நடிகர் விஜய் நிகழ்ச்சியின் நேர்மறையும் எதிர்மறையும்

இராகவன் கருப்பையா – கடந்த மாதம் பிற்பகுதியில் தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழக நடிகர் விஜயின் ‘ஒலி குறுந்தகடு'(Audio CD) அறிமுக விழா தொடர்பான பல நேர்மறையான தகவல்களுக்கு மத்தியில், திரை மறைவில் நிகழ்ந்துள்ள சில கசப்பான சம்பவங்களும் தற்போது கசிந்துள்ளன.

ஒரு ‘ஒலி குறுந்தகடு’ அறிமுக விழாவில் கலந்து கொண்ட அதிகபட்சக் கூட்டம் எனும் வகையில், மலேசிய சாதனை புத்தகத்தில் அந்நிகழ்ச்சி இடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரங்கம் நிறைந்து வழிந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதற்கு ஏற்றவாறு நமது ரசிகர்களும் கூட மிகவும் கட்டுக்கோப்பாக, கண்ணியத்துடன் நடந்து கொண்டதால் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்பதும் மகிழ்ச்சியான விஷயம்தான்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நடிகர் சம்பந்தப்பட்ட அரசியல் கூட்டமொன்றில் 41 பேர்கள் மிதிபட்டு மரணமடைந்த துயரச் சம்பவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை.

அதனால் புக்கிட் ஜாலில் நிகழ்ச்சியை மிகவும் பாதுகாப்பாக அரங்கேற்ற ஏற்பாட்டாளர்கள் அதிக சிரத்தையெடுத்து வெற்றியும் கண்டனர்.

இத்தகைய நேர்மறையான விஷயங்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கிற போதிலும், கலந்துகொண்ட ரசிகர்கள் சம்பந்தப்பட்ட பல எதிர்மறையான தகவல்கள் நமது மனங்களை வருத்துகின்றன.

இந்நிகழ்ச்சியைக் காண்பதற்கு கிளேங் பள்ளத்தாக்கிற்கு அப்பால் வெளி மாநிலங்களில் இருந்து தலைநகரை நோக்கி படையெடுத்த எண்ணற்ற ரசிகர்கள் நிறையவே செலவு செய்துள்ளனர்.

குறிப்பாக, நுழைவுச் சீட்டுக்கான தொகையைத் தவிர்த்து, போக்குவரத்து, உணவு மற்றும் தங்கும் விடுதி, போன்றவற்றுக்கு ஆயிரக்கணக்கான ரிங்கிட் செலவு செய்திருக்கின்றனர்.

அவர்களில் சிலர் தங்களுடைய நகைகளை அடமானம் வைத்து அந்தச் செலவுகளை ஈடு செய்ததாக கசிந்துள்ள தகவல்கள் நமக்கு வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் சிலர் கடந்த மாதம் செலுத்த வேண்டிய தங்களுடைய காப்புறுதி சந்தாவைக் கூட புறக்கணித்துவிட்டு அதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தத் தொகையை புக்கிட் ஜாலில் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கின்றனர்.

அதன் விளைவாக, அவர்களில் சிலருடைய காப்புறுதித் திட்டங்கள் காலாவதியாகிவிட்டதாக நமக்குத் தெரிய வருகிறது.

இன்னும் சிலர் கடந்த மாதம் பொருளகங்களுக்கு செலுத்த வேண்டிய, தங்களுடைய வாகனங்களுக்கான தவணைக் கட்டணங்களையும் கூட தவறவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒருவர் தனது பொழுது போக்கிற்காக ஆயிரக் கணக்கில் செலவு செய்வது தவறில்லை. தகுதிக்கு ஏற்ப, அது அவரவரின் சுய விருப்பம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் ஒரு சினிமா நடிகரைக் காண வேண்டும் எனும் வேட்கையில் வாகனத்திற்கான தவணைக் கட்டணம், காப்புறுதி சந்தா மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசியக் கடப்பாடுகளை புறம்தள்ளுவது அறிவிலித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சற்று பின்நோக்கி பார்ப்போமேயானால் கடந்த 80ஆம் ஆண்டுகளில் ம.இ.கா. தொடங்கிய ‘மைக்கா ஹோல்டிங்ஸ்’ எனும் நிறுனத்திற்கு முதலீட்டாளர்களை சேர்த்த அவலம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நாடளாவிய நிலையில் பி40 தரப்பை உள்ளடக்கிய எண்ணற்றத் தோட்டப் பாட்டாளிகள் உள்பட 66,000திற்கும் மேற்பட்ட நம் சமூகக்தினர் மொத்தம் 106 மில்லியன் ரிங்கிட்டை ம.இ.கா.விடம் ஒப்படைத்தனர்.

அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய நகைகளை அடகுவைத்து முதலீடு செய்தனர். இன்னும் பல ஆயிரம் பேர்கள் தங்களுடைய காப்புறுதிகளை சரண் செய்து அந்திறுவனத்தில் முதலீடு செய்தனர்.

கடைசியில் அந்த முதலீடுகள் என்ன ஆயின என்பது வேறு விஷயம். ஆனால் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வில் மக்கள் காட்டிய நிலைபாடு நம்மை சிந்திக்க வைக்க வேண்டும்.

அதாவது நம்மால் ஒருங்கிணைய முடியும் என்பது மட்டும் உண்மை.

உணர்வாலும், உணர்ச்சியாலும் நாம் ஒன்றாக முடியும் என்பதை காண முடிகிறது.

நம்மால் ஒருமித்த வகையில் இணைய இயலாது என்பதும் நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதும் மீளாவ்வு செய்யப்பட வேண்டும்.

நம்மிடையே உள்ள ஆற்றலையும், பொருளாதாரத்தையும் சீரமையக்க இயலும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட வேண்டும்.

இண்ட்ராப் போராட்ட உணர்வும் மீண்டும் தலைதூக்க வேண்டும். சமூக மாற்றம் என்பதை விவாதிக்க தகுந்த தருணமாக நாம் கருதி இந்த ஆண்டை நாம் அணுகுவோம்.