100 சிறந்த மாணவர்களும் 100 உயர் ரக கல்விக் கழகங்களுக்கு அனுப்பப்படுவரா?

– செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்

சிறப்பு தேர்ச்சி பெற்ற 100 இந்திய மாணவர்கள் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என பிரதமர் அறிவித்துள்ளார். ஏன்? முதல் நிலை தேர்ச்சியுடைய எந்தவொரு இந்திய அல்லது மலேசிய மாணரும் உயர் ரக பல்கலைக்கழகங்களில் பயில உதவினால் என்ன? அல்லது குறிப்பிட்ட 100 இந்திய மாணவர்களையும் மிகச் சிறந்த அனைத்துலகப் பல்கலைக்கழங்களில் ஒன்றுக்கு அனுப்பினால் என்ன?

படிப்பு முடிந்த பின் அவர்கள் உயர்ந்த பதவி களை வகித்து நாட்டின் வளர்ச்சிக்கு செப்பனிடுவார்கள் அல்லவா?  அண்டை நாட்டில் ஒர் இந்திய மாணவர் அல்லது மாணவி முதல் நிலையில் சிறப்பு தேர்ச்சி பெற்றால், அவருக்கு உடனே மேல்மட்ட நிறுவனங்கள் அல்லது சிங்கை அரசாங்கமே பல்கலைக்கழக வாய்ப்பை வழங்கிவிடும். இந்நாட்டு தேசிய முன்னணியைப் போல் அங்கு பாரபட்சம் பார்ப்பதில்லை!

இத்தருணத்தில், இந்தோனீசியாவில் மருத்துவப் படிப்பு மேற்கொண்டுவரும் இந்திய மாணவர்களின் வேண்டுகோளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். சுமத்திரா, பண்டோங் ஆகியவற்றில் மலாய் மாணவர்களுடன் பல இந்திய மாணவர்களும் மருத்துவம் பயின்றுவருகின்றனர். இந்திய மாணவர்களுள் பலர் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் ஆவர். பெற்றோர்- கள் அங்குமிங்கும் தேடி அலைந்து சிரமப்பட்டு முன் பணத்தை செலுத்திவிட்டு உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிப்பார்கள். சில மாணவர்களுக்கு மட்டுமே   உபகாரச் சம்பளம் கிடைக்கும். பலருக்கு எங்கு சென்று முறையிட்டாலும் நிதி உதவி கிடைப்பதில்லை. கடனுதவியும் கிடைப்பதில்லை.

சமீபத்தில் நான் இந்தோனீசியா சென்றிருந்த போது, மலேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் சிலரை சந்திக்க நேரிட்டது. வருடந்தோறும், அங்கு மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களில் 5 அல்லது 6 பேர் கல்விக்கட்டணத்தை செலுத்த இயலாது, மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டில் பின் வாங்கிவிடுகின்றனர்.எதிர்  கால கனவு முறிகிறது. இது கொடுமை. 4 ஆண்டு கால படிப்பும் பணமும் வீண். மற்ற மாணவர்கள் வாழ்க்கைச் செலவினத்தை ஈடு செய்ய பகுதி நேர வேலை செய்ய வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு (PTPTN) பி.தி.பி.தி.என் உதவி கிடைப்பதில்லை. அது மட்டுமா? நிதி பிரச்னையால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் நலனில் பிரதமர் கவனம் செலுத்துவாரா?

ஒரு மாணவர் மிகுந்த போராட்டங்களுக்கு இடையே கடந்த 6 வருடங்களாக கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகிறார். எனினும் மருத்துவப் படிப்பை அவர்  முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி! ஏனெனில் பண்டோங் பல்கலைக்கழகத்- திற்கு அவர் செலுத்த வேண்டிய பாக்கி கட்டணம் ரி.ம.40,000 உள்ளது. மகனின் படிப்புச் செலவுக்கு பணம் தேடி அலைந்த அவரது தந்தை மிகுந்த கவலையால்   இரத்த அழுத்தம் ஏற்பட்டு சமீபத்தில் உயிர் இழந்தார்.

பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கு ஏழை இந்தியப் பெற்றோர்கள் நரகத்தை அனுபவிக்கின்றனர். ஆதாரவு கொடுப்பதற்கு அவர்களுக்கு யாரும் இல்லை. ஒவ்வொரு முறையும் எஸ்.பி.எம். மற்றும் எஸ்.தி.பி.எம் முடிவுகள் அறிவிக்கப்- படும் போது வறுமை நிலையிலுள்ள பெற்றோர்கள் உபகாரச் சம்பளம் அல்லது கடன் உதவிக்காக அலைய வேண்டிய இந்தப் பரிதாப நிலைக்கு ஒரு விடிவு ஏற்படுமா? பாரிசான் அரசங்கம் வெளிப்படையாகவே இந்திய மாணவர்களைப் புறக்கணிக்கின்றது!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தகுதி பெறும் இந்திய மாணவர்களுக்கு பி.எஸ்.டி உபகாரச் சம்பளம் கிடைப்பதில்லை. 2008-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்தான் பிரதமர் அம்னோவின் ஆதரவு இல்லாமலேயே இந்திய சமூகத்துக்கு தேர்தல் அன்பளிப்புகளை வழங்கி வருகிறார். எனினும் இந்தியர்கள் எதிர்- பார்ப்பது பொருள்களை அல்ல! கொள்கை மாற்றத்தை!! கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2.6 விழுக்காடு மட்டுமே. அடிப்படை உரிமைகள் பொறுத்தவரை ஆண்டுதோறும் மலேசிய இந்தியர்கள் பின்னடைவு கண்டு வருகின்றனர்! அத்தியாவசிய தேவை- களும் வாழ்வின் உரிமைகளும் மேம்பட்டால்தான் இந்தியர்கள் பிரதமருடன் ஒன்றாக நடக்க முடியும்!