எப்படிப் பெற்றோம் மெர்டேகா? போதுமய்யா… விட்டு விலகய்யா!

(டாக்டர். டி. ஜெயக்குமார்) அவசரகாலச் சட்டத்தின் (இஓ) கீழ்த் தடுத்து வைக்கப்பட்ட நான்  திடீரென்று விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தித்த நண்பர்கள் அனைவரும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதைப் அறிந்து கொண்டேன். இஓ-வின்கீழ் நாங்கள் அறுவர் தடுத்து வைக்கப்பட்டது, பெர்சே 2.0 பேரணியில் பங்கேற்கும் மலேசிய மக்களைப் பயமுறுத்த பிஎன் அரசு மேகொண்ட தந்திரம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். 

அந்த இஓஅறுவரும் பிஎஸ்எம்மும் பொது ஒழுங்குக்கும் தேசிய பாதுகாப்புக்கும் மருட்டலாக இருந்தார்கள் என்று குற்றச்சாட்டு அபத்தமானது, கொஞ்சமும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்களின் கருத்து.

போலீஸ் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியது பற்றியெல்லாம் சில நிமிடங்களுக்குக் காரசாரமாக திட்டித் தீர்த்த பின்னர் அவர்களில் பலர், “டி-சட்டைகள் (கம்யூனிஸ்ட் தலைவர்கள் உருவப்படங்கள் கொண்டவை) கண்டெடுக்கப்பட்டனவே, போலீசார்தான் அவற்றை வைத்தார்களா?” என்று கேட்கிறார்கள்.

இல்லை. அந்த ஒன்பது டி-சட்டைகளையும் – ஐந்தில் சுரியானி அப்துல்லாவின் படம், இரண்டில் அப்துல்லா சிடியின் படம், ஒன்றில் ரஷிட் மைடின் படம் இன்னொன்றில் சின் பெங் படம் – யாரும் அங்கு வைக்கவில்லை. அவை எங்களுடையவைதாம்.

அவை, ஜூன் 3 சுங்கை சிப்புட் பிஎஸ்எம் காங்கிரசில் விற்கப்பட்டவை போக மீதமிருந்தவை.

அவை இருந்த அட்டைப் பெட்டியும் “Udahlah” இயக்கத்தின் துண்டறிக்கைகளுடன் பேருந்தில் வைக்கப்பட்டிருந்தது. போலீஸ்காரர்கள் மட்டும் அவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரபலப்படுத்தாமல் இருந்திருந்தால் அவை அப்படியே கவனிப்பாரின்றிக் கிடந்திருக்கும்.

எங்களின் “Udahlah tu … Bersaralah” இயக்கத்துக்கு அந்த டி-சட்டைகளைப் பயன்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இருந்ததில்லை. ஏனென்றால் எங்கள் இயக்கத்துக்கு அந்தச் சட்டைகள் பொருத்தமற்றவை. போலீசார் எங்களைக் கைதுசெய்து பேருந்தைச் சோதித்தபோதுதான் அவை அங்கிருப்பதே எங்களுக்குத் தெரிய வந்தது.

அது சரி, அந்த டி-சட்டைகள் எதற்காக வைத்திருந்தீர்கள்?

நியாயமான கேள்விதான். அதற்கு நியாயமான பதிலும் இருக்கிறது. அதற்குமுன் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைச் சற்று விளக்க வேண்டியிருக்கும்.

சிபிஎம் (மலாயா கம்யூனிஸ்ட் கட்சி) சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதா?

1990-களில் தோட்டத் தொழிலாளர்கள், நகர்ப்புற குடிசைவாசிகள், அரசுநிலங்களில் காய்கறி வளர்த்துப் பிழைப்பு நடத்துவோர், இன்னும் ஆதாயத்தையே நோக்கமாகக் கொண்ட மேம்பாட்டுப் பணிகளால் ஓரங்கட்ட மக்கள் ஆகியோரின் நலனுக்காகப் போராடிவந்த சமூக ஆர்வலர்களின் அரசியல் வெளிப்பாடாக உருவானதுதான் பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி).

