1500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரந்தர தீர்வாகாது என்கிறது ஹிண்ட்ராப்

மாசி மாதத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை கொண்டாடிய  காப்பார் பொங்கல் “திருவிழாவில்” மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 559  லிருந்து மேலும் ஒரு ஆயிரம் பேருக்கு அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவிப்பு செய்திருக்கிறார்.

இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக ஆண்டொன்றுக்கு  அதிகபட்சமாக வெறும் 559  இந்திய மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிகுலேஷன் கல்வி தொடரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும், கெட்டிக்கார இந்திய மாணவர்கள் இத்தனை  ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் மட்டுமே.

மற்றபடி இந்த  அறிவிப்பை நாம் பெரிதாக எண்ணி புளகாங்கிதம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை. 2010  ஆம் ஆண்டு  எஸ்.பி.எம்  தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 467970  ( நான்கு லட்சத்து அறுபத்தேழாயிரத்து  தொளாயிரத்து எழுபது ) மாணவர்கள் ஆகும். இவர்களில் நம் இந்திய  விகிதாசாரப்படி 8  விழுக்காடு மாணவர்களின் எண்ணிக்கை 37438  என்று வைத்துக் கொள்வோம்.

ஆக 37438 இந்திய   மாணவர்களில் 10 விழுக்காட்டினர் (குறைந்தபட்சமாக) 5  A க்கள் எடுத்திருந்தாலும் சுமார் 3744   பேருக்கு மெட்ரிகுலேஷன் படிப்பை தொடர்வதற்கு தகுதி இருக்கிறது.

இந்த 3744 பேரில் 1500 பேருக்கு மட்டும் வாய்ப்பளித்தால் மீதம் 2244 மாணவர்களின் உயர்க்கல்வி உரிமை என்னாவது? இந்த மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள்  இந்தியர்களாக இருப்பதால் மட்டுமே அவர்களின் உரிமை மறுக்கபடுவது எவ்வகையில் நியாயம்?

மேலும்  நம் மாணவர்களின் உயர் கல்வி உரிமைகளை  ஏன் 500 , 1000 , 1500  என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைக்க பிரதமர் விரும்புகிறார் ?

ஆழமாய் யோசித்தால் பதில் கிடைக்கும் . ஆம் அப்போதுதான் ஒவ்வொரு தேர்தலுக்கும் இதனை ஒரு பிரச்சனையாக்கி அதற்கு தீர்வு காண்பது போல் ஒரு பாவனை காட்டி  அப்பாவி இந்தியர்களின் ஆதரவை பெற்று மீண்டும் மீண்டும் ஆட்சி செய்ய முடியும். இந்தியர்களிடையே பிரச்சனைகளை நிலவ விட்டுக்கொண்டே இருந்தால் அவர்கள் அதைப்பற்றியே கவலை பட்டு கொண்டிருப்பார்கள், தேசிய முன்னேற்ற அடைவு நிலைகளை பற்றி அவர்களுக்கு யோசிக்க நேரமிருக்காது அக்கறையும் இருக்காது. இதைதான் 54  ஆண்டுகளாக இந்த அரசாங்கம் செய்து வருகிறது.

இப்போதும் நாம்  கூர்மையாக கவனித்தால் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் எழுதிய இந்திய மாணவர்களுக்கு அடுத்த 2012 /13   மெட்ரிகுலேஷன் நுழைவுகளில் 1500 இடங்கள் ஒதுக்கப்படும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறாரே தவிர அதற்கடுதடுத்த ஆண்டுகளில் இதே நிலை தொடரும் என்று கூட அவருக்கு சொல்ல மனம் வரவில்லை.

அதனால்தான் சொல்கிறோம் வெறும் மேலோட்டமான வாக்குறுதிகளை ஏழை இந்தியர்களின் மீது தூவும் பாழாய் போன பசப்பு தனங்களுக்கு இனிமேலும் நாம் அடிமைகள் ஆக கூடாது. அதுவும் குறிப்பாக தேர்தல் காலங்களில் உதடுகளில் தேனையும் உள்ளத்தில் வஞ்சத்தையும் வைத்துகொண்டு இனிக்க இனிக்க கொஞ்சுமொழி பேசி , வசீகரிக்கும் அரசியல் வாதிகளின் சூதில் நம் இந்திய சமூகம் எஞ்சி நிற்கும் தன்மானத்தை இழந்து விடலாகாது.

இந்த அறிவிப்பின் மூலம் உயர்கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது என்ற ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் வாதம் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருகிறது. அதற்கு நாம் காண வேண்டியது நிரந்தர தீர்வு , மாறாக சாக்கு போக்குகளும் தேர்தல் வாக்குறுதிகளும் மட்டும் அல்ல.

எஸ்.பி.எம் தேர்வில் 5A க்களுக்கு மேல் எடுக்கும் அணைத்து இன , மத மாணவர்களுக்கும் , அவரவர் தகுதி அடிப்படையிலான  விருப்ப துறைகளில் கல்வியை தொடர்வதற்கு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் வாய்பளிப்பதால்   மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியுமே தவிர வெறும் அறிவிப்புகளால் அல்ல.

———————————————–

வி.சம்புலிங்கம், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர்.