ஐ.நா தலைமைச் செயலாளரை சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு ஒன்று இன்று முற்பகல் மணி 11.30 அளவில் கோலாலம்பூர் விஸ்மா யுஎன்னில் ஐ.நா அதிகாரியிடம் 57 அரசு சார்பற்ற அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. (புகைப்படங்கள்)
பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்தும் தனிப்பட்ட முறையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அக்கறையுள்ள குடிமக்களின் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மனித உரிமைகள் வழக்குரைஞருமான கா. ஆறுமுகம் தலைமையில் தமிழ் அறவாரிய தலைவர் சி.பசுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். மனோகரன், எம். குலசசேகரன், டாக்டர் ஜெயகுமார், டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், எஸ். மாணிக்கவாசகம், சார்ல்ஸ் சந்தியாகு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எ.சிவநேசன், செலயாங் கவுன்சலர் குணரஜ் ஆகியோர் அடங்கிய குழு ஐநா பணிமனையில் அம்மனுவை வழங்கினர்.
அக்கோரிக்கை மனுவை அக்கறையுள்ள குடிமக்கள் குழுவின் பிரதிநிதிகளிடம் இருந்து ஐ.நா பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராஜேன்ர டேவ் பட்டேல் பெற்றுக்கொண்டார்.
ஐ.நா செயலாளருக்கான அம்மனுவில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கொடுமையான போர் நடவடிக்கை பற்றிய தகவல்களும், அனைத்துலக அமைப்புகளின் எதிர்ப்புகள், சிறீலங்கா அரசாங்கம் அமைத்த ஆணையம் மற்றும் ஐ.நா தலைமைச் செயலாளர் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்த விபரங்கள் கூறப்பட்டுள்ளதோடு மூன்று முக்கிய கூறுகளையும் கொண்டுள்ளது:
1. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் முன்வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா மீதான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு;
2. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்; மற்றும்
3. ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் முன்வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா மீதான அமெரிக்க தீர்மானத்தை மலேசிய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும்.
ஐ.நா தூதரகத்தில் கோரிக்கை மனுவை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அக்கறையுள்ள குடிமக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கா. ஆறுமுகம்; ” மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள, இலங்கை LLRC-ன் சாதரண பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தையே மலேசியா எதிர்க்குமாயின்; அது மனித உரிமையை மதிக்காத கொடூரமான நாடாகவே கருத்தப்படும்” என்றார்.
அந்த மனுவோடு இன்று அனைத்து தமிழ் நாளேடுகளிலும் பிரசுரிக்கபட்ட பான் கீ மூன் வரவேற்பு விளம்பரங்களும் இணைக்கப்பட்டதாக கூறிய ஆறுமுகம், “தாங்கள் இக்குழந்தைகளுக்கு வாக்குறுதிகள் அளித்தீர்கள்!; தங்களின் நிபுணத்துவ அறிக்கை நடந்ததைச் சொன்னது!; சானல் 4 காணொளிகள் உலகத்தை உலுக்கியது!; எல்.எல்.ஆர்.சி என்பது ஏமாற்றத்தைக் கொடுத்தது!; எனவே, கடவுளின் கிரிபையால், தாங்கள் சிறீ லங்காவில் நடந்த நடக்கும் போர்குற்றங்களையும், இன அழிப்பை விசாரணை செய்ய உறுதி கொள்வீர்களா? நாங்கள் இன்னமும் உங்களை நம்புகிறோம்.” என்ற வாசகங்கள் மலேசியத் தமிழர்களின் ஆதங்கத்தை ஆழமாக வெளிகொணர்வதாக கூறினார்.
இம்மனு நாளை கோலாலம்பூர் வந்து சேரும் ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ-முன்னிடம் தவறாமல் சேர்க்கப்படும் என்று இம்மனுவைப் பெற்றுக்கொண்ட கோலாலம்பூர் ஐநா பணிமனை
அதிகாரி தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் கா. ஆறுமுகம் தெரிவித்தார்.
“இவ்வளவு சான்றுகள் இருந்தும், ஐநா நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், அதை மனிதகுலம் மன்னிக்காது” என்ற தமிழ் அறவாரியத் தலைவர் பசுபதி, நமது அரசாங்கம் கண்ணம் மூச்சு விளையாடாமல் தமிழர்களின் குரலை மதித்து, மனித உரிமைகள் சார்பில் இன-மத அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
சிறீலங்கா மீதான அமெரிக்க தீர்மானத்தை மலேசியா ஆதரிக்காது
சிறீலங்காவில் மே 2009 இல் நடந்த போரின் இறுதி கட்டத்தில் சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட போர் குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் மீறல்கள் சம்பந்தமாக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானம் இன்னும் ஈரொரு நாள்களில் ஜெனிவாவில் வாக்களிப்புக்கு வரவிருக்கிறது.
அந்த வாக்களிப்பில் மலேசியாவின் நிலை என்ன என்பது பரபரப்பான கேள்வியாக இருக்கும் வேளையில், மலேசிய அரசாங்கம் அதன் நிலை குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால், மலேசியா அத்தீர்மானத்தை ஆதரிக்காது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பு தாக்குதல்கள் குறித்து ஐநா விசாரணை நடத்த வேண்டும் என்று கோரும் மனுவை இன்று காலை கோலாலம்பூர் ஐநா அலுவலக அதிகாரியிடம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, மலேசியா சிறீலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிக்காது என்று அவரிடம் கூறப்பட்டதாக தெரிவித்தார்.
“கடந்த வியாழக்கிழமை நான் மலேசிய வெளிவிவகார அமைச்சரை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். அப்போது இத்தீர்மானம் குறித்து அவரிடம் கேட்டேன். மலேசியா இந்த தீர்மானத்தை ஆதரிக்காது”, என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக சார்ல்ஸ் கூறினார்.
இதற்கான காரணம் இந்தியாவின் நெருக்குதல் என்று அமைச்சர் கூறியதாகவும் சார்ல்ஸ் தெரிவித்தார். இதனுடன் சீனாவின் எதிர்ப்பு இருப்பதாக தாம் கருதுவதாகவும் சார்ல்ஸ் கூறினார்.