மற்றபடி மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) யைப் பார்த்து அமைக்கப்பட்ட கட்சி அல்ல அது.

பிஎஸ்எம்மை அமைத்து எங்கள் திட்டங்களை “சோசலிச”திட்டங்கள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்த பிறகு, மலாயாவிலும் எங்களுக்குமுன் செயல்பட்டிருந்த இடச்சாரி, முற்போக்குத் தரப்புகள் பற்றி – ஏஎம்சிஜேஏ-புத்ரா கூட்டணி, சிபிஎம், தொழிலாளர் கட்சி, பார்டி ரக்யாட் மலேசியா போன்றவற்றின் வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும் எங்களுக்கு ஏற்பட்டது.

மைக்கல் ஸ்டென்சன், கே.தாஸ், சைட் ஸஹாரி, கொலின் இப்ராகிம் போன்றோரும் மற்றவர்களும் எழுதிய வரலாறுகளைப் படித்த பின்னர் பிஎன் அரசு, சிபிஎம் தலைவர்களையும் மற்ற இடச்சாரித் தலைவர்களையும் இரத்தவெறி கொண்ட வில்லன்களாகச் சித்திரித்துக்காட்டுவது சரியல்ல என்பதை உணர்ந்தோம்.

இங்கு சில வரலாற்று உண்மைகளை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்:

(அ) இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், எல்லா இடச்சாரித் தரப்புகளுமே பொது அரசியலில் களமிறங்கி சுதந்திரம் விரைந்து கொடுக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன. அவை எல்லாமே ஏஎம்சிஜேஏ-புத்ரா கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. ரஷிட் மைடினும் அப்துல்லா சிடியும் பிஎம்எப்டியு(மலேசிய தொழிற்சங்கக் கூட்டிணைப்பு)வில் இருந்தனர். அதுவும் ஏஎம்சிஜேஏ-இல் இடம்பெற்றிருந்த முக்கிய அமைப்பாகும்.

ஏஎம்சிஜேஏ-புத்ரா கூட்டணி, 1947 பிப்ரவரியில் “மக்கள் அரசமைப்பு” என்ற ஒன்றை முன்வைத்தது. ஆனால், பிரிட்டிஷார் அதை ஏற்கவில்லை. அதனால் அது 1947-இல், “ஹர்தால்” ஒன்றை ஏற்பாடு செய்தது. ஹர்தால் என்பது வன்முறையற்ற முழு வேலைநிறுத்தம். தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல மாட்டார்கள், கடைக்காரர்கள் கடைகளைத் திறக்க மாட்டார்கள், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள்.

அந்த 1947 ஹர்தாலால் நாட்டின் பொருளாதார செயல்பாடு மொத்தமும் ஒரு நாள் நின்றுபோனது. ஆனாலும் ஏஎம்சிஜேஏ-புத்ரா கூட்டணி எதிர்பார்த்ததுபோல் காலனிய அரசுடன் பேச்சுகள் தொடங்கவில்லை.

இதிலிருந்து ஆயுதப் போராட்டம் அக்கூட்டணியின் நோக்கமாக முதலில்  இருந்ததில்லை என்பதும்  மக்களாட்சி வழிமுறைகளைப் பின்பற்றியே அது தன் நோக்கத்தை அடைய முயன்றது என்பதும் தெரிகிறது.

(ஆ) 1948 ஜூன் மாதம்,ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்குமுன்பே காலனிய அரசு  ஏஎம்சிஜேஏ-புத்ராவுக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொண்டது. அதற்குச் சில எடுத்துக்காட்டுகள்:

•ஏஎம்சிஜேஏ-புத்ரா கூட்டணியில் அங்கம் பெற்றிருந்த அப்பி (அங்காத்தான் பெமூடா இன்சாப்) தலைவர் அஹ்மட் போஸ்தமான்,1947-இல் கைது செய்யப்பட்டு எட்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார்.

