இம்மாத இறுதிக்குள் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டிட நிர்மாணிப்புப் பணி தொடங்கப்படாவிட்டால், தேர்தலில் தங்களின் எதிர்ப்பைக் காட்டப் போவதாக கோத்தா திங்கி, ஜாலான் தாஜோல் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறினர்.
தேசிய வகை ஜாலான் தாஜோல் தமிழ்ப்பள்ளி , ஜோகூர், கோத்தா திங்கி நகரின் பிரதான சாலையில் அமைந்துள்ளது. கோத்தா திங்கி வட்டாரத்தில் இருக்கும் 7 தமிழ்ப்பள்ளிகளில், 2 அரசாங்க முழு உதவிபெறும் தமிழ்ப்பள்ளிகள்; அதில் ஒன்று இந்த தாஜோல் தமிழ்ப்பள்ளி.
சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்டிருக்கும் இப்பள்ளி இன்று பழமையான கட்டட தோற்றத்துடன், கல்வி கற்பதற்கான அடிப்படை வசதியற்ற நிலையில் காணப்படுகிறது.
கோத்தா திங்கி வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு 1957-ல், சுங்கை சிப்புட் சாலையில் தொடங்கியது. சுற்றுவட்டார பிள்ளைகள் தங்கள் அடிப்படைக் கல்வியைத் தொடங்க, வட்டார இந்தியர்களின் ஆதரவோடு, 2 வகுப்பறைகள் சுங்கை சிப்புட் சாலையில் கட்டப்பட்டன. ஓர் ஆசிரியர் , 20 பிள்ளைகள்; என தொடங்கிய இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1960-ல் 45-ஆக உயர்வு கண்டது.
மாணவர் அதிகரிப்பைச் சமாளிக்க, 6 வகுப்பறைகள் கொண்ட, 2 மாடி கட்டடம் ஜாலான் தாஜூலில் நிர்மாணிக்கப்பட்டு; ஜூன் 28, 1971-ல் செயல்படத் தொடங்கியது. இம்மாணவர் அதிகரிப்பு தோட்டப்புறங்களிலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்த குடும்பங்களால் ஏற்பட்டது. குறிப்பாக, ஆர்.இ.எம். (REM) , பெலெப்பா (PELEPAH) மற்றும் தாய் தேக் (TAI TACK) தோட்ட மக்களின் குடிபெயர்வுகள் 60-களின் இறுதிகளிலும் 70-களிலும் சற்று அதிகமாகவே இருந்தது.
2001-ம் ஆண்டு, அரசாங்க மானியத்தில், புதிய இணை கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இக்கட்டடம், பிரதான கட்டடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இரு கட்டடங்களுக்கும் இடையே கோத்தா திங்கி வட்டார சாரணியர் கட்டடம் அமைந்துள்ளது. ஆசிரியர் மற்றும் மாணவர் வசதிக்காக இரு கட்டடங்களுக்கிடையே ஒரு சிறு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று இப்பள்ளியில், 321 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் 95 விழுக்காட்டினர் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் பிள்ளைகள்.
இப்பள்ளி அடிப்படை வசதிகள் முறையாக இன்றி பல சிரமங்களுக்கிடையே இயங்கி வருகிறது என அண்மையில் நாம் சந்தித்த பெற்றோர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
1. பரிந்துரைக்கப்பட்ட சுற்றளவைவிட வகுப்பறைகள் சிறியதாக உள்ளதால், மாணவர்கள் வசதியாக அமர்ந்து கல்வி கற்க இயலவில்லை.
2. பின் தங்கிய மாணவர்கள் படிப்பதற்குத் தனி அறை கிடையாது. தற்போது இவ்வகுப்பு படிக்கட்டுக்கு அருகில் , வசதியற்ற நிலையில் நடத்தப்படுகிறது.
3. பள்ளியின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளின் போது, வகுப்பறைகள் மண்டபமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
4. மிகச் சிறிய சிற்றுண்டிச் சாலையில், 321 மாணவர்கள் உணவு வாங்கவும், அமர்ந்து உண்ணவும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
5. கழிப்பறைகள் 2 மட்டுமே உள்ளன. பல சமயங்களில் மாணவர்கள் கழிப்பறை செல்ல வரிசை பிடித்து நிற்க வேண்டியுள்ளது.
மேலும், திடல், நூலகம், அறிவியல் அறை, கணினி அறை, பயிற்றுத் துணைப் பொருள்கள் மற்றும் இலவசப் பாடபுத்தகம் போன்றவற்றைப் பத்திரப்படுத்த தனியறை என்று இப்பள்ளியில் பல வசதிகள் கிடையாது.
தெங்காரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹலிமா, இந்தப் பள்ளியின் அவல நிலையை உணர்ந்து; புதிய நிலத்தில் விரைந்து பள்ளியைக் கட்ட வேண்டுமென இருமுறை (டிசம்பர் 2, 2010 மற்றும் மார்ச் 15, 2011) நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். இருந்தும், கல்வி அமைச்சிடமிருந்து எந்த ஆக்ககரமான நடவடிக்கையும் இல்லை.
