50 ஆண்டுகள் தூங்கிய மாஇகா; அபாக்கோ தோட்டத்தில் அலையுது

அண்மைக் காலமாக அபாக்கோ தோட்டத்தைப் பற்றி பத்திரிக்கையில் பல தரப்பினரால் பலவாறு பேசப்பட்டு வருகிறது. அபாக்கோ தோட்டம் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்கு இருந்து வந்தாலும், கடந்த மூன்று மாதமாகதான் அபாக்கோ தோட்ட பிரச்சனைகள் சுடச்சுட பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் காலத்தில் இதெல்லாம் நாம் எதிர்ப்பார்த்த ஒன்றுதான். அபாக்கோ தோட்டத்தைப் பற்றி இக்கால கட்டத்தில் பல கருத்துக்களை பலர் கூறினாலும், உண்மை என்று ஒன்று உண்டு.

உண்மை என்னவென்றால் அபாக்கோ போன்ற ஒரு தோட்டம் மோசமான சூழ்நிலையில், சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் எல்லையில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் எல்லோரும் வறுமையில் இருக்கிறார்கள். பல இயக்கங்கள் அப்பப்போ இந்த தோட்டத்ததிற்குச் சென்று பொருட்களை வழங்கியுள்ளனர். ஆனால், உண்மை என்னவென்றால் இந்த அடிப்படை தோட்டப் பிரச்னைகள் தீரவில்லை.

இன்று தி.மோகன் இந்த தோட்டத்திற்கு சென்று அத்தோட்ட மக்களின் பிரச்சனைகளை கவனிப்பார் என்று கூறினார். இதையேத்தான் 10 ஆண்டுகளுக்கு முன், சாமிவேலும் சொன்னார். இவ்வளவு ஏன், அபாக்கோ தோட்டத்தில் உள்ளேயே ஒரு ம.இ.கா கிளை கூட ஒன்று இருந்தது. ஆனால், தற்போது ம.இ.கா-வின் செயலைப் பார்த்தால் இப்போதான் புதுசா இந்த அபாக்கோ தோட்டத்தைக் கண்டுப் பிடித்த மாதிரியும், இப்போதுதான் முதல் முதலாக இத்தோட்டத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள மாதிரியும் காட்டிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் கிட்ட வந்துடுச்சி. மக்களோட ஓட்டு வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசத் தயாராகி விட்டனர்.

இந்த அபாக்கோ தோட்டத்தில் எனக்கும் ஒரு சில பங்கு உண்டு. நான் அபாக்கோ தோட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலிருந்தே, அதாவது 1990-லிருந்தே சென்று வருகிறேன். இதனால் நான் அங்கு பல சாதனைகள் அங்கு செய்துள்ளேன் என்ற சொல்ல வரவில்லை. அபாக்கோ தோட்டத்தில் நான் சென்ற காலகட்டத்திலிருந்து நடந்து வருபவையும் என்னுடை கொஞ்ச அனுபவத்தையும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, அபாக்கோ தோட்ட தொழிலாளிகள் ஒரு மாபெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளிகளின் சம்பளத்தில் உள்ள சில்லறை பணத்தை உரம் வாங்க முதலாளி பயன்படுத்தினான். இந்த அநியாயத்தை எதிர்த்து பச்சைமுத்து என்ற ஒரு தொழிலாளி தைரியமான கேள்வி எழுப்பியதும், அவரை வேலை நீக்கம் செய்தனர். இதனால், தோட்டத் தொழிலாளிகள் 24 நாட்கள் வேலை நிருத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த ஆரம்பக் கட்டத்தில், ஒரு ம.இ.கா தலைவர் முதலாளிக்கு சாதகமாகி போராட்டத்திற்கு துரோகம் செய்ய, “அபாக்கோ தோட்ட முதலாளி தங்கமான மனிதர், ஆகையால் நாம் போராட்டத்தை கைவிட்டு மறுபடியும் வேலைக்குச் செல்ல வேண்டும்” எனக் கூறினார். அவர் இதைப் பற்றி பத்திரிக்கையிலும் அறிக்கைவிட்டு தொழிலாளிகள் வேலைக்கு திரும்புவார்கள் என்றார். இதைச் சொன்ன அந்த ம.இ.கா தலைவர் வேறு யாருமல்ல, போன வாரம் மக்களுக்கு பொருட்கள் கொடுத்த அய்யா சாமிதான். அந்த போராட்டத்திற்கு பல முன்னாள் போராட்டவாதிகள் எஸ்.என்.ராஜா, தியாகராஜன், ஆரோக்கிய தாஸ், டாக்டர் ராமசாமி போன்றோர்கள் மக்களின் போராட்டத்திற்கு சாதகமாக இருந்தனர். ஆனால் இந்த வர்க்க போராட்டத்தில் ம.இ.கா மக்கள் பக்கத்தில் இல்லை.  அந்த நாளிலிருந்து இன்றுவரை நான் தொடர்ந்து அபாக்கோ தோட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். இது அன்றைய சிறு குழந்தையிலிருந்து இன்றைய பெரியவர்கள் வரை தெரியும்.

