டம் எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்கின்றது எனும் ஐயப்பாடு  தற்போது எழுத் தொடங்கிவிட்டது.

ஏனெனில், “அம்னோ வாக்குத் தவறிவிட்டது. அமைச்சரவையில் கட்சிக்கு இடமில்லை. அரசாங்க நிறுவனங்களிலும் நியமனங்கள் இல்லை,” என தங்களுக்கான பதவிகளைப் பற்றிதான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களேத் தவிர பெரும்பாலான வேளைகளில் சமுதாய நலன் பற்றி வாய்த் திறக்கவில்லை.

ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியுடன் சிறியதொரு கட்சியாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக மலேசிய அரசியல் தளத்தில் அக்கட்சி அதிகமாகப் பேசப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது,’ என்பதற்கு ஏற்ப, சமீப காலமாக அதன் தலைவர்கள் அம்னோவுக்கு எதிராக மிகத் துணிச்சலாகக் கருத்துகளை முன் வைப்பது அக்கட்சிக்கு முன்னுதாரணம் இல்லாத ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது.

இன்னும் ஒரு வருடத்தில் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கும் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாக வலுவிழந்து நிற்கும் அக்கட்சி இப்போதுதான் தைரியத்துடன் உரக்கக் குரல் கொடுக்கிறது.

இந்தத் துணிச்சல் பாராட்டத்தக்க ஒன்றுதான் எனும் போதிலும், ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்,’ போலல்லவா இருக்கிறது அவர்களுடைய போக்கு!

எண்ணற்ற நாடாளுமன்றத் தொகுதிகளுடனும் சட்டமன்றத் தொகுதிகளுடனும் மலேசிய அரசியல் வானில் ம.இ.கா. வலுவாக கொடி கட்டிப் பறந்த காலத்தில் அதன் அப்போதையத் தலைவர்கள் சற்று வாய்த் திறந்திருந்தால் எக்கட்சி நிறைய விஷயங்களை சாதித்திருக்கும்.

அப்படி செய்திருந்தால் நம் சமூகம் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் கல்வி உள்பட பல்வேறுத் துறைகளில் தலை நிமிர்ந்து தற்போது பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால் நடந்தது என்ன? அம்னோவுக்குப் பயந்து, ‘தலையாட்டி பொம்மை’ போல ஆமாம்சாமி போட்டு, அடிபணிந்தே காலம் கடந்தது. வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் அப்போதையத் தலைவர்கள் வெறுமனே கோட்டை விட்டனர்.

ஆனால் தற்போதையச் சூழலில் அக்கட்சி ‘பத்தோடு பதினொன்றாக’த்தான் உள்ளது. எவ்வளவுதான் உரக்கக் கத்தினாலும் கேட்க ஆளில்லை என்பதுதான் நிதர்சனம். ‘ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது,’ எனும் நிலைப்பாட்டில் ம.இ.கா. தற்போது பரிதவிக்கிறது.

“எங்களுக்கு பதவிகள் கொடுக்கப்படவில்லை, நியமனங்கள் கிடைக்கவில்லை,” என பல தடவை நீலிக் கண்ணீர் வடித்து, “தேசிய முன்னணியை விட்டு வெளியேறவிருக்கிறோம்,” என மிரட்டிப் பார்த்தும் யாரும் அது பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

‘அம்னோவின்  தயவில்தான் ம.இ.கா. இருக்கிறதேத் தவிர ம.இ.கா.வை நம்பி அம்னோ இல்லை,’ எனும் நிலைப்பாட்டில், “வேண்டுமானால் கிளம்புங்கள்,” என்பதைப் போல தேசிய முன்னணித் தலைவரான துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் இரு தடவை மறைமுகமாக கோடிக்காட்டிவிட்டார்.

“இத்தகையச் சூழலில், யாருக்காக ம.இ.கா. இப்படி போராடுகிறது,” எனும் கேள்வி எழுவதில் நியாயம் உள்ளது. பொதுவான இந்திய சமூகம் மட்டுமின்றி கட்சி உறுப்பினர்களும் கூட இந்தக் கேள்விக்கு விடை தேடுகின்றனர்.

பக்காத்தான் ஆட்சியின் கீழ் அரசாங்க பதவிகளில் அமர்வதற்கு போதுமான வாய்ப்புகள்  வழங்கப்படவில்லை எனும் ஆதங்கம் மட்டுமே வெளிப்டுகிறதேத் தவிர நம் சமூகத்திற்கு, குறிப்பாக பி40 தரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புகள் எதனையும் காணவில்லை.

பதவிகளாலும் நியமனங்களினாலும் மேல்மட்டத் தலைவர்கள் மட்டும்தான் பயன் பெறுவார்களே ஒழிய அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தில் உழலும் சாமானிய மக்களின் நிலையை யார் கவனிப்பார்?