நஜிப் ரசாக் மீது “நம்பிக்கை” வைப்பதா? மேலும் நாசமாக வேண்டுமா?

-ஜீவி காத்தையா,  6.2.2012.

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்று கூறுவார்கள். இப்போதெல்லாம், தேர்தல் வரும் பின்னே, மான்யம் வரும் முன்னே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சிறம்பானில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ஒருவர் கூறினார். இது நாடறிந்த உண்மை.

இன்று, மானியம் மட்டுமல்ல. சோறு, தோசை, நோட்டுகள் போன்றவைகள் எல்லாம் தேர்தல் வரப்போகிறது என்பதைப் பறைசாற்றுகின்றன.

இவற்றை எல்லாம் தொட்டுப் பார்க்கலாம், சுவைத்துப் பார்க்கலாம், பயன்படுத்திப் பார்க்கலாம். இவற்றை கொடுப்பவர்களுக்கு அது செலவு ஆகும்; பெற்றுக்கொள்வோருக்கு அது பிச்சையாகும்.  அது எப்படி, எங்கிருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இறுதியில், கொடுத்தவர்கள் குபேரர்கள் ஆகின்றனர். பெற்றுக்கொண்ட நாட்டு மக்கள் தொடர்ந்து அடுத்த மானிய ஓசைக்காக காத்திருக்க வைக்கப்படுகின்றனர். இதுதான் மலேசிய மக்களின், அவர்களில் ஓர் அங்கமான இந்தியர்களின், அனுபவம்.

 இப்போது, மீண்டும் மானிய ஓசை கேட்கிறது. அத்துடன், “நம்பிக்கை” கூப்பாடு ஓசையும் கேட்கிறது. இதைக் கேட்கலாம். அதோடு முடிந்தது.

இன்றைய அம்னோ தலைவர் நஜிப் ரசாக் முந்தானை விரித்து அம்னோக்காரர்களால் வந்தேறிகள், நாய்க்குப் பிறந்தவர்கள், பத்துமலையில் ஏறியிறங்க மட்டுமே தெரிந்த குடிகாரர்கள், மனைவிக்கு பாதுகாப்பு அளிக்காத மணியம் பரம்பரையினர் என்று ஏளனம் செய்யப்பட்ட இந்திய  மலேசியர்களிடம்,  தோட்டப்புறங்களிலிருந்து எவ்விதப் பாதுகாப்புமின்றி விரட்டப்பட்டவர்களான, நல்ல வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களான, கல்விக்கு, மாணவர்களுக்கு சம நிதி ஒதுக்கீடு பெறும் உரிமையற்றவர்களான, அம்னோவின் இறுதிக் குறிக்கோளின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவு மணி அடிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களான, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்புரிமை மறுக்கப்பட்டவர்களான, இரண்டே இரண்டு எடுபிடி அமைச்சர் பதவிகளுக்காக அவர்கள் போட்ட, போடும் பிச்சைக்காக என்றென்றும் அம்னோவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களான  இந்திய மலேசியர்களிடம், “நம்பிக்கை” பிச்சை கேட்கிறார்.

சீன மற்றும் மலாய் மலேசியர்களிடம் நஜிப் “நம்பிக்கை” பிச்சை கேட்கவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் அம்னோ தலைவரான நஜிப் ரசாக் மீது “நம்பிக்கை” இழந்து விட்டனர். அதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். அவர் வாழ, அவரும் அவரது குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கோடான கோடியைச் சுருட்டி சுகமாக வாழ, இந்திய மலேசியர்களின் பொன்னான வாக்குகள் அவருக்கு உயிரினும் மேலானதாகி விட்டது.

அந்தப் பொன்னான வாக்குகளைத் தன் பக்கம் கவர்வதற்கு நஜிப் எங்கு வேண்டுமானாலும் போவார், எது வேண்டுமானாலும் செய்வதாக கூறுவார். இப்போது அவரால் செய்ய முடிந்ததெல்லாம் “என் மீது ‘நம்பிக்கை’ வையுங்கள், பின் அரசாங்கத்தின் மீது ‘நம்பிக்கை’ வையுங்கள்” என்று பிச்சை கேட்பதுதான். காரியம் ஆனவுடன் பிச்சை போட்டவர்களைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உண்டா?

அன்னமிட்டவர் கையைக் கடிப்பது அம்னோ பாரம்பரியம் 

அம்னோ தலைவர்கள் ஒவ்வொருவரும் “நம்பிக்கை” என்ற வாக்குக்கு அருகதை அற்றவர்கள். அவர்களில் முதன்மையானவர் நஜிப் ரசாக்.