நானும் என் நண்பர்களும் தோட்ட விவகாரத்தில் தலையிடுகிறோம் என்று கூறி என்னைப் பற்றியும் என் நண்பர்களை பற்றியும் யு.கே.ம் பல்கலைக்கழகத்தில் தோட்ட முதலாளி புகார் செய்தார். இருந்தும், நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டோம். நாங்கள் இத்தோட்டத்து மாணவர்களுக்கு  இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்தோம். தோட்ட தொழிலாளிகளின் அடிப்படை பிரச்னைகளான சம்பளம், சொந்த வீட்டுத் திட்டம், பொது வசதி என்று பல விஷயத்தில் மக்களுடன் ஒன்றினைந்தோம். தோட்ட மக்களுக்கு பொது வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, சூழ்நிலையை மாற்றியமைக்க அன்றே மனிதவள அமைச்சுக்கு மற்றும் சமூகநல இலாகாவிற்கும் பல கடிதங்கள் அனுப்பியுள்ளோம். அந்த கடிதங்களில் ஒன்றைப் பார்த்துதான் அன்று டத்தோ வீரசிங்கம் (சமூகநல துணை அமைச்சர்) என்னை தொடர்பு கொண்டு, பின் சாமிவேலும் இந்த தோட்டத்திற்கு வந்தார்.

16 ஏப்ரல் 2001-ல் சாமிவேலு முதன் முறையாக இத்தோட்டத்திற்கு வந்தார், அது ஒரு அதிர்ச்சியான நாள். அவர் அந்த தோட்டத்திற்கு வரப் போகிறார் என்றதும் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ம.இ.கா கிளை உறுப்பினர்களும் சுயம்வரம் மேற்கொண்டு அபாக்கோ தோட்டத்திற்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் அபாக்கோ உள்ளே போவதற்காக பாலம் உடைந்து இருந்ததால், அத்தோட்டத்திற்குள் செல்ல வழி தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நான்தான் தோட்டத்திற்கு செல்லும் வேறொரு பாதையைக் காட்டினேன்.