•1947-இல், புதிய தொழிற்சங்கச் சட்டம் கொண்டுவரப்பட்டு பிஎம்எப்டியு-வில் இடம்பெற்றிருந்த 87 விழுக்காட்டுத் தொழிற்சங்கங்களின் பதிவு ரத்துச் செய்யப்பட்டது. அவை திரும்பவும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அவை அவ்வாறு செய்ய முனைந்தபோது அவற்றின் விண்ணப்பம் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. அதன் காரணமாக அவை “சட்டவிரோத”அமைப்புகளாகின. பிஎம்எப்டியு-வையே பதிவு செய்ய முடியவில்லை.

•(கள்ளுக்கு எதிரான) தொண்டர் படையும் கடும் எதிர்ப்பைப் பெற்றது. கெடாவில் கள்ளுக்கடைகளில் மறியல் நடவடிக்கையில் ஈடுபட்ட தொண்டர் படையினரைக் காலனிய போலீசார் அடித்து உதைத்ததில் சிலர் செத்துப்போனார்கள் (விவரம் காலின் எப்ராகிமின் ‘Their Finest Hour’நூலில் காண்க).

• தோட்டங்களில் மே தினக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த தொழிற்சங்க ஆர்வலர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். அவர்களின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார் (காலின் எப்ராகிமின், படத்தில் சின் பெங்கின் இடப்புறம் இருப்பவர்,  நூலில் காண்க).

இப்படிப்பட்ட சூழலில்தான் சிபிஎம் ஆயுதமேந்த முடிவு செய்தது. இப்படி ஒரு முடிவுக்கு அது தள்ளப்பட்டதற்கு காலனிய அரசின் ஒடுக்குமுறைதான் காரணம் என்றும் வாதிடலாம்.

மூன்றாவதாக, இன்னொரு வரலாற்று உண்மையையும் – 1955 பாலிங் பேச்சுகளையும – கவனமாக ஆராய வேண்டும்.அதில் மலாயாவின் மக்களாட்சி நடைமுறைகளில் பங்கேற்க இடமளித்தால் ஆயுதங்களைக் கைவிட சின் பெங், ரஷிட் மைடின் முதலிய சிபிஎம் தலைவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால் அவ்விசயத்தில் துங்கு அப்துல் ரஹ்மானும் டேவிட் மார்ஷலும் கெடுபிடி செய்தார்கள் – “முதலில் சரணடையுங்கள். எப்போது தேர்தலில் பங்குபெறலாம் என்பதை அதன்பிறகு முடிவு செய்வோம்”என்றனர்.

சிபிஎம்-மை அரசியலைவிட்டு ஒதுக்கி வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் சுதந்திரம் என்று பிரிட்டிஷார் துங்குவிடம் திட்டவட்டமாக நிபந்தனை போட்டிருந்தார்கள் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. சுதந்திரத்துக்குப் பின்னரும் பிரிட்டனின் வளமான வாழ்வுக்கு மலாயா தேவைப்பட்டது.

கம்யூனிஸ்ட் போராட்டம் நாடு சுதந்திரம் பெற்றதும் முடிந்திருக்கும். ஆனால், பிரிட்டன் சிபிஎம்மை எப்போதும் அடக்கி வைத்திருக்கவே விரும்பியது. அதன் விருப்பத்துக்கு கூட்டணி அரசும் தாளம் போட்டது.

1955-க்குப் பின்னர் காடுகளில் தலைமறைவுப் போராட்டம் தொடர்ந்ததற்கும் அதில் பல உயிர்கள் பலியானதற்கும் சின் பெங்கும் சிபிஎம்-மும் மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. துங்குவின் தலைமையில் அமைந்த கூட்டணி அரசும் பிரிட்டனும்கூட அதற்குக் காரணமாகும்.

நம் நாட்டு வரலாற்றை இந்த அடிப்படையில் ஆராய்ந்துதான் பிஎஸ்எம், சிபிஎம் தலைவர்களை “மெர்டேகா போராளிகளாக”, சுதந்திரப் போராட்ட வீரர்களாக கருதுகிறது. அவர்கள் அன்று மிகவும் வல்லமை பொருந்திய காலனிய வல்லரசாக விளங்கிய பிரிட்டனை எதிர்த்துப் போராடியவர்கள். மலேசியாவில் சுதந்திரமான, நீதிமுறைப்படி அமைந்த சமுதாயத்தை உருவாக்குவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

“ஆயுதப் போராட்டம்”தான் அரசியல் அதிகாரம் பெறும் வழி என்பதில் பிஎஸ்எம்-முக்கு நம்பிக்கை இல்லை  என்றாலும் சிபிஎம் தலைவர்களைச் சுதந்திரப் போராளிகளாகவே அது கருதுகிறது.