இப்பள்ளிக்கு கோத்தா திங்கி நாடாளுமன்ற தொகுதியில் அமைந்திருக்கும் தாமான் டைமன் ஜெயாவில், 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான உறுதி கடிதத்தை மாநில நில அலுவலகம் ஏப்ரல் 29, 2010ல் வழங்கியது. மாநில மந்திரி புசார் இதனை, கடந்த நவம்பர் 2011-ல் , மக்கள் முன்னிலையில் மறுவுறுதிப்படுத்தினார். இருப்பினும், மாவட்ட கல்வி இலாகா , புதிய நிலத்தில் பள்ளி கட்டட நிர்மாணிப்புக்கான பெயர் பலகையை ஊன்ற மறுத்து வந்தது. இறுதியில், பிப்ரவரி 26, 2012-ல் பெற்றோர்கள் தாங்களாகவே பெயர் பலகையை ஊன்றினர்.
இப்பள்ளியின் தலைமையாசிரியரும் மாணவர்கள் எதிர்நோக்கும் அவலங்களைக் களைய துரித நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எப்போது , எதைக் கேட்டாலும் கல்வி இலாகா முயற்சி எடுத்து வருவதாகக் கூறுகிறாரேத் தவிர, கட்டிடம் விரைந்து கட்டப்படுவதற்கு வேறு எந்த அதிரடியான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்று பெற்றோர்கள் நம்மிடம் குறைபட்டுக் கொண்டனர்.
‘அரசாங்கம் விரைந்து பள்ளியைக் கட்டாவிட்டால்; பெற்றோர் ஆசிரியர் சங்கமே நிதி திரட்டி பள்ளியைக் கட்டும்’ என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சவால் விடுகிறார். முழு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளியை ஏன் மக்களிடம் பணம் திரட்டிக் கட்ட வேண்டும்? மக்கள் முற்போக்குக் கட்சியின் ஒரு தொகுதித் தலைவராக இருக்கும் இவருக்கு , கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்று தெரியாதா? அல்லது , நமது அடிப்படை உரிமையைப் பெற போராட தயாராக இல்லையா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த ஆளும் கட்சியினர், ஏழை சமுதாயத்தையே சுரண்டுவார்களோ? தேசிய முன்னணியின் தலைவர் நஜிப் கொண்டு வந்த ‘தேசிய உருமாற்றம்’ என்பதன் பொருள் இதுதானா?
அண்மையில் ஒன்று கூடிய பெற்றோர்கள், பிரதமரும் கல்வியமைச்சரும் தேர்தலுக்காக கூறும் வெற்று வாக்குறுதிகளை நம்ப தாங்கள் தயாராக இல்லை என்று கூறினார்கள். இப்பள்ளி மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் களைய பள்ளியின் புதிய கட்டடம் விரைந்து கட்டப்பட வேண்டி, அனுப்பப்பட்ட மனுவிற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. 10-வது மலேசியத் திட்டத்திலும் இப்பள்ளி நிர்மாணிப்பு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை
ஆகையால், முதல் கட்ட போராட்டமாக, புதிய நிலத்தில் பள்ளி கட்டடத்தை விரைந்து எழுப்பக் கோரி, பள்ளியிலிருந்து கோத்தா திங்கி மாவட்ட கல்வி இலாகா வரை பதாகை ஏந்தி பேரணியாகச் செல்ல கூட்டத்தினர் முடிவெடுத்துள்ளனர். இப்பேரணியில் சுற்றுவட்டார மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைவரையும் இணைத்துக்கொள்ள விரும்புவதாக பெற்றோர்கள் கூறினர். பேரணிக்கான நாள்; உறுதிசெய்தபின் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர். தங்களுக்கு சாதகமாக ஏதும் நடைபெறவில்லை என்றால், எதிர்வரும் 13-வது பொதுத் தேர்தலில் , அரசாங்கத்தின் மீதான தங்களின் அதிருப்தியை வாக்களித்தலின் மூலம் காட்டுவோம் எனவும் தேசிய வகை ஜாலான் தாஜோல் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் சூளுரைத்தனர்.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள 70 தமிழ்ப்பள்ளிகளும் எதிர்;நோக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து ; கடந்த நவம்பர் 20, 2007-ம் ஆண்டு ஜொகூர் மாநிலத்தில் இயங்கும் பல பொது அமைப்புகள் ஒன்று கூடி, செம்பருத்தி தோழர்கள் தலைமையில் மாநில மந்திரி புசாருக்கு மகஜர் ஒன்றினை வழங்கினர்.
அம்மகஜரில் இப்பள்ளியின் அவல நிலை குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மகஜரை மந்திரி புசாரின் தனிச்சொயலாளர் பெற்றுக்கொண்டார். அப்போது உடனிருந்த மஇகா , பிபிபி தலைவர்கள் இவ்விசயங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே என்று கூறினர்.
நன்கு அறிந்திருந்தும், ஏன் இதுவரை அம்னோ ஆதிக்கத்தில் இயங்கும் இந்தக் கூட்டணி கட்சிகள் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை? இக்கட்சிகள் தங்களின் பதவியைத் தற்காத்துக் கொள்ளவதில் காட்டும் முனைப்பை மக்களின் உரிமையைக் காப்பதிலும் காட்டினால் சிறப்பாக இருக்குமென, நாம் இந்த ஆளுங்கட்சி தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தி: இ.செல்வராஜா (செம்பருத்தி தோழர்கள், ஜொகூர்)