அன்று டத்தோ சாமிவேலுவிடம் நான் தோட்ட மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை முன்வைத்தேன். அந்த தோட்டத்தைச் சுற்றி உள்ள மற்ற இடங்களில் அரசாங்க குடிநீர் கிடைத்தது. ஆனால், அபாக்கோ தோட்டத்தில் மட்டும் ஒரே ஒரு வீட்டிற்குத்தான் அரசாங்க தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது. மற்றவர்களுக்கெல்லாம் பசார் தண்ணீர்தான் கிடைத்தது. அரசாங்க தண்ணீர் கிடைத்த அந்த ஒருவர் அங்குள்ள ம.இ.கா தலைவராவார். தோட்டத்தில் தண்ணீர் பிரச்னை வரும் போதெல்லாம் RM2 வெள்ளிக்கு தண்ணீரை மக்களுக்கு விற்றார் அந்த ம.இ.கா தலைவர்.  இந்த அவமானத்தை தாங்க முடியாமல்தான், டத்தோ சாமிவேலு ஜே.கே.ஆர் உதவியுடன் அபாக்கோ தோட்டத்திற்கு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார். இதற்காக நான் டத்தோ சாமிவேலுவை பாராட்டுகிறேன். அதே வேளையில், வை.எஸ்.எஸ்-டெனிசனிடம் தோட்டத்திலுள்ள சமூகநல பிரச்னைகளை கொண்டு சென்றோம். அந்த நாளில் டத்தோ சாமிவேலு மக்களுக்கு 7 வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதாவது:

*தோட்டத்தில் வேலை இல்லாத பிள்ளைகளுக்கு கைதொழில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறினார்
*அந்த தோட்டத்திற்கு செல்லும் முன்னிலை சாலையை பழுது பார்த்து கொடுப்பதாக கூறினார்
*அடிப்படை வசதியான கழிவரை, குளியலரை போன்றவற்றை கட்டி கொடுப்பதாக கூறினார்
*குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக கூறினார்
*மோசமான சூழ்நிலையில் உள்ள எல்லா வீடுகளையும் பழுது பார்த்துக் கொடுப்பதாக கூறினார்
*குழந்தை பராமரிப்பு இல்லத்தை சரிப்படுத்திக் கொடுப்பதாக கூறினார்

*டத்தோ. சோமசுந்தரனிடம் பேசி அங்குள்ள மக்களுக்கு மலிவு விலை வீடு கட்டிக் கொடுப்பதாக சொன்னார்.

இந்த வாக்குறுதிகளைப் பற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும், சாமிவேலும் சரிஅவருடன் வந்த மற்ற ம.இ.கா வட்டார தலைவர்களும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று இவர்களுக்கு திடீரென்று அபாக்கோ தோட்டத்தின் மீது ஒரு ஆர்வம் வந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. இந்த சம்பவங்களுக்கான ஆதாரக் கடிதங்களும் என்னிடம் உள்ளது.

பக்காத்தான் 2008-ல் ஆட்சிக்கு வந்தவுடன், நாங்கள் மாநில அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள பிள்ளைகளுக்கு பள்ளி பேருந்து செலவிற்காக தொகையை வாங்கிக் கொடுத்தோம். 2011-ல் இந்த பணத்தை பெற்றுக் கொடுக்க முயன்றும் நடக்கவில்லை. இதை டாக்டர் சேவியர் அவர்களிடம் கூறினோம். அவர் இந்த பிரச்சனையை தீர்ப்போம் என்று உறுதிக் கொடுத்தார்.

இதற்கிடையில், 2011-ன் கடைசியில், மேம்பாட்டிற்காக தோட்டம் விற்க்கப்பட போகிறது என நிர்வாகம் கூறியது. அதற்காக மாநில அரசாங்கத்திடம் அனுமதிக் கோரியது. இதில் நாங்கள் தலையிட்டு தோட்ட நிர்வாகம் தோட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மேம்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என கூற, மாநில அரசாங்கமும் அந்த நிபந்தனையை நிர்வாகத்திற்கு விடுத்தது. இந்த தோட்டத்து மக்கள் மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அதனால், இவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து மிகவும் மலிவான விலையில் வீடு கட்டித்தர வேண்டும் என மாநில அரசாங்கத்திடம் நாங்கள் முறையிட்டோன். அதற்கு மாநில அரசாங்கமும் முயற்சி செய்யலாம் என்றனர்.