இந்நாட்டு வானத்தின் கீழ் அனைவருக்கும் இடமுண்டு என்று கூறியமுதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், “Malaya is for the Malays and it should not be governed by a mixture of races. The Malays must safeguard the rights over this land which is ours for the benefits of our future generations”, (June 30, 1952) என்று பகிரங்கமாக பிரகடனம் செய்தார்.

இக்கொள்கையை இதர அம்னோ தலைவர்களும் இன்னும் கூடுதலான தீவிரவாதப் போக்குடன் பின்பற்றினர். அப்துல் ரசாக் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கையில் இறங்கினார். புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கினார். மகாதிர் விருந்து முடிந்ததும் வந்தேறிகள் தங்களுடைய இல்லத்திற்குத் திரும்ப வேண்டும் என்றார். அப்துல்லா படாவி, துங்குவை போல் நாட்டின் வளம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்ற அதே வேளையில் இந்தியர்களின் பொருளாதார மேம்பாடு அச்சமூகத்தைப் பொறுத்தது என்று மலேசிய மேலவையில் கூறினார். “நம்பிக்கை” பிச்சை கேட்கும் இன்றைய பிரதமர் நஜிப் ரசாக் அவரின் புதிய பொருளாதார மாதிரி (NEM) இன அடிப்படையில் இல்லாமல் தேவை அடிப்படையில் இருக்கும் என்றார். மலாய்க்காரர்களின் பொருளாதார ஆலோசனை மன்றம் நிமிர்ந்து பார்த்ததும் நஜிப் குனிந்துக் கொண்டார். தேவை அடிப்படையில் இருக்கும் என்ற புதிய பொருளாதார மாதிரி எங்கே?

மார்ச் 8, 2008 அனைவரும் அறிந்த மறக்க முடியாத நாள். மார்ச் 6, 2008, மஇகா தலைவர் ச. சாமிவேலு மறந்திருக்கக் கூடாத நாளாகும். ஆனால், அந்நாளை அவர் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டார். அன்று நஜிப் ரசாக், கோலாலம்பூரில் மஇகா பேராளர்களிடம் பேசுகையில் தேசியப்பள்ளிகளுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்காது என்றார். இன்னும் ஒரு மாதத்தில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்ட  நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும். வேறுபாடு அகற்றப்பட்டு விட்டதா?

ஒன்பதாவது மலேசிய திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் தேசியப்பள்ளிக்கு ரிம33.30தும், தமிழ்ப்பள்ளிக்கு ரிம10.95 தும், சீனப்பள்ளிக்கு ரிம4.50 தும் ஒதுக்கப்பட்டது. ஏன் வேறுபாடு? இவ்வேறுபாட்டை நஜிப் ரசாக் அகற்றி விட்டாரா?

தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் இடையில் வேறுபாடு இருக்காது என்று 2008 இல் கூறிய நஜிப் ரசாக் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 10, 2010 இல் தாக்கல் செய்த 10ஆவது மலேசிய திட்டத்தில் அதை நிறைவேற்றியுள்ளாரா? இல்லை, இல்லை!

மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு குறித்து முழு விபரமும் அளிக்குமாறு கல்வி அமைச்சரிடம் அக்டோபர் 10, 2011 இல் விடுக்கப்பட்ட கேள்விக்கு டிசம்பரில் பதில் அளிக்கப்பட்டது. கேள்வியையும் அதற்கான பதிலையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்:

“YB Tuan Kulassegaran A/l Murugesan (Ipoh Barat) minta MENTERI PELAJARAN menyatakan amaun wang yang dijangka dan telah dibelanjakan  untuk setiap murid setiap bulan untuk sekolah Kebangsaan Cina dan Tamil di bawah rancangan Malaysia ke-9 dan ke-10. Sila nyatakan rasional perbezaan  perplanjaan ini.”

This is the answer received by Kulasegaran in the last week of December, 2011:

Kategori SekolahRMKe – 9 (RM)RMKe – 10 (RM)
SJK ( C )6,457,080,8071,716,393,676
SJK ( T )2,481,674,380   584,382,340

 

கேள்வி வேறு; பதில் வேறு. தேசியப்பள்ளியின் மேம்பாட்டிற்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் என்ன ஒதுக்கீடு என்பதற்கு பதில் இல்லை.

