பிரதமரின் இலட்சியப் பாதையை சிதைக்காதே!

24.4.2012, பகல் 3 மணிக்கு மலேசிய அரசாங்க வானொலியான மின்னலில்  இசுலாமிய நிகழ்ச்சி இலட்சியப் பாதையிலே ஒலிபரப்பானது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன் கலந்து கொண்டார். வானொலி இசுலாமிய பேரறிஞர் ஜமால் அப்துல் ஹமீது செவ்வியை வழிநடத்தினார்.

முகமன் கூறி; வானொலி சமயப் பேரறிஞர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி செவ்வியைத் தொடங்கினார்.

தான் சைவக் குடும்பத்தில் பிறந்து சைவ சமய நெறிகளைக் கற்று; தேவார திருவாசகங்களை ஓதி அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து நெறியுடன் வாழ்ந்ததாகக் கூறினார் சேசாஷலம் என்ற இயற்பெயரைக் கொண்ட அப்துல்லா பெரியார் தாசன்.

பதின்ம வயதில் பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் எனப் பெயரை மாற்றிக்கொண்டு பெரியார்வழி நின்று அக்கொள்கைகளைப் பரப்பியதாகக் கூறினார் பேராசிரியர்.

பிறகு ஏறக்குறைய 50 வயதில், பௌத்தம் தன்னை ஈர்த்தது என்றும், பௌத்த மதத்தைக் கற்றுத் தேர்ந்து  அதனைக் கடைப்பிடித்து பரப்பத் தொடங்கியதாகவும் கூறினார்.

பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்னர் இசுலாத்தினை விமர்சிக்கவேண்டுமென எண்ணி இசுலாமிய மதத்தை படிக்கத் தொடங்கி; அதன்பால் ஈர்ப்புகொண்டு இசுலாமியராக மாறி அப்துல்லா பெரியார்தாசன் எனப் பெயரை மாற்றிக்கொண்டு ; இசுலாமிய நெறிகளைப் பரப்புவதையே வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இப்படியாக செவ்வி தொடர்ந்த வேளை வானொலி சமயப் பெரும் பேரறிஞர் கேள்விக்கணையைத் தொடர்ந்து தொடுத்தார். பேராசிரியர் அப்துல்லா இசுலாத்துக்கு வந்த பின்னர், அவரது  பணி எப்படி அமையப்போகின்றது என்றார்.

இதற்குப் பதிலளித்த வேளையில், இந்தியாவில் பல கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டுவந்ததாகக்  (யோகம், வைதிகம், வேதாந்தம், சாங்கியம், மீமாம்சம் உட்பட) கூறி திருமூலர் திருமந்திரம் ஒன்றை உதாரணம் காட்டினார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே

என்று கூறி, இது மார்க்கமன்று; இது மெய்யன்று, இசுலாமிய மார்க்கம் மட்டுமே  மெய்மார்க்கம் என வெடி வைத்தார். திருக்குரானும் இசுலாமும் மட்டுமே உண்மை நெறி; உண்மை மார்க்கம் என்றார்.

வானொலி சமயப்  பேரறிஞர், இடையே “மெய்மை மறைக்கப்பட்டு பொய்மை கூத்தாடுகின்றது” என இரண்டு முறை அழுத்திக் கூறினார்.

இப்படியாக செவ்வி நிறைவு பெற்றது.

அன்பு மலேசியர்களே, இந்நிகழ்ச்சி மூலம் நமக்கு தயாரிப்பாளர் சொல்ல வந்தது என்ன என சிந்திக்கும் வேளையில்…

1.    சைவ சமயத்தவர் (இந்துக்கள்) இசுலாத்துக்கு மாறவேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
2.    சைவ சமயமமும் பௌத்தமும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சமயங்களல்ல எனக் கூற வருகின்றார்களா?
3.    ஒலிபரப்பில் சமய நிகழ்ச்சிகளில் எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று கூறுகின்றார்களா?
4.    சமய நிகழ்ச்சிகான ஒலி/ஒளிபரப்பு நெறிகளை மறைக்கின்றார்களா/மறுக்கின்றீர்களா?
5.    மற்ற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது என்ற இசுலாமியக் கொள்கையை மறுக்க வேண்டுமென நினைக்கின்றார்களா?
6.    ஒரே மலேசியாவுக்கு வேட்டு வைக்க எண்ணுகின்றார்களா?
7.    இதுகாரும் மலேசியாவில் பேணப்பட்டு வந்த இன ஒற்றுமைக்கும் சமய சகிப்பத்தன்மைக்கும் சாவு மணி அடிக்க நினைக்கின்றார்களா?
8.    எல்லா சமயங்களும்   சுதந்திரமாக கடைப்பிடிக்கப்படலாம் என்ற மலேசிய அரசியலமைப்பை மறுக்கின்றார்களா?
9.    எல்லாருக்கும் சம உரிமை; சமத்துவம் எனக் கொள்கை கொண்டுள்ள மலேசிய அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் பிரியாவிடை கொடுக்க நினைக்கிறார்களா?

நாம் செய்யவேண்டியதெல்லாம் :

1.    பிரதமருக்கு இதனைத் தெரிய வைப்போம்.
2.    தகவலமைச்சருக்கும் அமைச்சுக்கும் கடிதம் அனுப்புவோம்
3.    அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இதனை தெரிய வைப்போம்.
4.    சமய அமைப்புகளுக்கு இதன் நகலை அனுப்பி வைத்து; நடவடிக்கை எடுக்கக் கோருவோம்
5.    சமூக அமைப்புகளுக்கு கடிதம் எழுதிவோம்
6.    வானொலித் தலைவருக்கு அறிக்கை அனுப்புவோம்.

இணைந்து சமயத்தைக் காப்போம்; மலேசியத்தை உயர்த்துவோம்.

-தமிழினி