வேறுபாடற்ற தேசிய கல்வியாக தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும்!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்

இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளின் மெட்ரி- குலேஷன் அதாவது புகுமுக வகுப்புகளில் சேர 1000 இடங்கள் ஒதுக்கப்படும் என 2011, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ம.இ.கா. ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் அறிவித்தார்.

மேலவையில் இது குறித்து நான் விளக்கம் கோரிய போது தானியார் கல்லூரிகளில் புகுமுக முறை ஏதுமில்லையென உயர்க்கல்வி அமைச்சர் பதிலுரைத்தார்.

மேலும் இரு கேள்விகளை முன் வைத்தேன். அதாவது இந்த மெட்ரிகுலேஷன் வழிமுறையை மலேசியத் தர நிர்ணயப் பிரிவு (MA&Q) அங்கீகரித்துள்ளதா? என்பது முதல் வினா. அடுத்து, கல்வி தொடர்பான இது போன்றதொரு விடயம் மலேசிய மாணவரின் தனி உரிமை எனக் கருத்தில் கொள்ளாது, வாக்குகளைக் கவரும் நோக்கத்துடன்  அவற்றை அரசியல் அரங்குகளில் அறிவிப்பது ஏன் என வினவினேன்.

இரு கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலில்லை. கடந்த மாதம் 26-ஆம் நாள் கிள்ளான், காப்பாரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையற்றிய பிரதமர்   மெட்ரிகியுலேஷன் கல்லூரிகளில் சேர்வதற்கான இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 559 உள்ளது என்றும் 2013-ஆம் ஆண்டுக்குள் அது 1,500 ஆக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார். குதூகலமடைந்த ம.இ.கா-வும் பிரதமருக்குப் பாராட்டுப் பாமாலைகளைப் பொழிந்தது!

இந்த அறிவிப்பிலிருந்து ஒன்று நன்கு புரிகிறது. இந்திய மாணவர்களின் உயர்க் கல்வி வாய்ப்பு என்பது அரசியலில் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகின்றது. “நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் உங்களுக்கு உதவி செய்வேன்” எனும் பிரதமரின் கொள்கைக்கு ஏற்ப அமைகிறது. இந்திய வாக்குகளுக்காக பாரிசான் அல்லாடுவதால், மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை என்ன? அதற்கு மேலும் கூட வாதாடிப் பெறலாம்!

எனவே, இந்திய சமுதாயம் அல்லது மலேசியாவின் எந்தவொரு சிறுபான்மை சமூகமும், இந்நாட்டின் அரசியல் சாணக்கியம் குறித்து விழிப்பாக இருப்பது அவசியம். இந்தியர்களான நாமும் உள்ளடக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் யுகத்தை உருவாக்குவோம்.

தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு பற்றியும் தற்போது அரசியல் நிகழ்வுகளில் அறிவிக்கப்படுகின்றன. வேதனை என்னவெனில் தமிழ், சீனப் பள்ளிகளின் முன்னேற்றம், வளர்ச்சி குறித்து தீட்டமிடுவதற்கோ செயற்படுத்துவதற்கோ, கல்வி அமைச்சில் ஒரு தனிப்பட்ட பிரிவு கிடையாது!

தாய்மொழிக் கல்வியின் பால் அக்கறையுடைய அரசு சார்பற்ற நிறுவனங்கள் சில புதிய பள்ளிகளின் தேவை அல்லது பழைய பள்ளிகளை புதிய இடத்துக்கு மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து தகவல் கொடுக்கின்றன.

கல்வி அமைச்சு தேசியப் பள்ளிகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதனைப் பொறுத்த வரைக்கும் தமிழ்ப்பள்ளிகள் தேவையற்ற அனாதைப் பிள்ளைகள்!

புதிய பள்ளிகள் நிர்மானிப்பு குறித்து பிரதமர் அறிவிக்கலாம். ஆனால் கல்வி அமைச்சின் எப்பிரிவு அதனைச் செயல்படுத்தும்?

இறுதியில் என்ன நடக்கும்? பள்ளி நிர்மானிப்பு அல்லது பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைச்சுகளுடன் இணைந்து செயலாற்றும்படி ம.இ.கா.வுக்கும் ம.சீ.ச.வுக்கும் உத்தரவிடப்படும். அவற்றுக்கு தமிழ், சீனப் பள்ளிகள் அடிபணிய வேண்டும்.

அது மட்டுமா? அம்னோவின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சில், தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான மனக்குறைகளைக் கொட்டி, தீர்வு தேடுவதற்கு ஒரு பிரதிநிதி கிடையாது!

ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ப்பள்ளிகளுக்கேன ஓர் ஒருங்கிணைப்பாளர் இருப்பார். ஆனல் இவர் இறுதி முடிவு எடுக்க முடியாத ஒரு சாதாரண பதவியில் இருப்பார். இதுதான் உண்மை நிலை. இவ்வாறுதான், அம்னோ, தேசிய மாதிரி பள்ளிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருகின்றது.

அரசியல் லாபத்துக்காக அரசியல் மேடைகளில், தமிழ்ப்பள்ளிகளின் தலையெழுத்தை மாற்றுவதாக பிரதமர் அறிவிக்கலாம். ஆனால் கல்வி அமைச்சு எதனையும் செய்யப் போவதில்லை.  அரசாங்க சார்பற்ற நிறுவனங்களின் சேவை மற்றும் அவை கொடுக்கும் அரசியல் நெருக்குதலால்தான் தமிழ், சீனப் பள்ளிகள் இன்றளவும் உயிர் வாழ்கின்றன.

தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் நிலைக்க வேண்டும்!  யாரும் அவற்றை அகற்றவோ தேய்ப்பிறையாக்கவோ கூடாது! முடியாது! அதே வேளை தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பு என்ன? இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கி சாதனைகள் பல புரிய, தொடக்கப் பள்ளிகளிலேயே அவர்களை நன்கு செப்பனிட்டு அனுப்ப வேண்டும்!

தமிழ்ப்பள்ளிகளுக்காக இந்திய சமூகம் செய்யக் கூடிய மிகப் பெரிய சேவை என்ன? பாரிசான் கட்சியை அகற்றிவிட்டு, வேறுபாடற்ற தேசிய கல்வியாக தமிழ்ப்பள்ளியை உருவாக்க புதிய அரசங்கத்தை அமைப்பதுதான்!