ஆனால், நடந்தது என்னவென்றால், 16 ஜனவரியில் அபாக்கோ நிர்வாகம் இந்த ஒப்பந்தம் துண்டிக்கப்பட்டு விட்டது என்றும் தோட்டம் மேம்பாட்டிற்கு செல்லவில்லை எனவும் கூறினர். ஆகையால், தோட்ட மக்கள் வேலைக்கு செல்லலாம் என்ற பழைய நிலை உருவானது. இதுதான் இன்றைய சூழ்நிலை.

தோட்டத்தின் சூழ்நிலை இப்படி இருக்க, மக்களின் அடிப்படையான பிரச்னைகளை தீர்க்காமல் அரிசி, பருப்பு, பள்ளி சீருடை போன்ற பொருட்களை போட்டிப் போட்டுக் கொடுத்து பாமர மக்களின் பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என சிலர் நினைக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் இவர்களின் பிரச்னையை தொழிலாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றபோது, தோட்டத்து மக்கள் வாழும் வீடுகள் அனைத்தும் வாழ்வதற்கு தகுதியான வீடல்ல, அதை எல்லாம் திருப்பக் கட்ட வேண்டுமென்று கூறினர். ஆனால், அவர்களின் வீடு இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது.  இதற்கு காரணம் தொழிலாளர் அலுவலகத்தினர் தோட்ட முதலாளியிடமிருந்து லஞ்சம் வாங்கியிருப்பார்கள் என்று வெளிப்படையாக நான் கூறுவேன். யாருடைய கடமை இது. தொழிலாளர் அலுவலகம், நேரடியாக மனிதவள அமைச்சின் கீழ் வருகிறது. இந்த பிரச்சனையை ம.இ.கா துணைத் தலைவர், மனிதவள அமைச்சர் சுலபமாக தீர்த்துவிடலாம். அவர் அந்த பதவியில் இருக்கிறார். ஆனால் அது நடந்ததா?

இந்த அபாக்கோ தோட்ட மக்களின் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால், தோட்ட முதலாளியுடன் ஒரு போராட்டம் நடத்த வேண்டும். ம.இ.கா தேசிய தலைவர்கள் இதைச் செய்யாமல்,  சின்ன சின்ன ம.இ.கா தலைவர்களை தோட்டத்திற்கு அனுப்பி மலிவு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் பி.எஸ்.எம், ஜெரிட், மற்றும் மக்கள் மேம்பாட்டுக் கழகம், அந்தக் காலத்திலிருந்தே தொழிலாளர்களின் உரிமைகள், வர்கப் போராட்டம், மக்களை பலப்படுத்துதல் போன்ற வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். இதுபோன்ற போராட்டத்தினால்தான் பல தோட்டங்களில் வெற்றியும் கண்டுள்ளோம். பிரதமர் தோட்டம், புரூக்லண்ஸ் தோட்டம், புக்கிட் ஜாலில் தோட்டம் மற்றும் பல சாதனைகள் உண்டு.

நாங்கள் தொழிலாளர்களை பயன்படுத்தி அப்பப்போ கட்சிக் கொடியைப் தூக்கி, அவர்களுக்குப் பொருட்கள் கொடுத்து அவர்களை வலு இழக்கச் செய்ததில்லை. மாறாக, மக்களை பலம்படுத்து ஒரு உரிமைப் போராட்டத்திற்கு தயார் படுத்துகிறோம். ஆக, அபாக்கோ பிரச்சனை தீர வேண்டுமானால், தொழிலாளர்களை பலம்படுத்தி ஒரு போராட்டம் நடத்த வேண்டும். முதலாளிகளிடம் சண்டை போட வேண்டும். இதுதான் உண்மையான சவால்; அதை விடுத்து பத்திரிக்கை முன்னிலையில் நின்று போஸ் கொடுப்பது அல்ல.

எஸ். அருட்செல்வன், PSM தலைமைச் செயலாளர்.