நம்பிக்கையும் – துரோகமும்!

பிரதமர் தேசிய முன்னணியிடம் ‘நம்பிக்கை’ வைக்க கோருகிறார். விடுதலை அடைந்த நாள் முதல் நாம் கொள்ளாத நம்பிக்கையா? கைரேகை தேய தோட்டங்களில் மண்வெட்டி பிடித்து, கொட்டை போட்டு, பால்மரம் வெட்டி, செம்பனை குலை தள்ளிய கோபாலையோ, மருதையையோ அல்லது அவர்களுக்கு உதவிய மனைவி, அக்கா, தம்பி குழந்தைகளை கேளுங்கள்.

கடந்த 54 வருடங்களாக இழவு காத்த கிளியாக வாழும் சுமார் பத்து இலட்சம் இந்தியர்களின் இதயத்தை கேளுங்கள், துரோகத்தின் சரித்திரம் புரியும்.

பல் பிடுங்கப்பட்டு பெட்டிப் பாம்பாக தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்க உருவான நிலையில்தான் மாற்று தொழில்சங்கம் முளைத்தது. 1948-ஆம் ஆண்டு பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலம் 1960-ல் முடிவடைந்தபோது தொழில்ச்சங்கங்கள் மீண்டும் தங்களின் உரிமையை நிலைநாட்ட புறப்பட்டன.

அதன் எழுச்சியை, 1967-இல் நடந்த புக்கிட் அசகான் தோட்ட மறியலின் உச்சக்கட்டத்தில் தொழிலாளர்கள் நீண்ட ஊர்வலமாக மலாக்காவில் இருந்து கோலாலம்பூர் நோக்கி நடந்ததில் காணலாம். ஆனால் நம்பிய அரசாங்கம் அதில் ஈடுபட்டவர்களை இசா சட்டத்தில் (ISA) கைது செய்தது. மாற்று தொழில் சங்கத்தை முடக்கியது.

அப்போது (1970)  சுமார் 70 சதவித இந்தியர்கள் தோட்டப்புறங்களில் இருந்தனர். அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், ‘தனியார் தோட்டங்கள்’ என்று முத்திரை இடப்பட்ட ரப்பர்-செம்பனை தோட்டங்களில் தங்களது இரத்தத்தை வியர்வையாக்கி மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களையும் தங்களது குழந்தைகளையும் அர்ப்பணித்தனர். அவர்களது நம்பிக்கை மலையளவு. ஆனால், அவர்களுக்கு எவ்வித அரசாங்க மேம்பாட்டு திட்டமோ அல்லது வறுமை ஒழிப்பு திட்டமோ கிடையாது. காரணம், தோட்டங்கள் தனியார் சொத்து (Private Property), அரசாங்க கொள்கைக்கு அப்பால் பட்டது என்ற நொண்டிச்சாக்கு. வேலை செய்யும் ஆற்றல் குறைந்த நிலை உருவாகும் தருணத்தில் இவர்கள் ‘சப்பி எடுக்கப்பட்ட சாத்துக்கொடிகளாக’ ஒதுக்கப்பட்டனர்.

1969-ஆம் ஆண்டு தேர்தலின் முடிவுகளும், மே-13 கலவரமும் புதிய பொருளாதார திட்டங்களை முடக்கி விட்டபோது, தோட்ட மக்களின் பிரச்னையை தீர்க்க 1973-ம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கும் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் சொந்த வீட்டுடைமை திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்தது.

அதற்கு சுழல் நிதியாக மூன்றாவது மலேசியத் திட்டத்தில் (1976 – 1980) ஆம் 100 இலட்சத்தை ஒதுக்கியது. குடியிருப்பு ஊராட்சி அமைச்சின் கீழ் இயங்கிய இந்த நிதியின் விதி இதுவரையில் கேள்விக்குறியாகவே உள்ளது.

புதிய பொருளாதார காலத்தில் உருவாக்கப்பட்ட மூன்றாவது மலேசியத் திட்டம்  இந்தியர்களை முழுமையாக புறக்கணித்தது. 1991- ஆம் ஆண்டில் கூடிய தேசிய பொருளாதார ஆலோசனை மன்றம் (National Economic Consuitative Council) தாட்டு- பூட்டு என்று தாண்டிக் குதித்து மீண்டும் இந்தியர்களுக்கு அல்வா கொடுத்தது. அவை:

மாதச்சம்பளம், பாலர்ப்பள்ளிகள், தமிழப்பள்ளிகள் முழு உதவி பெரும் அரசாங்கப் பள்ளிகளாக மாற்றம், தோட்டப்புற இளைஞர்களும் தொழிலாளர்களுக்கும் தொழில்திறன் பயிற்சிகள், இந்தியர்களுக்கு வங்கி, காப்புறுதி நிறுவனம், நிதி நிறுவனம், கடன் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்க அற நிதி வாரியம், இந்தியர்களுக்கு விசேட கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பூமிபுத்திராக்களுக்கு போன்ற சிறப்புச் சலுகைகள்.

