தமிழர்களின் போராட்டத்தில் அடுத்தக் கட்டம் தமிழீழம்!

-கா.ஆறுமுகம்

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாணியாக அமைந்த ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறீலங்கா மீதான தீர்மானம் உலக அளவில் மனித உரிமையை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகவே கருதக்கூடும்.

உலக அளவில் இன்று மனித உரிமைகள் சார்புடைய தீர்மானங்களை முடிவு செய்வது நுண்ணிய இராஜதந்திர நடைமுறைகளுக்கு உட்பட்டது என்பதும், அது நீ என் முதுகை சொறிந்து விடு, நான் உன் முதுகை சொறிகிறேன் என்ற அளவில் பேரம் பேசப்படுவதும் உலக நியதிகளாகி விட்டது.

சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததும், மலேசியா முதலில் ஆதரவாக வாக்களிக்க எடுத்த முடிவை மாற்றி வாக்களிப்பில் நடுநிலமை வகுத்ததும் முழுக்க முழுக்க மனித உரிமைக்கு அப்பாட்பட்ட முடிவுகளாகும். இவை தங்களின் உள்நாட்டு அரசியல் சூழலுக்கு அடிபணிந்து இந்த முடிவுகளை எடுத்துள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

இந்தியாவின் மத்திய ஆட்சியில் ஆட்டம் கண்டுள்ள காங்கிரஸ், மாநில கட்சிகளின் ஆதரவு இன்றி இனி பெயர் போட இயலாது. கடந்த தமிழ்நாட்டு தேர்தலில் படுதோல்வியை தழுவிய காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த கட்சிகள் மாறி வரும் அரசியல் சூழலை தெளிவாக உணர்த்துகின்றன. வெகுசன மக்களின் எதிர்பார்ப்பை குறிப்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை பெறவும், கருணாநீதியின் முகத்தில் கரியை பூசவும் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கை பலனை அளித்தது.

மலேசியாவை பொறுத்தமட்டில், இது தேர்தல் ஆண்டு கல்லைத் தூக்கி ஏன் காலில் போட வேண்டும் என்று தொடர்ச்சியாக எழுந்த தமிழர்களின் ஆதங்கத்தை அனுமானித்து சிறீலங்காவுக்கு ஆதரவு தருவதில் இருந்து மலேசியா ஒதுங்கிவிட்டது. இது ஓர் அரசியல் சாணக்கியமான முடிவாக கருத இயலாது. மலேசியாவில் உள்ள சுமார் இருபது இலட்சம் தமிழர்களுக்கு இதில் திருப்தி இருக்காது.

பெரும்பான்மை தமிழர்களை கொண்டுள்ள இந்தியாவும் மலேசியாவும் இனி தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வலைகளை ஆழப்படுத்தி, தமிழீழ சுயநிர்ணய போராட்டத்தில் ஈடுபடவேண்டும். சிறீலங்காவின் சிங்கள அதிகார ஆணவ ஆட்சியில் தமிழர்கள் அடிமைப்பட்டு கிடப்பது ஏற்றுக்கொள்ள இயலாது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்தவர்களோடு உலக முழுவதும் உள்ள தமிழர்களும், தமிழீழம் மட்டுமே தமிழர்களின் அரசியல் தீர்வாக அமையும் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது, தமிழீழம் நனவாகும். அது வெகு தொலைவில் இல்லை என்ற அறிகுறிகள் உலக அளவிலே தென்படுகின்றன.

TAGS: