அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!

“எனக்கு ஒரு கனவு உண்டு”  (“I have a dream”) என்றார் மார்ட்டின் லூதர் கிங்.

உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் கண்டும் கேட்டுமிராதக் கொடுமைகளை, துன்பங்களை, அவமதிப்புகளை அனுபவித்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைக்காகப் போராடிய பலரில் தனது கனவை நனவாக்கத் தெருப் போராட்டத்தில் இறங்கியவர் மார்ட்டின் லூதர் கிங்.

அவர் தனது கனவைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை நாளிதழில் கவிதை எழுதி விட்டு தமது இன மக்களின் உரிமைகளை அடமானம் வைக்கவில்லை.

வாஷிங்டன் தெருவில் நடந்தார்; தெருப் போராட்டம் நடத்தினார். அமெரிக்காவில் தெருப் போராட்டம் நடக்காத இடமே இல்லை என்றாகிவிட்டது.

மார்ட்டின் லூதரின் கனவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நனவானது. கருப்பர் அதிபரானார்!

அம்பிகாவுக்கும் (BERSIH 2.0) கனவு உண்டு. அது அனைத்து நேர்மையான மலேசிய மக்களின் கனவுமாகும்: ஊழலற்ற தேர்தல்!

கோலாலம்பூர் தெருவில் அம்பிகா பேரணியில் நடக்கவிருக்கிறார். ஜூலை 9 இல் தெருப் போராட்டம் நடத்தவிருக்கிறார்.

பேரணி என்பது நமது அரசமைப்பில் உள்ள ஓர் உரிமை. அமைதியான வகையில் பேரணியில் ஈடுபட விதி 10 மக்களுக்கு அந்த உரிமையை கொடுக்கிறது என்கிறார் இந்த முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர்.

தெருப் போராட்டம் ஆயுதமற்ற மக்களின் வலிமை மிக்க ஆயுதம். அந்த ஆயுதம் படைத்த வரலாறுகள் பல. மகாத்மா காந்தி தண்டி பேரணியில் நடந்தார். பிரிட்டீஷ் பேரரசு வீழ்ந்தது. பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ் விரட்டப்பட்டார். ஆனால், அரசர்கள், அதிபர்கள், பிரதமர்கள் தங்களுடைய துப்பாக்கிக் குண்டுகள் மக்கள் பேரணியைவிட மகத்தான சக்தி என்ற கனவில் இன்னும் ஆட்டம் போடுகிறார்கள்.

இந்த வரலாறு புரியாத சூனியங்களின் அட்டூழியங்களை ஊருக்கும் உலகிற்கும் அம்பலப் படுத்துவதான் மக்கள் பேரணியின், தெருப் போராட்டத்தின் நோக்கம்.

தலையில் பட்டை அணிந்து தங்களுடைய சுல்தான்கள் இழந்து விட்ட அரசியல் அதிகாரத்தை ஊருக்கும் உலகிற்கும் அம்பலப்படுத்த தெருப் போராட்டம் நடத்தியது யார்?

மலாயாவின் முதல் தெருப் போராட்டத்தை “Malayan Union” அமைக்கப்படுவதற்கு எதிராக நடத்தியது யார்?

இன்று, அம்பிகாவின் மக்கள் பேரணிக்கு எதிராக, தெருப் போராட்டத்திற்கு எதிராக, கொக்கரிக்கும் அம்னோதான் அந்த முதல் தெருப் போராட்டத்தை நடத்தியது!

அம்னோ தெருப் போராட்டம் நடத்தினால், அது வீரப் போராட்டம். அம்பிகா நடத்தினால், அது சட்டவிரோதப் போராட்டம்! எவன்டா நீதி பேசுகிறவன்?

மக்களுக்கு எதிராக அட்டூழியம் புரிபவர்கள் பிரிட்டிஷாராக இருந்தால் என்ன, அம்னோக்காரர்களாக இருந்தால் என்ன. குற்றம் குற்றமே!

தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்து கொள்ளை யடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சட்டத்திற்கு புறம்பாக மக்களுக்கு அரிசி, சோறு, மேகீ மீ, சீனி, (உப்பு கொடுப்பதில்லை, மக்களுக்கு ரோசம் வந்து விடுமே!) பருப்பு, டீ சட்டை, மான்யம், ரொக்கமாகப் பணம் போன்றவற்றைக் கொடுத்து அம்னோ அரசாங்கம் வாக்குகள் வாங்குவது இந்த உலகமே அறியும்.

இந்த அம்னோ அசிங்கங்கள் நீதி, நேர்மை, சமய ஈடுபாடு பற்றி வாய்கிழிய பேசுவதைக் கேட்டு தேனும் இனிக்க மறந்து விடுகிறது.

வழி இருக்கிறது. வழி காட்ட அம்பிகா புறப்பட்டு விட்டார். நாம் எந்த வழியில் போகப் போகிறோம்?

சிந்திப்போமா!