(சீ. அருண், கிள்ளான்)
குறுகிய கிராமமாக ஆகிவிட்டது உலகம்; உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தவர்களாக ஆகிவிட்டனர் என்னும் கூற்று பரவலாக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டுள்ள இக்கூற்று ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் களமாக அறிவியல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இருப்பினும், அறிவியல் அடிப்படையில் மொழியப்பட்ட கூற்றே வாழ்வாகும் என்றெண்ணி ஏமாறக்கூடாது.
மாந்தர் வாழ்வினை அறிவியல் மட்டுமே சூழ்ந்திருக்கவில்லை. மாறாகப் பல்வகைக் கூறுகளின் களமாக இருப்பதுதான் மாந்தர் வாழ்வு. இனம், மொழி, பண்பாடு போன்ற வாழ்வியல் கூறுகளின் அடிப்படையில் மனிதர்கள் வேறுபட்டவர்களாகவே உள்ளனர்.
இந்நிலையில் தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபட்டுள்ளது. தம் இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்று வாழ்கின்றனர். உலகம் சிறு குடிலாக ஆகிவிட்டது, இதில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டனர் என்னும் கருத்து மயக்கம் தமிழரிடையே ஏற்பட்டுள்ளது. இத்தகைய சிந்தனையால் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றில் சிதைவினை எதிர்நோக்கியுள்ளது தமிழினம்.
ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு. அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இந்நாட்டில் வாழும் மலாய் இன மக்கள் ஒருவரைக் கண்டவுடன் கைகுலுக்கி ‘செலாமாட் பகி’ (Selamat pagi), ‘செலாமாட் தெங்கா ஹரி’ (Selamat tengahari), ‘செலாமாட் பெத்தாங்’ (Selamat petang), எனச் சொல்வது இயல்பாகும். ‘நலம் மிக்க காலை நேரம்’, ‘நலம் மிக்க நண்பகல் நேரம்,’ ‘நலம் மிக்க மாலை நேரம்’ என்னும் பொருளில் இத்தொடர்கள் கையாளப்படுவதுபோல் உள்ளன. மலாய் இனத்தாருக்கு உரிய மொழி, பண்பாட்டு அடிப்படையில் இச்செயல் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆங்கிலேயரிடமும் இத்தகைய வழக்கம் உண்டு. ‘குட் மார்னிங்’ (Good morning), ‘குட் ஆஃபடர்நூன்’ (Good afternoon), ‘குட் ஈவ்னிங்’ (Good evening) எனச் சொல்வது அவர்களின் மரபாகும். இத்தொடர்களில் பிற இனத்தார் சார்ந்துள்ள மொழி, பண்பாடு போன்றவற்றின் கலப்பு இல்லை.
‘கடவுள் உனக்கு நல்ல காலைப் பொழுதினை வழங்கட்டும்’, ‘கடவுள் உனக்கு நல்ல நண்பகல் பொழுதினை வழங்கட்டும்’, ‘கடவுள் உனக்கு நல்ல மாலைப் பொழுதினை வழங்கட்டும்’ (God give you a good morning / afternoon / evening) என்னும் கருத்தில் இத்தொடர்கள் கையாளப்படுகின்றன. இஃது அவர்களின் சிந்தனைக்கும் சமய நம்பிக்கைக்கும் ஏற்ப அமைந்துள்ளது.
‘வணக்கம்’ எனக் கூறுவது தமிழர் மரபாகும். தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்’ என்னும் சொல் மிக உயர்ந்த பொருளினைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்தனைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்’ என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல்வகைப் பொருள்களை உணர்த்துகின்றது.
இறைவனைப் போற்றித் தொழுவது தமிழர்களின் வாழ்வியல் மரபாகும். இச்செயலினை வணங்குதல் எனச் சொல்கின்றோம். மிக உயர்ந்த செயலினை உணர்த்துவதற்குரிய சொல்லாக வணங்குதல் அமைந்துள்ளது. இறைவனைத் தொழுவதற்குரிய குறியீடாக வணங்குதல் என்னும் சொல் அமைந்துள்ளது. திருக்குறளிலும் இன்னபிற நூல்களிலும் கையாளப்பட்டுள்ள வணக்கம், வணங்கல் போன்ற சொற்கள் இக்கூற்றுக்கு உரிய சான்றாக விளங்குகின்றது.
கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் 9)
‘வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச்
சூழ்கழ லண்ண னெஞ்சம்
ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்க’ (களவியற், 26)
பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும். இத்தகைய சூழலில் கையாளப்படும் ‘வணக்கம்’ இறை வணக்கத்திற்கு பொருளைவிட மாறுபட்ட பொருளினை உணர்த்துகின்றது. பெரியவருக்குச் சொல்லப்படும் வணக்கம் மரியாதையைப் புலப்படுத்துவதற்காகச் சொல்லப்படுகின்றது. அதற்குரிய மறுமொழியாகப் பெரியவர் சொல்லும் வணக்கம் அன்பினைப் புலப்படுத்துவதற்காக சொல்லப்படுகின்றது.
ஆசிரியரை எதிர்கொள்ளும் மாணவர் அவருக்கு வணக்கம் சொல்வதும் அதற்கு ஆசிரியர் மறுமொழியாக வணக்கம் சொல்வதும் பள்ளிச் சூழலில் நடைபெறும் நிகழ்வாகும். இவ்விரண்டு தரப்பினரும் சொல்லும் வணக்கம் வெவ்வேறு பொருளினை உணர்த்துகின்றது.
கல்வியறிவும் பட்டறிவும் மேம்பட்ட ஆசிரியரை நோக்கி மாணவர் சொல்லும் வணக்கம் மரியாதையினையும் நன்றியுணர்வினையும் புலப்படுத்துகின்றது. தனக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் தொண்டினை முன்னிட்டு நன்றி உணர்வு மேம்பட்ட நிலையினை இத்தகைய வணக்கம் வெளிப்படுத்துகின்றது. ஆசிரியர் சொல்லும் வணக்கம் இத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. மாணவர் மீது தாம் கொண்டிருக்கும் அன்பினை வெளிப்படுத்தும் பொருட்டு ஆசிரியரின் வணக்கம் அமைந்துள்ளது.
பெரியோரை வணங்கி நல்லாசி பெறும் வழக்கம் தமிழர் பண்பாடாகும். இச்சூழலில் ஆசி பெறுவோரும் ஆசி கொடுப்போரும் சொல்லும் வணக்கம் வேறுபட்ட பொருளினை உணர்த்துகின்றது. பெரியவர் சொல்லுக்கும் செயலுக்கும் தம் மதிப்பினைப் புலப்படுத்தும் வகையில் ஆசி பெறுவோர் வணக்கம் அமைந்துள்ளது. தம்முடைய அன்பினைப் புலப்படுத்தும் வகையில் பெரியவர் வணக்கம் உள்ளது.
கணவன், மனைவி ஆகியோர் தங்களுக்குள் சொல்லும் வணக்கம் மாறுபட்ட பொருளினை உணர்த்துகின்றது. அன்பு, பாராட்டு, நன்றி போன்ற கூறுகளை வெளிப்படுத்தும் நிலையில் இவர்களின் வணக்கம் அமைந்துள்ளது.
இரண்டு நண்பர்கள் சந்திக்கும்போது வணக்கம் சொல்லிக் கொள்வது உண்டு. அன்பு உணர்வின் வெளிப்பாடாக இவர்களின் வணக்கம் அமைந்துள்ளது.
தமிழர்கள் சொல்லும் ‘வணக்கம்’ பல்தரப்பட்ட பொருளினை உணர்த்துகின்றது. இறைவன் முதற்கொண்டு எளிய மாந்தர் வரையிலாக எல்லாரும் வணக்கம் என்னும் சொல்லுக்கு ஏற்புடையவராக உள்ளனர். இத்தகைய உயர்வுமிக்க கருத்தின் குறியீடாக வணக்கம் அமைந்துள்ளது.
இன்றைய நாளில் இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. காலையில் சந்திக்கும்போது ‘காலை வணக்கம்’, மாலை நேரச் சந்திப்பின்போது ‘மாலை வணக்கம்’, பின்னர் இரவின்போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் கொண்டுள்ளனர். இவ்வாறு காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்லும் மரபு தமிழர்களுடையதன்று. இஃது ஆங்கிலேயரின் மரபாகும். ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), குட் ஈவினிங் (Good evening) எனச் சொல்வது ஆங்கிலேயரின் வழக்கமாகும். இதனையே தமிழர்களும் பின்பற்றுகின்றனர். தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட விளைவு இது.
“இன்றைய காலைப்பொழுது நற்பொழுதாக அமையட்டும்”, என்னும் கருத்தினையே ‘காலை வணக்கம்’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இத்தகைய வணக்கம் குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கொண்ட பொருளினை மட்டுமே உணர்த்துகின்றது. ஆனால், தமிழர்களின் வணக்கம் பரந்துபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் தனிப்பெரும் சிந்தனையும் பண்பாடும் சிதைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தினை முன்னிட்டு வணக்கம் சொல்வது தமிழர் மரபன்று. ‘நீடுழி வாழ்க’, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’, என வாழ்த்துவது தமிழர் மரபு. தமிழர்களின் வாழ்வியல் மரபுக்கு முரணாக ‘காலை வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற தொடர்கள் அமைந்துள்ளன.