9 ஆவது மலேசிய திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுதிக்கீடு கீழ்க்கண்டவாறு செய்யப்பட்டுள்ளது:

 All primary schoolsNational primary schools% of totalChinese primary schools% of totalTamil primary schools% of total
Total no. students3,044,9772,300,72975.6645,66921.298,5793.2
9MP Development-Million4,837.34,598.295.1174.33664.81.3
RM per student for 5 years1,5891,998 270 659 
RM per student per month26.4833.30 4.50 10.95 

 

இதே அடிப்படையில்தான் 10 ஆவது மலேசிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விபரம் கோரப்பட்டது. ஆனால், கிடைத்த பதில் வேறு. மேற்கானும் தகவலின் படி சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா ரிம174.33 மற்றும் ரிம64.8 மில்லியன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.

குலசேகரனுக்கு அளிக்கப்பட்ட பதிலில் 9 ஆவது மலேசிய திட்டத்தில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதி தலா ரிம6,457,080,807 மற்றும் 2,481,674,380 ஆகும்! இது உண்மையான தகவல் அல்ல.

விவாதத்திற்காக, 9 ஆவது மலேசிய திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிம2.4 பில்லியன்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டதாக எடுத்துக்கொண்டால், 10 ஆவது மலேசிய திட்டத்தில் அந்த ஒதுக்கீடு வெறும் ரிம5.8 மில்லியனுக்கு குறைந்தது எப்படி? இதுதான் நிலவரம் என்றால், நஜிப் ரசாக் மீது “நம்பிக்கை” வைத்தால் என்னவாகும்?

ஜனவரி 2012 இல், ஆறு புதிய தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டப்படும் என்று நஜிப் ரசாக் அறிவித்தார். இது என்ன அவரின் புதுத் திட்டமா? இந்த ஆறு பள்ளிகளில் ஒன்று பிஜேஎஸ் செலத்தான். இதற்கான நிலம் 1979 ஆண்டில் ஒதுக்கப்பட்டதாக அந்த இடம் அடங்கிய தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மஇகா முன்னாள் தலைவர் வி.மாணிக்கவாசகத்தின் சகோதரர் வி.எல். காந்தன் ஜனவரி 25 இல் கூறினார். 33 வருடங்கள் ஆகியும் அங்கு கட்டடம் எழவில்லை. கல்வி அமைச்சர்கள் ஹிசாமுடின், முகைதின், நஜிப் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியதாகவும் மனிதவள அமைச்சருடன் பலமுறை பேசியதாகவும் காந்தன் விபரமளித்தார். உடனடியாக கட்டடம் எழும் என்று அவர் “நம்பிக்கை” கொண்டுள்ளார்.

இன்னொரு 33 ஆண்டுகளில்,  அதற்குள் தமிழ்ப்பள்ளிகள் அழிக்கப்படாமல் இருந்தால், அவரது நம்பிக்கை ஈடேறலாம். ஏனென்றால், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு குறித்து ஒரு புதிய நகல்வரைவு திட்டம் வரைவதற்கு ஒரு மாநாடு நடத்த வேண்டிய தேவை உள்ளது என்று அதே அறிவிப்பில் “நம்பிக்கை” ஊட்டினார் நஜிப் ரசாக்.

இந்தியர்களின் கனவை நனவாக்கும் நஜிப்

அம்னோவின் “நம்பிக்கை” நாயகர் நஜிப் ரசாக் ஒரு விவகாரம் குறித்து இந்தியர்கள் அவர் மீது “நம்பிக்கை” வைக்க வேண்டும் என்ற கோரவில்லை. தமிழ்ப்பள்ளிகள் (சீனப்பள்ளிகள் உட்பட) மூடப்பட வேண்டும் என்பது அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” (Ultimate objective). அக்குறிக்கோளை ஆதரிப்பதாக அம்னோ துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் பகிரங்கமாக அறிவித்தார். அதுதான் பல அம்னோ தலைவர்களின், முக்ரிஸ் மகாதிர் உட்பட, உறுதியான நிலைப்பாடு. நஜிப் ரசாக் அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி என்றால், அவருக்கு அக்கொள்கையில் உடன்பாடு உண்டு. சந்தர்ப்பம் கிடைக்கும்போது, தமிழ்ப்பள்ளிகளுக்கு குழி தோண்டி விடுவார்.

இன்று, தைபூசம் கொண்டாடும் இந்துக்கு விடுத்த ஒரு செய்தில் இச்சமூகத்திற்கு அளித்துள்ள அவரது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் கடப்பாடு கொண்டுள்ளதோடு அவர்கள் தங்களுடைய கனவுகளை அடைவதற்கு என்ன தேவைப்படுகிறதோ அதனைச் செய்வோம் என்று நஜிப் ரசாக் (“We remain committed to fulfilling all our promises to the community and we’ll do what’s needed to help people achieve their dreams”) கூறியுள்ளார்.