இந்த அல்வாக்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசாங்கம் தோட்டப்புற மக்களின் சமூக-பொருளாதார சூழ்நிலை குறித்து பிரதம இலாக்காவின்  பொருளாதரா திட்ட பிரிவு ஓர் ஆய்வை நடத்தியது. 1982- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ஆய்வு தோட்ட மக்கள் வெகுவாக புறந்தள்ளப்பட்ட நிலையில், கடனாளியாகவும், கல்வியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதையும் வலியுறுத்தியது. ஆனால், NECC-இன் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படவில்லை.  
இவையெல்லாம் காணல் நீராக போனாலும், தோட்ட மக்கள் தங்களது வற்றாத ஆதரவை தேசிய முன்னணி அரசாங்கத்திற்கே அளித்தனர். அதற்கு முக்கிய காரணம் ம.இ.காதான். அவர்களது முக்கிய பணி இந்தியர்களின் வாக்குகளை திரட்டி அம்னோவின் அரசாங்கத்திற்கு கொடுப்பதுதான்.

1990-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தோட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் இந்தியர்களை விரட்ட ஆரம்பித்தது. தாங்க முடியாத வேதனையில் பலர் போராட தொடங்கினர். இதனை சமாளிக்க 1999-ஆம் ஆண்டு தோட்ட மக்களின் பிரச்னையை தீர்க்க தேசிய தோட்ட மக்கள் வீட்டுடமை மறுசீரமைப்பு குழு ஒன்று 1999 செப்டம்பர் 9-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதுவும் ஒரு கண்துடைப்பாகவே இருந்தது.

இறுதியாக, சாதனை என்ற வகையில் ம.இ.காவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பழம் நழுவி சாக்கடையில் விழுந்த கதைதான். மாதச்சம்பளம் என்ற தொழில்ச்சங்கப் போராட்டம் இறுதியில் செம்பனை தொழிலாளிக்கு ரிம 325 என்று 2001-லும், ரப்பர் தொழிலாளிக்கு  ரிம 350 என்று 2003-லும் முடிவானது.

காய்ந்த வயிற்றுடன் வீடற்ற நிலையில் தோட்ட மக்கள் வெளியேறி, நகர்புறங்களில் உள்ள ஒதுக்குப் புறங்களை நாட, அயல்நாட்டு தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்தியர்களின் பிரச்சனைகள் இதோடு தீர்ந்துவிடவில்லை. 2001-ஆம் ஆண்டு கம்போங் மேடான் வன்முறை சம்பவத்தின்போது, மலாய்க்காரர்களால் இவர்கள் துரத்தி துரத்தி வெட்டப்பட்டனர்.

எழுபதுக்கும் அதிகமானோர் கடுமையான வெட்டு காயங்களுக்கு ஆளான வேளையில் ஆறுபேர்கள் கொல்லப்பட்டனர்.

2008-ஆம் தேர்தல் முடிவுகள் வரை தேசிய முன்னணிக்கு இந்தியர்கள் வெறும் கிள்ளுக்கீரைதான். ம.இ.கா-வின் வழி தேசிய முன்னணி ஒட்டு மொத்த இந்திய  தொழிலாளர் வர்கத்தின் வாக்குகளை பெற்றது. ஒரு குறிப்பிட்ட இந்தியர்கள் இதனால் பயன் அடந்தனர். ஆனால் பெரும்பான்மையினர் தங்களது வருமையில் இருந்து விடுபட இயலவில்லை.

அதைவிட பெரிய பாதிப்பு, இந்தியர்கள் என்பவர் உரிமை கொண்ட மலேசிய மக்கள் என்பதைவிட, ஒரு இரண்டாம் தர மக்களாக உருவாக்கப்பட்டதுதான். இன்று இந்தியர்களின் வாக்குகளை பெற்று மீண்டும் நம்மை அடிமையாக்க புறப்பட்டுவிட்டனர் அம்னோவின் தூதர்கள். நமது உழைப்பில் கொள்ளையடித்த பணத்தை நம்மிடமே அள்ளி வீசி, நம்மை பிச்சைகாரர்களாகவே பார்க்கிறார்கள்.

இவர்களை எப்படி நம்புவது? தொடர்ந்து அவர்களுக்கு வாலாட்ட மனிதர்களால் முடியாது.

TAGS: