மலேசியா துங்குவை பின்பற்றி சிறீலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்

இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்  40,000 க்கு மேற்பட்ட அதன் சொந்த குடிமக்களை – ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் – நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களின் உரிமைகளை பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டப்படி மறுத்து வந்ததால் தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்தது. ஐநாவின் மதிப்பீட்டுப்படி 1972 ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஓர் இலட்சத்திற்கும் கூடுதலாகும்.

தன்னுடைய சொந்த குடிமக்களுக்கு எதிரான இந்தக் கொடூரமான போரை நடத்திய மகிந்தா ராஜபக்சேயின் தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் உலக நாடுகளில் சிலவற்றை, அவற்றில் மலேசியாவும் அடங்கும், அவற்றின் தனிப்பட்ட தேவைகளை, சிறீலங்காவில் மூலதனம் செய்வதற்கான வாய்ப்புகள் அளித்தல் போன்றவை, பூர்த்தி செய்ததன் மூலம் அந்நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த ஆதரவு சிறீலங்கா அரசுக்கு இன்று வரையில் தொடர்கிறது.

சேனல் 4 வீடியோ

ஜெர்மனியின் அடோல்ப் ஹிட்டலர் இரண்டாவது உலகப் போரின் போது அந்நாட்டு யூதர்களுக்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளையும் மிஞ்சி விட்ட அதிபர் ராஜபக்சேயின் திட்டமிட்ட தமிழ் இன மக்கள் படுகொலை உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் குறித்த உண்மையான மற்றும் நேரடிய அறிக்கைகளோடு அவற்றுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களாக படங்களும் காணொளிகளும் இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த உலக மக்களுக்கு ஊடகங்கள் வழங்கி வந்தன. அவற்றுடன், ஜூன் 14, 2011 இல் பிரிட்டீஸ் சேனல் 4 சிறீலங்காவின் இராணுவத்தினர் ஆயுதங்கள் ஏதுமற்ற தமிழ் பொதுமக்களுக்கு எதிராகப் புரிந்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை மிக வலுவான ஆதாரங்களுடன் வெளியிட்டு சிறீலங்க அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே போரிட்டு வருவதாக கூறிவந்த அதன் கூற்றை அம்படுத்தியது. சேனல் 4 வீடியோவில் திட்டமிட்டு பொதுமக்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சுகள், சட்டத்திற்கு முரணான கொலைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் படுகொலைகள் போன்ற குற்றங்களை அதிபர் மகிந்தா ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் கோத்தபாயா ராஜபக்சே தற்காப்பு அமைச்சர் ஆகியோரின் நேரடியான உத்தரவின் கீழ் சிறீலங்கா இராணுவத்தினர் புரிந்ததைக் கண்ட உலக மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

ஐநா நிபுணர் குழு கண்ட நம்பத்தக்க குற்றங்கள்

ஐநாவின் தலைமைச் செயலாளர் பான் கீ-மூன் மே 2009 இல் சிறீலங்கா போர் முடிவுற்றவுடன் அங்கு வருகையளித்த பின்னர் அவரும் அதிபர் ராஜபக்சேவும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையின்படி ஐநா மூவர் அடங்கிய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்தது. அக்குழுவின் இந்தோனேசியாவின் மார்ஸூக்கி தருஸ்மான், தென் ஆப்ரிக்காவின் யாஸ்மின் சூகா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் அங்கம் பெற்றிருந்தனர்.

அனைத்துலக மனிதநேய கோட்பாடுகளுக்கும், அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்களுக்கும் முரணான பல கடுமையான மீறல்களை சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பினரும் புரிந்திருப்பதற்கான “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” இருப்பதை அந்த நிபுணர்கள் குழு கண்டுள்ளது. “அவற்றில் சில, நிரூபிக்கப்பட்டால், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். “போர் நடத்தப்பட்ட முறை போர் மற்றும் அமைதி ஆகிய காலங்களில் தனிப்பட்ட ஒருவரின் கௌரவம் காக்கப்படுவதற்காக வரையப்பட்ட அனைத்துலக சட்டங்கள் அனைத்தின் மீதும் தொடுக்கப்பட்ட மிகக் கடுமையான தாக்குதலைப் பிரதிநிதிக்கிறது”, என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆழ்ந்த குறைகளுடைய ஆணையம்

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் நெருக்குதலைச் சமாலிப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் தென் ஆப்ரிக்கா வழியைப் பின்பற்றி கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் ஆணையம் என்ற ஒன்றை அமைத்தது. மே 2010 இல், அதிபர் மகிந்தா ராஜபக்சேவால் அமைக்கப்பட்ட அந்த ஆணையம் 18 மாத விசாரணைக்குப் பின்னர் அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த ஆணையத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த ஐநா நிபுணர்கள் குழு அந்த ஆணையத்தின் தரம் உலகளவிலான தரமாக இல்லை என்றும் “அது ஆழ்ந்த குறைபாடுகளை கொண்டுள்ளது என்பதோடு ஆற்றலுடைய பொறுப்புடமை அமைப்பிற்கு இருக்க வேண்டிய உலகளவிலான தரத்தை அது கொண்டிருக்கவில்லை. ஆகவே,  சிறீலங்கா அதிபரும் தலைமைச் செயலாளரும் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புடமை செயற்பாங்கிற்கான கூட்டு வாக்குறுதியை அந்த நிறைவு செய்யாது, செய்ய இயலாது”, என்றும் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா மீதான அமெரிக்க தீர்மானம்