பிஎன் என்னதான் பிஎஸ்எம்மைப் பற்றிப் பரப்புரை செய்துவந்தாலும் சிபிஎம்மின் பெயரையும் தோற்றத்தையும் நிலைநிறுத்த பிஎஸ்எம் முயல்வதில்லை, அதற்கு அது முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை.

ஆனாலும் வரலாற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கடந்த காலப் போராட்ட உண்மைகளைச் சரியாக தெரிந்துகொள்ளலாம். இன்று, சாதாரண மலேசியர்கள் நவீன-தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்கொள்கைகளின் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்கின்றன, தொழிலாளர் சம்பளம் உயர்வதில்லை.

தோட்டங்களில் உள்ளவர்களும் நகர்ப்புற குடிசைவாசிகளும் வாழுமிடத்திலிருந்து எந்த நேரத்திலும் அப்புறப்படுத்தும் அபாயத்தை எதிர்நோக்குகிறார்கள். நாட்டின் அரசியல் மேம்பட அம்னோ/பிஎன் ஆட்சியை அகற்ற வேண்டும். புத்ரா ஜெயாவில் பக்காத்தான் ரக்யாட்டை அமர்த்த வேண்டும். இவற்றுக்குத்தான் பிஎஸ்எம் முன்னுரிமை கொடுக்கிறது. 

பிஎஸ்எம் மத்திய செயல்குழு சிபிஎம் தலைவர்களின் உருவப்படங்கள் அடங்கிய டி-சட்டைகளைக் கொள்முதல் செய்யவில்லை. பிஎஸ்எம் காங்கிரஸ் நடைபெற்றபோது – அது பிஎஸ்எம் உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வு – அதில் மற்றவற்றோடு இந்த டி-சட்டைகளும் விற்கப்பட்டன. அதன் விற்பனையை நிறுத்துவது அவசியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. 

அதை வாங்குவதும் விற்பதும் சட்டமீறல் என்றும் நினைக்கவில்லை. மேலும்,சிபிஎம் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் கடைகளில் தாராளமாக விற்கப்படுகின்றன. காங்கிரசில் விற்கப்பட்ட இச்சட்டைகள் எப்படியோ பேருந்தில் வந்து தங்கிவிட அதற்காக எங்களில் சிலர் விசாரணை ஏதுமின்றி கிட்டதட்ட ஒரு மாதம் தடுப்புக்காவலில் இருக்க வேண்டியதாயிற்று. 

ஆனாலும், நாங்கள் சட்டத்தைமீறி எதையும் செய்யவில்லை என்பதிலும் டி-சட்டைகள் வைத்திருந்தை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பதிலும் இன்றும்கூட உறுதியாக இருக்கிறோம்.

இதில் இன்னொன்றையும் தெரிந்துகொண்டோம். அதிகாரத்தில் இருப்போர் தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பரிதவிப்பில் அச்சத்தையும் குழப்பத்தையும் உண்டாக்க எப்படிப்பட்ட பொய்களையும் அவதூறுகளையும் கூறவும் அதிகார அத்துமீறல்களில் ஈடுபடவும் தயங்க மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். பொதுமக்களும் அறிந்துகொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களை அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிப்பதே ஒரு கிரிமினல் குற்றமாகும். அதனால் மீண்டும் கூறிடுவோம்: “Udahlah tu … Bersaralah!”(போதுமய்யா….விட்டு விலகய்யா!”)
====================================
 Dர். D JEYAKUMAR பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர், பிஎஸ்எம்-மின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர். அவரும் மேலும் ஐவரும் ஜூலை  மாதம் அவசரகாலச் சட்டத்தில் 28 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.