இந்தியர்களின் தேவைகள் என்று கூறுகிறாரே தவிர, உரிமைகள் என்று கூறவில்லை. இந்தியர்களின் தேவைகள் குறித்து கேட்கப்படும், மகஜர்கள் அனுப்பப்படும் என்று அறிவிப்பதற்காக அமைச்சர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சி இயங்கி வருகிறது. இருப்பினும், இந்தியர்களின் இனிய கனவுகளில் ஒன்று தமிழ்ப்பள்ளிகள் அம்னோவின் இறுதிக் குறிக்கோள்  கொள்கையால் அழிக்கப்படாதிருத்தல். அம்னோவின் தலைவர் என்ற முறையில் நஜிப் ரசாக் அம்னோ உச்சமன்ற குழுவைக் கூட்டி அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கை அகற்றப்பட்டது என்று அறிவிக்கும் வரையில் என் மீது “நம்பிக்கை” வைக்க வேண்டாம். அந்த முடிவு எடுத்த பிறகு என் மீது “நம்பிக்கை” வையுங்கள் என்று அறிவிப்பாரா?

 அந்த அறிவிப்பும் செயல் திட்டமும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல், 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சர் ஹிசாமுடின் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கை “வழக்கற்றுப்போனது” என்று கூறிய கதையாகிவிடும்.

அம்னோ அரசாங்கம் மீது “நம்பிக்கை” வைத்த இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பல. :இந்தியர்களின் அன்றைய, இன்றைய நிலை குறித்து சிவமுருகன் பாண்டியன் அளிக்கும் மிகச் சுருக்கமான புள்ளி விவரம்:

“1958 இல் பொருளாதாரத்தில் 28% இப்போது 1.1%, சொத்துடமையில் 24% இப்போது 7.9%, பட்டதாரிகள் 34% இப்போது 0.9%, வங்கிகள் 3, இப்போது 0, அரசாங்க ஊழியர்கள் 63% இப்போது 3.7%, நிலவுடமை 37% இப்போது 0.8%, தமிழ்ப்பள்ளிகள் 1028 இப்போது 523, அமைச்சர்கள் 16 பேரில் 2 இப்போது 33 இல் ஒன்று…” (தமிழ் நேசன் 30.7.11)

இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டனர், சந்தேகமே இல்லை

இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்பது இந்திய மலேசியர்களின் கனவு. இவற்றுக்கும் மேலாக, இந்நாட்டு இந்திய மலேசியர்கள் அனைவரும் இந்நாட்டு குடிமக்கள், அவர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல. ஆகவே,  குடிமக்கள் என்ற உரிமை உடைய அவர்களின் உரிமைகள் சமமானதாக இருக்க வேண்டும் என்ற பெரும் கனவும் அவர்களுக்கு உண்டு. இந்திய சமூகத்தின் கனவுகளை நனவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து தம்மீது “நம்பிக்கை” வைக்கமாறு கோரும் அம்னோ தலைவர் இவற்றை எல்லாம் நிறை வேற்றிய பின்னர் தம் மீது “நம்பிக்கை” வையுங்கள் என்று அறிவிக்கத் தயாரா?

இந்திய மலேசியர்கள் அம்னோ தலைவர்கள் மீது “நம்பிக்கை” வைத்து கடந்த 54 ஆண்டுகளாக நாசமாக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மலேசியர்களின் இந்த படுமோசமான நிலையை உறுதிப்படுத்தியவர் எதிரணியினர் அல்ல. அவற்றை உறுதிப்படுத்தியவர் அம்னோவின் தீவிர பங்காளியான மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல்.

டிசம்பர் 23, 2010இல், தலைவராகப் பதவி ஏற்ற 17 நாள்களுக்குப் பிறகு ஜி.பழனிவேல் இந்தியர்கள் ஓரங்கப்பட்டவர்கள். அதில் சந்தேகமே இல்லை என்று பகிரங்கமாக கூறினார்.

இந்திய மலேசியர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றனர். இந்தியர்களை இவ்வளவு படுமோசமான நிலைக்குத் தள்ளிவிட்ட அம்னோ தலைவர் தாம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அடைவதற்காக இந்தியர்கள் அவர் மீது “நம்பிக்கை” வைக்க வேண்டும் என்கிறார். இவர் வாழ இந்தியர்கள் நாசமாக வேண்டுமா?