நேர்காணல்: முருகன் திருத்தலத்தில் முருகன் மட்டுமே முதல்வன்!
மீனாட்சி: இரண்டு வருடங்களுக்கு முன்பு பத்துமலை பற்றி ஒரு முக்கியமான கருத்து தெரிவிக்கப்பட்டது. பத்துமலை ஒரு வழிபாட்டுத் தலம். அங்கு தமிழ்ப்பள்ளி இருக்கிறது. வழிபாட்டுத்தலத்தின் புனிதத்தன்மையையும் மாணவர்களின் கட்டொழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும், பாதுக்காக்க வேண்டும். ஆகவே, பத்துமலை ஒரு சுற்றுப்பயண கேளிக்கைத் தளமாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது அக்கருத்தாகும். இக்கருத்தை தெரிவித்தவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகமட் இட்ரீஸ்.
இக்கருத்தை யாரும் காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. சுற்றுலாத்துறை பணத்தைக் கொண்டுவரலாம். பாதகத்தையும் கொண்டு வருகிறது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தாகும்.
அதிகமான சுற்றுலா பயணிகள் பத்துமலைக்கு வருகிறார்கள். வெளிநாடுகளில் பத்துமலை மலேசியாவின் அடையாளம். மெல்போர்னின் ஆஸ்திரேலியர்கள் இப்படி கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.
நமது அரசாங்கத்தின் திட்டமும் பத்துமலையை சுற்றுப் பயணிகளைக் கவரும் நிரந்தர இடமாக்குவதுதான். பல இடங்களை செயற்கையாக மேம்படுத்தி சுற்றுப் பயணைகளைக் கவரும் அரசாங்கத் திட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால், பத்துமலை நிரந்தரமானது. இந்தியர்கள் ஆண்டுதோறும் எவ்வித உந்துதலுமின்றி ஒன்றுகூடி தங்களுடைய சமயக் கடப்பாட்டை வெளிப்படுத்தும் திருத்தலம் பத்துமலை.
அவர்களுடைய குறிக்கோளுக்கு நாம் இறையாகி விடக்கூடாது. எதற்கும் ஓர் எல்லைக்கோடு உண்டு. பத்துமலை முருகன் திருத்தலத்தில் அக்கோடு வரையப்பட வேண்டும். அதனைச் செய்ய சாதாரண மக்கள் களம் இறங்க வேண்டும்.
காளியம்மாள்: எனக்கு இப்போது வயது 73. எனது பத்தாவது வயதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பத்துமலைக்கு தவறாமல் போய் வருகிறேன். ஒரு காலத்தில் அந்த திருத்தலத்தில் காணப்பட்ட பக்தி உணர்வு, அமைதி, கட்டுப்பாடு இப்போது இல்லை என்று நான் அடித்துக் கூறுகிறேன். உண்மையான பக்தர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். தங்களுடைய காணிக்கையை பக்திப்பூர்வமாக முருகனுக்கு செலுத்த கூடும் பக்தர்கள் கடும் சோதனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஏன் வந்தோம் என்று வருத்தப்படும் அளவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இன்று பேச்செல்லாம் பணம் பற்றியதுதான். பத்துமலை அதற்கு விதிவிலக்காகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், பத்துமலையின் மூலகாரணம் முருகனின் பக்தர்கள். அத்தலத்தில் அவர்களுக்குத்தான் முதலிடம்.
ஆனால், நான் காண்பதெல்லாம் பணம் பண்ணுகிறவர்களின் ஆதிக்கம்தான். கேட்பதெல்லாம் அரசியல்வாதிகளின் கூப்பாடுகள்தான். இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
முருகனுக்கு காணிக்கை செலுத்த வரும் உண்மையான பக்தர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக்கொண்டு அங்கு வருகிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்காவது மற்றவர்களிடம் இருக்க வேண்டும்.
நான் கேட்பது regimentation அல்ல, சுயக்கட்டுப்பாடு. இப்போதுல்ல நடைமுறை தொடர்ந்தால், பத்துமலை முருகனின் திருத்தலமாக இருக்காது. மூர்க்கர்களின் கேளிக்கை தளமாக மாறிவிடும். அரசாங்கம் மகிழ்ச்சி அடையும்.
ஜானகி: பத்துமலையில் இந்திய மக்களின் கூட்டம். ஆண்டுக்கு ஒரு நாள் பத்துமலை ஒரு மினி இந்தியா. பெருமைப்படுகிறேன்.
