“இது என்ன பக்தி பரவசமூட்டும் பத்து மலையா? அல்லது பணத்திற்காக கேளிக்கையில் திகைக்கும் வியாபாரத் தளமா?” என வினவுகிறார் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் மற்றும் தாயாருடன் வந்திருந்த சுந்தரம், (வயது 43) என்பவர்.
கடந்த ஆண்டுகளை விட தற்போது நிலமை மிகவும் மோசமாகி விட்டதாக குறைபடும் அவர், கேளிக்கையில் திளைத்துள்ள நமது சமூகம் இப்படியே போனால் அந்த முருகன் கூட தாங்க மாட்டார் என்றார் மிகவும் உருக்கத்துடன்.
வண்ண விளக்குகளால் மிகவும் பிரமாண்டமான வகையில் அலங்கரிக்கப்பட்ட 140 அடி உயரமான பத்துமலை முருகனின் காலடியில் நேற்று இரவு முதல் பல்லாயிரக்கணக்கான் பக்தர்களும் வேடிக்கைப் பார்பவர்களும், வியாபரிகளும், சுற்றுலா பயணிகளும் தஞ்சம் புகுந்தனர். இதோடு நள்ளிரவு வானவேடிக்கை விண்ணைப் பிளந்தது.
நுழைவாயில் முதல் இரண்டு புறமும் கடைகள் போடப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்து குறுகலானது. இதனால் மக்கள் நெரிசல் தவிர்க்க இயலாத நிலையை அடைந்தது. குடும்பமாக பெண்களுடன் வருபவர்களின் நிலைமை அதில் மிகவும் தர்மசங்கடமானது. “இதில் எங்களால் எப்படி முட்டி மோதி போய் முருகனை தரிசிப்பது” என்கிறார்கள் நெரிசலில் மாட்டிக்கொண்ட வசந்தாவும் அவரது தோழிகளும்.
கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் பலரையும் இழுத்தது கேளிக்கை விளையாட்டு இயந்திரங்கள். பக்திக்கும் பணத்தை விரயமாக்கும் இந்த கேளிக்கையுக்கும் என்ன சம்பந்தம் என் வினவுகிறார் மனோகர் (வயது 38). இந்தோனேசியாவில் இருந்து வந்த இவர், பத்துமலையை கண்டு வியப்படைந்தாதாவும் அதன் நிர்வாகத்தை பாராட்டுவாதாவும் கூறினார். அதேவேளை, பண்பாட்டை சூரையாடும் கேளிக்கையை, மலேசியத் தமிழர்கள் இதில் இணைக்ககூடாது என்பது தனது ஆலோசனை என்றார். இதை ஆமோதித்தார் புத்ராஜெயாவில் பணிபுரியும் அவரது நண்பர் சகுந்தலா, “கேளிக்கைதான் நமக்கு கெந்திங், சன் வே பிரமிட், டைம்ஸ் ஸ்குவேர், மைன்ஸ் என்று பல இடங்கள் உள்ளன, அதை இதுலே வேறு போடனுமா?” என்கிறார்.
“நமது பண்பாட்டு கலை நிகழ்வுகளை நடத்தலாம்” என்றவர் பத்துமலை தை பூசத்திருவிழா பணம் கரக்கும் வியாபாரமாக மாறி வருவதை கண்டு மனம் வருந்துவதாகவும், மிகச்சிறப்பாக செயல்படும் பத்துமலை தேவஸ்தானம், திருப்பதி, பழநி போன்ற இடங்களின் செயல்படுத்தப்படும் வழிமுறைகளை கையாளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விரிவுரையாளர் சுப்ரமணியம், மக்கள் போடும் குப்பைகளை கண்டு மனம் வருந்தினார். “இது நமது பண்பாடாக உருவாகக்கூடாது, பக்தி என்பது ஒரு வாழ்வியல், ஒழுக்கம் அற்றது பக்தியாகது” என்கிறார்.
“அனைத்தையும் முருகன் பார்த்து, கோயில் நிர்வாகத்தின் போக்கை மாற்றுவார்” என்று ஒரே வரியில் முடித்தார், மை இந்தியின் கூடாரத்தில் சேவையாற்றும், பெயரை கூறிப்பிட வேண்டாம் என்ற ஒரு நங்கை.