-ஜீவி காத்தையா, 8.2.2012
நஜிப் ரசாக் அம்னோவின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்ற நாளிலிருந்து சீன மற்றும் இந்திய மலேசியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தும் பேரத்தில் ஒரு சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார். அது இதுதான்: சீனர்களும் இந்தியர்களும் பாரிசானுக்கு வாக்களித்தால், அவர் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உதவ முடியும் (“You help me, and I can help you”). இதன் அடிப்படை அர்த்தம் முதலில் நீங்கள் பாரிசானுக்கு வாக்களியுங்கள், அதன் பின்னர்தான் உங்களுக்கு உதவ முடியும் என்பதாகும்.
பலர் இதனைக் கேளியாக “You scratch and I can scratch” என்று கூறுகின்றனர்.
இச்சூழ்ச்சியை அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து நேற்று பத்துமலையில் நடந்த தைப்பூச திருநாள் வரையில் பயன்படுத்தி வந்திருக்கிறார். இப்போது “நம்பிக்கை” என்ற சொல்லையும் சேர்த்திருக்கிறார்: “You help me, and I can help you. Nambekei. You trust me and I trust you”, என்று நஜிப் நேற்று பத்துமலையில் உரையாற்றுகையில் கூறினார்.
முதலில், இந்தியர்கள் பாரிசானுக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு உதவ முடியும் என்று நஜிப் கூறி வந்துள்ளாரே தவிர “உதவுவேன்” என்று கூட அவர் கூறவில்லை.
கடந்த ஆண்டு மஇகாவின் 65 ஆவது பேராளர் மாநாட்டில் ஆற்றிய உரையில் முதலில் வாக்களியுங்கள், அதன் பின்னர் உதவ முடியும் என்றுதான் கூறினார்.
பிரதமரே, நீங்கள் முதலில் உதவி செய்யுங்கள். பின்னர் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று இதுவரையில் எவரும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ நஜிப்பிடம் கூறியதில்லை.
நேற்று, பத்துமலையில் நஜிப்பிடம் முதல் முறையாக, முதலில் நீங்கள், பின்னர் நாங்கள், என்ற அடிப்படையில் கோரிக்கை விடப்பட்டது என்று கூறலாம். அதாவது, முதலில் எங்களுக்கு வேண்டியதைக் கொடுங்கள், பின்னர் நாங்கள் உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம் என்பதாகும். முதலில் நீங்கள் சொறியுங்கள், பின்னர் நாங்கள் சொறிகிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
பத்துமலை முருகன் திருத்தலத்தில் பிரதமர் நஜிப்பை வரவேற்று உரையாற்றிய கோயில் தலைவர் ஆர். நடராஜா, நஜிப் பாணியில், அவர் கொடுத்தால், பின்னர் அவருக்கு வேண்டியது அவருக்கு கிடைக்கும் என்று நஜிப்பிடம் கூறினார்.
“நீங்கள் கொடுத்தால், பின்னர் உங்களுக்கு வேண்டியது, உங்களுக்குக் கிடைக்கும்” (“…if you give, then what you want, you will get”) என்று நடராஜா அவரது வரவேற்புரையில் கூறினார்.
“எங்களிடம் சக்திவாய்ந்த கோயில் இருக்கிறது” (“We have a powerful temple”) என்று கூறி தமது கோரிக்கையை முன்வைத்த நடராஜா, இந்திய மலேசியர்களின் உரிமைகள் அவர்களுக்கு அளிக்கப்படுத்துவதை பாரிசான் அரசாங்கமும் நஜிப்பும் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்தியர்களின் வாக்குகள் பாரிசானுக்கு கிடைக்கும் என்று அவர் கூறவில்லை. அவருக்கு அந்த எண்ணமோ இலட்சியமோ இருக்கிறது என்று கூற முடியாது.
தம்மை பிஎன் ஆதரவாளர் என்றும் சிலாங்கூர் மாநில பிகேஆர் அரசாங்கத்தை ஆதரித்ததே இல்லை என்றும் கூறிக்கொண்ட நடராஜா, கோயிலுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வழக்கம் போல் மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்காமல் நஜிப் நேரடியாக அவரிடமிருந்து தம்மிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அவர் கெஞ்சிக் கெஞ்சி அலுத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. (“Datuk Seri, you give from your side to may side. Don’t go through the government. I don’t want to beg, beg, beg…We have a very powerful temple, if you give, then what you want, you will get.”) இந்தியர்கள் பாரிசான் அரசிடம் எப்படி எல்லாம் கெஞ்ச வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
மேலும், நடராஜா அவரது உரையில் விடுத்த நான்கு கோரிக்கைகள் – 1.பத்துமலையில் ஒரு பண்பாட்டு மையம் மற்றும் ஒரு மண்டபம். 2. இந்து கோயில் விவகாரங்களுக்கு ஜி.பழனிவேல் தலைமையில் ஒரு சிறப்புப் பிரிவு. 3. அப்பிரிவு செயல்படுவதற்கு நிதி. 4. தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை – நஜிப்புக்கு சோதனையாக அமைந்து விட்டது. முருகன் திருத்தலத்தில் நஜிப்புக்கு சோதனை!
பண்பாட்டு மையம் குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அத்திட்டத்தை தொடங்குவதற்கு ரிம2 மில்லியன் வழங்கப்படும் என்று நஜிப் அறிவித்தார். ஆனால், இதர கோரிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
என்னை நம்புங்கள். என்னை நம்பி பாரிசானுக்கு வாக்களியுங்கள் என்று இந்தியர்களிடம் வாக்கு வேட்டையாடும் நஜிப், வாக்களிப்பதற்கு முன்னதாக விடுக்கப்பட்ட சாதாரண கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்ற உத்தரவிடுகிறேன் என்று கூற அவர் தயாராக இல்லை என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது.
நடராஜா தெரிந்தோ தெரியாமலோ “நீங்கள் கொடுத்தால், பின்னர் உங்களுக்கு வேண்டியது, உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறியதை ஏற்றுக்கொள்ள இயலாத நஜிப்பின் “என்னை நம்புங்கள்” என்ற வேண்டுகோள் ஒரு சூழ்ச்சி என்பதும் நஜிப்பை நம்பக்கூடாது என்பதும் முருகன் திருத்தலத்தில் தைப்பூச நாளில் முடிவானது என்பதை இந்திய மலேசியர்கள் கவனத்தில் கொண்டால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
“எங்களிடம் சக்திவாய்ந்த கோயில் இருக்கிறது” என்று நடராஜா கூறியதுபோல், இந்திய மலேசியர்கள் தங்களிடம் சக்தி வாய்ந்த வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகள் வேண்டும் என்றால் இந்தியர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதுவும் தேர்தலுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நஜிப்பிடம் இந்தியர்கள் நேரடியாக கூற வேண்டும்.