பிறருக்கு வணக்கம் சொல்லும்போது மனம் நிறைவு கொள்கின்றது. ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி சொல்லப்படும் வணக்கத்தால் மனிதன் பண்பாளனாக ஆகின்றான். எளிய தமிழர் வாழ்வில் வணக்கம் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. ‘வணங்கின புல் பிழைக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழிகளுள் ஒன்றாகும். இப்பழமொழியில் கையாளப்பட்டுள்ள வணக்கம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உணர்த்துகின்றது. விட்டுக் கொடுத்து வாழ்வது மிக உயர்ந்த பண்பாட்டுக் கூறாகும்.
பகைவரும் நமக்கு வணக்கம் சொல்வர் என்னும் அரிய தகவலைத் தருகின்றது திருக்குறள். வில்லின் வணக்கம் என்பது தீமை செய்திடும். வில்லின் தன்மை வெளிப்படையாகத் தெரியக்கூடியது. ஆனால், பகைவரின் சொல் வணக்கம் அத்தகையதன்று. பகைவரின் வணக்கம் நன்மையளிக்க வல்லது என நம்பிடக்கூடாது. இக்கூற்றினைக் கீழுள்ள திருக்குறள் எடுத்துரைக்கின்றது.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (குறள் 827)
அரசன் மக்களிடம் சொல்லும் வணக்கமும் மக்கள் அரசனிடம் சொல்லும் வணக்கமும் வேறுபட்ட பொருளினை உணர்த்துகின்றன. “என்னுடைய ஆட்சியில் நற்பேறு பெற்று வாழ்வாயாக”, எனும் வாழ்த்தின் குறியீடாக அரசனின் வணக்கம் அமைந்துள்ளது. “உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்நாட்டில் நல்வாழ்வு பெற்றுள்ளமைக்காக என் நன்றியினைப் புலப்படுத்துகின்றேன்”, என்னும் பொருளில் மக்களின் வணக்கம் அமைந்துள்ளது.
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’ எனும் சொல் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்துவதன்று. அரசன் முதல் ஆண்டி வரை எல்லாருக்கும் உரிய பொதுச்சொல்லாக வணக்கம் விளங்குகின்றது. சேர வேந்தரின் மணிபதித்த முடியும் பாண்டியருடைய மணிமுடியும் வணங்கியதைப்பற்றி கலிங்கத்துப் பரணி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றது:
வணங்கிய சேரர் மணி முடியும்
வழுதியர் தங்கள் திரு முடியும் ———- ( கலிங்கத்துப் பரணி : 531)
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது ———- (குறள் 419)
பல்வகை பேறுகளைப் பெற்றுள்ள வணக்கம் என்னும் சொல்லைப் பண்பாட்டுக் கலப்பில்லாமல் பயன்படுத்துவது தமிழர் கடமையாகும். எல்லாக் காலத்திற்கும் எல்லா சூழலுக்கும் பொருந்தும் சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. பிற இனத்தார் பண்பாட்டுடன் கலப்புற்ற ‘காலை வணக்கம்’, ‘நண்பகல் வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற தொடர்கள் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டிற்கு முரணாக உள்ளன. வணக்கத்தை வணக்கம் எனச் சொல்வதே சாலப் பொருத்தமான செயலாகும்.
வணக்கம் என்பதன் நேர் பொருள் .. ! இணங்குதல் ,! வளைதல்!
‘வணங்குதல்’ என்று பொதுவில், அறியப்பட்ட பொருள், எவ்வாறு வந்தது !அது இயல்பான பொருளா? ஏற்றப்பட்ட பொருளா? ‘இணங்குதல்’ எனும் பொருளிலிருந்து ஏற்றப்பட்ட பொருளாகத்தான் ‘வணங்குதல்’ எனும் பொருள் வந்திருக்கிறது, அதாவது, கடவுளுக்கு உருவகிக்கப்படும் தகுதிகள் அனைத்தையும் இணங்கி ஏற்றுக் கொள்கிறேன் எனும் வழியில் தான் வணங்குதல் எனும் பொருளும் ஏற்றபட்டிருக்கிறது. ஆனால் இன்று இயல்பான பொருளே தெரியாதா அளவுக்கு ஏற்றப்பட்ட பொருள் முதன்மை பெற்றுக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது..?
” சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் ” (குறள் 827) கூடாநட்பு எனும் அதிகாரம். இதில், வணக்கம் எனும் சொல் இணக்கம் இல்லாத ஒருவனின் சொல்லை கேட்பது, வில் வளைவதானால் ஏற்படும் தீங்கு போல ஆகும். என சொல்கிறது.
வணக்கம் என்ற சொல்லிற்கு தாங்கள் அளித்துள்ள விளக்கம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள். இந்திய துணைக் கண்டத்தில் ஹிந்துக்களுக்கு மட்டும் உரிய வழக்கமா வணக்கம் தெரிவிப்பது. அறிய விரும்புகிரேன்.
தகவல் அருமை நன்றி வணக்கம்…