“அனைத்துலக மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை” மீறியவர்கள் மீது விசாரணை நடத்த  வேண்டும் என்று ஐநா நிபுணர்கள் குழு பரிந்துள்ளவாறு நடவடிக்கை எடுக்கக் கோரும் குரல் அமெரிக்கா அதன் நகல் தீர்மானத்தை ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் மனித உரிமைகள் மன்றத்தின் 19 ஆவது கூட்டத்தில் மார்ச் 7, 2012 தாக்கல் செய்ததிலிருந்து வலிவடைந்து வருகிறது. மலேசியா இம்மன்றத்தின் பெருமையும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்.

அமெரிக்காவின் இத்தீர்மானம் கடுமையான ஒன்றல்ல. சிறீலங்காவில் போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பினரும் புரிந்த கடுமையான மீறல்களை விசாரிப்பதற்கான ஓர் அனைத்துலக அமைப்பை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசின் ஒத்துழைப்பையும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தோடு நெருக்கமாக இணைந்து இத்தீர்மானத்தின் கூறுகளை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அத்தீர்மானம் கோருகிறது.

இத்தீர்மானம் சிறீலங்கா அரசை நிலைகுலையச் செய்துள்ளது. அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறீலங்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான மலேசியா இத்தீர்மானம் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. தற்போது சிறீலங்காவில் ரிம ஒரு பில்லியன் ரிங்கிட் அளவிலான முதலீட்டை கொண்டிருக்கும் மலேசியா இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று கூற இயலாத நிலை இருந்து வருகிறது.

துன்பத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும்

இந்திய மலேசியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடுடைய அவர்கள் சிறீலங்கா தமிழர்கள் இன அழிப்பு குறித்து மிகுந்த சினமடைந்துள்ளனர். சிறீலங்காவுடனான உறவுகளை மலேசிய அரசாங்கம் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று கோரும் கோரிக்கைகலையும் தபால் அட்டைகளையும் பிரதமருக்கு அனுப்பு வருகின்றனர். “இது ஒரு தமிழர் விவகாரம் மட்டுமல்ல. சிறீலங்காவில் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சிறீலங்கா போரிலும் சிங்கள ஆளுமையிலும் மறந்துபோன மற்றொரு கதையாகும்”, என்று மனித உரிமைகள் வழக்குரைஞரான கா. ஆறுமுகம் வாதிடுகிறார்.

துங்குவை பின்பற்ற வேண்டும்

“உலகளவில் மனித உரிமைகளை மேம்படுத்தல், பாதுகாத்தல் போன்றவற்றில் முன்னேற்றத்தைக் கொணரும் எண்ணத்துடன் விவாதங்கள், ஒத்துழைப்பு மற்றும் செயல் ஆகியவற்றின் தரத்தை வளப்படுத்துவதற்கு” மலேசியா பகிரங்கமான ஈடுபாட்டை கொண்டுள்ளது. இந்த ஈடுபாட்டின் காரணமாகவும், ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் நம்பத்தகுந்த போர் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரிக்க கோரும் ஒரு தீர்மானத்திற்கு எதிராக மலேசியா வாக்களிப்பது பாலஸ்தீனம், போஸ்னியா, இந்தோனேசியா மற்றும் அவை போன்ற இதர நாடுகளின் மீதான அதன் நிலைப்பாட்டிற்கு முரணாக அமையும்.

இக்கட்டத்தில், 1960 ஆம் ஆண்டுகளில் அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு நமது விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வீர வரவேற்பை நினைவுகூர்வது சிறப்பாகும். அப்போது லண்டனில் நடந்த காமன்வெல்த் பிரதமர்களின் மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் துங்கு தென் ஆப்ரிக்கா வெள்ளையர் அரசாங்கம் இன ஒதுக்கல் கொள்கையை அமல்படுத்தி வருவதால் அந்நாட்டை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை வெற்றிகரமாக முன்மொழிந்தார்.

சிறீலங்காவுக்கு நஜிப் அளிக்கும் ஆதரவால் அவர் மக்களின் சினத்திற்கு ஆளாவதோடு அனைத்துலக சமூகத்தின் ஏளனத்திற்கும் ஆளாவார். மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அவருக்கு முன் பதவியில் இருந்தவர் எடுத்த நடவடிக்கை தமக்குத் தெரியாது என்று அவர் நடிக்க முடியாது.

TAGS: