இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் பணிமனையின் முன் திரண்ட அரசியல் மற்றும் சமூக இயக்க பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்றப் பதாகைகளை ஏந்தி, “கொலைகார அரசை ஆதரிக்காதே” என்ற கோசத்துடன் மலேசிய பிரதமருக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர்.
[காணொளியை பார்வையிட அழுத்தவும்]
26 பக்கங்கள் கொண்ட அந்த கோரிக்கை மனுவை பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ படுக்கா கஜாலி இப்ராகிம் பெற்றுக்கொண்டதாகவும் அதனை திங்கட்கிழமை பிரதமரின் கவனதிற்கு கொண்டு செல்லவிருப்பதாக இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற கா. ஆறுமுகம் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடக்கவிருக்கும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக மலேசிய அரசை வாக்களிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனு வலியுறுத்துகிறது.
இந்நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர்கள் சிவராசா (சுபாங்), மனோகரன் மாரிமுத்து (தெலுக் இந்தான்), செனட்டர் இராமகிரிஷ்னண், தமிழ் அறவாரியத் தலைவர் பசுபதி சிதம்பரம், டாக்டர் என்.ஐயங்கரன், கா. உதயசூரியன், இராஜரத்தினம், உட்பட கேமரன் மலையைச் சார்ந்த சிம்மாதிரியும், அமைச்சியப்பனும் கலந்து கொண்டனர்.
அந்த மனுவில், 2009-ஆம் ஆண்டின் கடைசி போர் நடந்த மாதங்களின் இறுதியில் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட அனைத்துலக மனித உரிமை சட்டம் மற்றும் மனிதநேயச் சட்ட மீறல்களுக்கு இலங்கை பொறுப்பேற்க அந்நாட்டை வலியுறுத்துதியது.
அதில், 2010-ல் வெளியிடப்பட்ட ஸ்ரீலங்கா பிரச்சனையின் கற்றுக் கொண்ட மற்றும் ஒத்திசைவு ஆணையத்தின்(LLRC) அறிக்கையையும், ஐ.நா பொது செயலாளரின் சிறப்பு நிபுணர் குழு(PoE) அறிக்கையையும் விவாதத்திற்குக் கொண்டுவருவதோடு போரில் அனைத்து நிலைகளின் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் மனிதநேய சட்ட மீறல்களையும் விசாரணைக் கொண்டுவர வலியுறுத்துவதுதோடு, இலங்கை அரசை போர் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகளை சார்பாக விசாரிக்க அனைத்துலக சுயேச்சை அமைப்பை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டது.
கடந்த மே 27, 2009-ல் ஐ.நாவின் மனித உரிமை கழகத்தின் 11 அமர்வில் நிறைவேற்றப்பட்ட S-11/1 தீர்மானத்தின் வழி ஸ்ரீ லங்கா அரசை அனைத்து வகையிலான போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயக் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் முடிவிற்கு மலேசியா அரசின் ஆதரவு நிலை தங்களுக்கு மிக அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது என்றும், மலேசியா தனது பிளவுப்படாத ஆதரவை பாலஸ்தீன பிரச்சனையில் அமைதி தழைக்கவும் முழுமையான தீர்வு பெறவும் வழங்கியதும், தென் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் பிரச்சனைகளுக்கு தோள் கொடுத்ததும், போஸ்னியாவிற்கு உதவியாகவும் செயல்பட்டிருக்கிற சூழலில் ஏன் ஸ்ரீ லங்கா பிரச்சனையில் மட்டும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது? எனவும் அந்த மகஜரில் குறிப்பிட்டிருந்தனர்.
“எங்கள் தரப்பு நியாயங்களை பின்வரும் அறிக்கைகளின் துணைக் கொண்டு முன்வைக்கிறோம்” என்று, ஐ.நா பொது செயலாளரின் சிறப்பு நிபுணர் குழு அறிக்கை (PoE); அந்த அறிக்கை சார்புடைய அனைத்துலக அரசு சார்பற்ற இயக்கங்களின் கருத்துகள்; இலங்கை ‘கொலைக் களங்கள்’ Channel 4-வின் ஆவணப்படம் சார்புடைய கருத்து மற்றும் கற்றுக் கொண்ட மற்றும் ஒத்திசைவு ஆணையத்தின்(LLRC) அறிக்கையை ஒட்டிய வரலாறு மற்றும் முடிவுகளும், அந்த மனுவில் இணைக்கப்பட்டிருந்தது.
“மனுவில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பிரதமர் 2009-ல் மலேசியா எடுத்த முடிவை காட்டிலும் சிறப்பான முடிவைக் எடுக்க உதவும்” என நம்புவதாக கா. ஆறுமுகம் தெரிவித்தார். இன்றைய நிலையில் மலேசியா அரசிடம் கொண்டுள்ள இந்த எதிர்பார்ப்பு மிகவும் எளியது என்றவர், மாலேசியா இதில் சோரம் போனால் அது இனவாத முடிவாகவே அமையும் என்பதால், இது இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு பலத்த பின்விளைவுகளை உண்டாக்கும் என கோடிகாட்டினார்.