கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முதலாகக் கதறுகிறது. சாட்சிகளை அழித்துவிட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது. இனஅழிப்புக்கு எதிராக உலகநாடுகள் ஒன்று சேர்ந்த அடையாளம்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளது அமெரிக்கா.
இதைக் கண்டு பயந்துபோன இலங்கை, தனக்கு நெருக்கமான நாடுகளிடம் ஆதரவு கேட்டு கையேந்தி நிற்கிறது.
47 நாடுகளை உள்ளடக்கிய இந்த மன்றத்தில் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு வாக்களித்தால், தீர்மானம் நிச்சயம் நிறைவேறும்.
இது அமெரிக்காவின் நம்பிக்கை மட்டும் அல்ல… முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டு வெதும்பிக் கண்ணீர் வடித்த மனிதர்களின் நம்பிக்கை!
அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், அழுத்தமான பல வார்த்தைகள் உள்ளன.
*’சட்டத்துக்கு நேர் எதிராகப் பல்வேறு படுகொலைகள் இலங்கையில் நடந்துள்ளன’ இவை குறித்தும் ‘காணாமல் போதல்கள்’ குறித்தும் எவ்வித பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும்.
*வடக்கு மாகாணம் முழுவதும் இருக்கும் இலங்கை இராணுவத்தை விலக்க வேண்டும்.
*நிலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்.
*சிவில் சமூகக் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டும்.
*மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும். இதன் மூலமாக இனப்பிரச்னைக்கு சரியான தீர்வு காண வேண்டும்.
*அனைவரது கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்,
*சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவை சார்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
* நடந்த நிகழ்வுகள் குறித்து இலங்கை அமைத்த ஆய்வுக்குழுவின் அறிக்கை, அனைத்துலகச் சட்ட விதிமீறல்கள் தொடர்பாக முழுமையாக எதையும் தெளிவுபடுத்தவில்லை.
*அனைத்துலகச் சட்ட விதிமுறைகள் அதிகப்படியாக இலங்கையில் மீறப்பட்டது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை சபைக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று, இலங்கைக்கு எதிரான தன் தீர்மானத்தில் அமெரிக்காவின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது!
இது, புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
‘ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா சமர்ப்பித்து உள்ள தீர்மான அறிக்கையை பலவீனப்படுத்தி, தோல்வியுறச் செய்யும் முயற்சிகளை இலங்கை முன்னெடுக்கும். தமிழர்களின் உறுதியான நிலைப்பாடு, இலங்கை மீது பகிரங்கமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். அத்தகைய தெளிவான உள்ளடக்கத்தை நாங்கள் அமெரிக்காவிடம் எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.
கனடிய தமிழ் காங்கிரஸின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளையிடம் கேட்டபோது,
பாரதிதாசன் பாடிய, ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’ என்ற பாடலைப் போல தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும், முதல்வர் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி போன்றோர் அமெரிக்கா கொண்டுவரக்கூடிய தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலோடு பேசுவதும் எங்களுக்கு மன நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா எங்களுக்குத் தந்தை நாடு. எங்களுக்கான அரசியல் இந்தியா இல்லாமல் அமையாது. எங்களுக்கான சுயாட்சியை இந்தியாவே பெற்றுத்தர வேண்டும். அதே போல் அமெரிக்கா கொண்டுவரக்கூடிய தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என இந்தியாவின் கைகளை இறுகப் பற்றிக் கேட்கிறோம். ஐ.நா. மனித உரிமை சபையில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சார்பில் கேள்விகள் கேட்க எங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இலங்கை கொண்டுவரக்கூடிய போலிச் சாக்குகளை எங்கள் கேள்விகளால் பொய்ப்பித்து இலங்கையின் முகத்திரையைக் கிழிப்போம்.
டக்ளஸ் தேவானந்தா இலங்கையிலேயே ஒரு குற்றவாளி என்று அரசு கமிஷனில் பல காலங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டவர். இலங்கை அரசாங்கமே அவரைக் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு எப்படி நல்லிணக்க அறிக்கையை செயல்படுத்த போவதாக ஐ.நா-வுக்கு அவரை அழைத்து வருகிறீர்கள் என்று இலங்கை அரசிடம் கேட்ட கேள்விக்கு, அவர்களிடம் பதில் இல்லை.
தமிழர்களுக்கான சுயாட்சி உரிமையை அரசியல் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பது இன்று எம் மக்கள் வாழும் சூழ்நிலையில் கட்டாயம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு நாடும் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.
-ஜூனியர் விகடன்