காவல்துறையினர் பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களா?

நகை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சுந்தர் த/பெ செல்வம் என்ற சிறுவன் காவல்துறையினரால் தடுப்புகாவலில் அடைக்கப்பட்டு மூன்று தினங்களாக விசாரணை என்ற பெயரில் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறான்.

வலது கண், தலை, கழுத்து, உடம்பு ஆகிய பகுதிகளில் ரத்தம் கட்டும் அளவிற்கு சிறிதும் மனசாட்சியில்லாமல் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லும் காவல்துறையினர் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது நியாயமா? காவல்துறையினருக்கு யார் இந்த அளவிற்கு அதிகாரம் கொடுத்தது?

சிறார் குற்றவியல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒரு சிறுவனை போலீஸ் லாக்கப்பில் மூன்று நாள்கள் தடுத்து வைப்பதே குற்றம். மேலும், அச்சிறுவனை கடுமையாகத் தாக்கியதும் மிகப் பெரிய குற்றம். இது அந்தக் காவல்துறையினருக்கோ சம்பந்தப்பட்ட அதிகாரிக்கோ தெரியாதா? தெரியும்; தெரிந்தும் சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு தவறாகப் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்கிறார்கள்? ஆனால் இதுபோன்ற 13 வயது சிறுவன் விஷயங்களில் காவல்துறையினரின் அராஜகம் எல்லை மீறுவதும் மனித உரிமை மீறலுக்கு நிகரானதும் ஆகும். இது நம்மவர்களுக்குத் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது?

இந்த விவகாரத்திற்கு டி. ராஜகோபாலு அவர்கள் சரியான தீர்வு காண்பதோடு பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நியாயமான முடிவும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மேல் சரியான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு சாதாரண சிறுவன் நகை திருடியதாகக் கூறி சிறுவன் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியவர்களே, நம் நாட்டில் மக்கள் பணத்தில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்து கொண்டோ (சொகுசு) மாடிகள் என்றும் ஆடம்பர மாளிகை என்றும் நகை நட்டு வைர மோதிரம் என்றும் வகையாக வகையாக திருடியவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் அராஜகங்களை அவர்களிடம் காட்டுங்கள் பார்ப்போம்.

– சாமி, பொதுமக்களின் ஒருவன்.