இது பணம் கொடுத்து கூடும் கூட்டமல்ல. நாட்டிலே மிகப் பெரிய திருவிழா. தகப்பனுக்கு தகப்பனான முருகன் வீற்றிருக்கும் இடத்தில் போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வு, அரசியல் வேறுபாடு, மொழி வேறுபாடு போன்ற அனைத்து விகாரமான போக்குகளும் ஒரு கணம் மறைந்து மனிதர்கள் சமமாகின்றனர். இதிலிருந்து நமது அன்றாட வாழ்க்கைக்கு, உரிமைக்கு ஏதாவது பாடம் உண்டா?
என் தாத்தா ஓர் INA வீரர். நேதாஜி “சலொ” என்றதும் கால்கள் ஓடும். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மதபேதங்களுக்கு அப்பாற்பட்டது நேதாஜியின் தலைமைத்துவம் என்று என் தாத்தா அடிக்கடி சொல்வார்.
நமக்கு இப்போது அப்பேற்பட்ட தலைவர் கிடையாது. நான் நினைக்கிறேன் ஏன் முருகன் நம் அனைவருக்கும் தலைவனாகக் கூடாது. அவன் குடியிருக்கும் பத்துமலை ஏன் நமது போராட்ட கூடாரமாகக்கூடாது. தைப்பூச திருநாளை பத்துமலையில் காணும் உலகம் நமது உரிமைப் போராட்டங்களையும் பத்துமலையில் காணலாம். அமைதியான போராட்டத்திற்கு பத்துமலை ஓர் அருமையான இடமாக இருக்கும். பிரதமர் அங்கே வந்து பதில் கூறலாம். எல்லாவற்றுக்கும் முருகன் – பத்துமலை!
ஆனால் இதனைச் செய்வதற்கு சிந்தனை மாற்றம் தேவை. முதலில், கோயில் நிருவாகம் கதவை இழுத்துப் பூட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும். முருகன் வழி காட்டுவான்.
நாகம்மாள்: பத்து ஆராங் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்பட்ட கதிதான் பத்துமலைக்கும் இறுதியில் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். அப்பள்ளியின் இரண்டு கட்டடங்களும் உயர்ந்த கூரைகளைக் கொண்டிருந்தன. இன்று அவை கூனி நிற்கின்றன. அக்கட்டங்களின் முன்வாசல்களுக்கு முன்னால் விசாலமான நிலம் இருந்தது. அதில் பேட்மிண்டன் திடல் இருந்தது. அதனை அடுத்து அகண்டசாலை இருந்தது. இன்று முன்வாசல்கள் இல்லை. பேட்மிண்டன் திடல் இல்லை. மாறாக சிறிய சாலை அமைந்திருக்கிறது. பள்ளியின் பின்புறத்தில் இருந்த மிக பெரிய நிலம் குறுகிப்போய் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் பறிபோய் விட்டது.
பத்துமலை கோயில் வாயிலைத் தொட்டுக்கொண்டு செல்கிறது அங்குள்ள சாலை. அடுத்து இருக்கும் மேம்பால சாலை கோயில் முன்வந்து இணைகிறது. கோயிலின் முன் பல மேம்பாலங்கள் வலைந்து வலைந்து செல்கின்றன. ஏன், சாலைகளை சற்று தொலைவில் அமைப்பதற்கு நிலம் இல்லையா? கோயிலை மறைக்கும் அளவுக்கு ஏன் இத்தனை மேம்பாலங்கள்? கோயிலைச் சுற்றி கடைகள் போன்ற இதர கட்டடங்கள். பத்துமலை முருகன் திருத்தலம் விரிவாக்கம் காண்பதற்கான இடமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், சாலை விரிவாக்கம் என்ற நிலை வரும். அப்படி வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக திருத்தலம் பிந்தள்ளப்படும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன என்பதை நமது மக்கள் அறிவார்கள்.
முருகன் சிலையை அகற்ற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதாகவும் நான் கேள்விப்பட்டதுண்டு. அக்கோரிக்கையை கோயில் நிருவாகம் திடமாக மறுத்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். இதற்கு நன்றி கூறுகிறேன். இதே நிலைப்பாட்டுடன் ஓர் அங்குல இடம் கூட விட்டுக்கொடுக்கக் கூடாது.
தனா: சுதந்திரமாக இயங்கும் கோயில் இங்கு கிட்டத்தட்ட இல்லை. ஒவ்வொரு கோயிலும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் தூண்டிலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. பணம் வேண்டுமே. நாட்டின் மிகப் பெரிய கோயிலான பத்துமலை முருகன் கோயில் பணத்திற்காக அரசாங்கத்திடம் பிச்சை, பிச்சை, பிச்சை கேட்டு நலிந்துபோன கோயில் தலைவர் நடராசா பிரதமர் நஜிப்பிடம் நேரடியாக டீல் பண்ணிக்கலாம் என்று பகிரங்கமாக தைப்பூசத்தன்று கூறியுள்ளார். அதற்கான விலை: தாம் பின் ஆதரவாளர் என்ற பகிரங்க அறிவிப்பு. இப்போது புரிகிறது ஏன் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் கோயிலுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் போலீஸ் புகார்கள்.
நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி தலைவர் நஜிப். அதே மன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அன்வார். இருவரும் சேர்ந்ததே நாடாளுமன்றம். ஆனால் இருவரும் தலைவர்கள். இன்று நஜிப்பிடம் பணம் கறப்பதற்காக அவரின் ஆதரவாளர் என்று கூறும் கோயில் தலைவர் நாளை அன்வார் அல்லது வேறு எவரும் பிரதமராகி விட்டால், பணம் கறக்க என்ன பேசுவார்?
கோயில் தலைவர் ஒரு குடிமகன் என்ற முறையில் ஓர் அரசியல் கட்சியை ஆதரிப்பது அவரது உரிமை. ஆனால், அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு கோயிலை அடமானம் வைக்கும் உரிமை அவருக்கு இல்லை. கோயில் பொதுச் சொத்து. பொதுமக்கள் இதனை கோயில் தலைவர்களுக்கு நினைவுறுத்த வேண்டும்.
பத்துமலை திருத்தலத்தின் தலைவன் முருகன். அங்கு அவனைவிட உயர்ந்தவர் யாருமில்லை. அங்கு நஜிப் வரலாம். அன்வார் வரலாம். அவர்களுக்கு தரமும், தகுதியும், அதற்கான மனப்பாங்கும் இருந்தால் முருகனை தரிசிக்கலாம். அவர்களுக்கு அத்தகையப் பரந்த மனப்பாங்கு நிச்சயமாக கிடையாது. ஆகவே, வாரும், கையை அசைத்துக்காட்டி விட்டு போய்விடும். அரசியல் பேசாதீர், நம்பிக்கை வாக்கு கேட்காதீர், மான்யம் அறிவிக்காதீர். இது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும்.
செல்லம்: எனக்குத் தெரிந்த வரையில், பத்துமலை பலருக்கு ஓர் உண்மையான முருகன் திருத்தலம். அங்கு வரும் அவர்களின் ஒரே நோக்கம் முருகனை தரிசிப்பதுதான். மற்ற பெரும்பான்மையான இந்துக்களுக்கு பத்துமலை ஒரு கேளிக்கைத்தளம், வியாபாரத்தளம். பெரும்பாலான இதர இனத்தவர்களுக்கு அது ஒரு வேடிக்கைத்தளம். வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு வினோதமானத்தளம். அரசாங்கத்திற்கு சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வளமான இடம்.
பத்துமலை பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த மாற்றம் மக்களை அன்பும், பண்பும், பக்தியும் உடையவர்களாக்கியுள்ளதா என்பதுதான் பெரும் கேள்வியாகும்.
முருகனை தரிசிக்க வரும் பக்கதர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துத் தருவது கோயில் நிருவாக்கத்தின் முதற்கடமையாக இருக்க வேண்டும். கடைகள் பக்தர்களுக்கு எந்த வகையிலும் சிரமம் அளிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். சூதாட்ட கேளிக்கை மையங்கள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். காதுகளைச் செவிடாக்கும் ஓசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
முருகனை தரிசிப்பதற்கான ஏற்பாடுகளைத் தவிர வேறு எதற்காகவும் எவருக்காகவும் எவ்வித தனிப்பட்ட சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படக் கூடாது. இவற்றின் மீது கவனம் செலுத்தி பத்துமலை திருத்தலத்தலம் தைப்பூசத்தன்று பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருப்பதை கோயில் நிருவாகம் உறுதி செய்தால், இந்திய மக்களின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல நல்வழிப்பாதை தோன்றுவதைக் காணலாம் என்று நான் நம்புகிறேன்.
மஞ்சள் மங்களகரமானது. தைப்பூச நாளில் பத்துமலை திருத்தலத்தில் எல்லாம் மஞ்சளாக இருக்க வேண்டும். அத்தலத்தில் அன்று இருப்பவர்கள் அனைவரும் மஞ்சள் உடை அணிந்திருக்க வேண்டும். இது நம்மை ஒருமைப்படுத்தும் ஓர் அடையாளமாக இருக்கும். சீன பெரும்சுவரை எப்படி விண்வெளியிலிருந்து காண முடிகிறதோ அப்படி பத்துமலை முருகன் திருத்தலத்தை தைப்பூசத்தன்று மஞ்சள் நிறத்தில் மேலிருந்து காணலாம்.