பங்குதாரர்களுக்கு உரிய தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்

ஜி டீம் ரிசோர்சஸ் (G Team Resources) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஓரியெண்ட்டல் கெப்பிட்டல் எசுரன்ஸ் பெர்ஹாட் (OCA) அண்மையில் தனது 79.85% விழுக்காட்டு மைக்கா பங்குகளை டியூன் இன்சுரென்ஸ்-சிடம் (Tune Insurance) விற்றது தற்போது ஒரு விவகாரமாக எழும்பியுள்ளது.

 

இந்த விற்பனை உடன்பாட்டின் வழி, எஞ்சியுள்ள உபரி ரொக்கம் எவ்வாறு பகர்ந்தளிக்கப்படும் என்பதுதான் கேள்வி!

 

மேற்குறிப்பிட்ட பங்குகளை ரிம156.91 மில்லியனுக்கு ட்யூன் இன்சுரன்ஸ் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பங்கு ஒன்று 1.965 ரிங்கிட் வீதம் விற்கப்பட்டுள்ளது.

 

தொடக்கத்தில் வணிகப் பொருளகம் ஒன்றும், காப்புறுதி நிறுவனம் ஒன்றும் மைக்கா பங்கை தலா 1.59 ரிங்கிட்டுக்கு கொள்முதல் செய்ய முன்வந்துள்ளன. எனினும் இறுதியில் ஒ.சி.எஸ் பங்குகள், தலா 1.965 ரிங்கிட் வீதம் டியூன் இன்சுரன்ஸிடம் விற்கப்பட்டது. இதனால் உபரித் தொகை மிஞ்சியுள்ளது.

 

இந்தப் பங்கு விற்பனைக்குப் பின் கையிருப்பில் உள்ள உபரி தொகை எவ்வளவு என்பது குறித்து, ஜி டீம் ரிசோர்சஸ் வெளிப்படையாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

 

இந்திய சமூகத்தின் பொருளாதார ஏழ்மையை நிவர்த்தி செய்வதற்கான ஓர் ஊர்தியாக மைக்கா நிறுவப்பட்டது. மைக்கா ஹொல்டிங்ஸ் கைமாறினாலும் சீர்படுத்தப்பட்டாலும், தொடக்கத்தில் ம.இ.கா அதனை நிர்வகித்த விதம் குறித்தும், நிறுவனம் அல்லாடியது குறித்தும் இந்திய சமூகம் இன்னமும் ஆவேசமும் கொண்டுள்ளது.

 

முதலீட்டு நிறுவனம் ஒன்றை உதிக்கச் செய்வதில் ம.இ.காவுக்கு உதவுவதற்காக அன்று ஏழை பங்குதாரர்கள் அதற்கு ஆதரவளித்தனர். இதனைக் கருத்திற்கொண்டு தற்போது மைக்கா பங்குகளை நிர்வகித்துவரும் ஜி டீம் ரிசோர்சஸ் பழைய பங்குதாரர்களின் மனக்குறையைப் போக்கும் வகையில் உபரி தொகையை அவர்களுக்குப் பங்கிட்டு அளிப்பது விவேகம்.

 

மைக்காவின் ஆகக் கடைசி ஆண்டுப் பொதுக்கூட்டம் ஜுன் 2007-ல் நடைபெற்றது. 2008, 2009, 2010, 2011 ஆகிய அண்டுகளில் அது நடத்தப்படவில்லை. எல்லா பங்குதாரர்களுமே தங்கள் பங்குகளை ஜி டீம் ரிசோர்ஸ்ஸிடம் விற்றுவிடவில்லை. மைக்காவின் சில பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்க மறுத்து விட்டனர். அதனால் தற்போது எஞ்சியுள்ள பங்குதாரரகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆகவே ஆண்டு பொதுக் கூட்டம் நடத்துவதில் ஏன் சுணக்கம்?

 

ஏப்ரல் மாதம் 2010ல் ஹ¤லு சிலாங்கூரில் நடைபெற்ற இடைத் தேர்தலின் போது தலை தூக்கிய மைக்கா ஹொல்டிங்ஸ் விவகாரம், பிரதமர் நஜிப்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த பொது விசயமாகும். ம.இ.காவையும் ச.சாமிவேலுவையும் காப்பாற்றும் பொருட்டு, மைக்கா பங்குகளை விற்பதற்கு ஞானலிங்கத்தை வளைத்துப்போடப்பட்டார். பங்கு ஒன்று தலா 80 சென் வீதம்,106 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கு பங்குகள் விற்கப்பட்டன.  

 

அன்று மைக்காவுக்கு ஒ.சி.எ. பெர்ஹாட்டில் 74% பங்குரிமையும், நீலாய் அருகில் உள்ள தும்போக் தோட்டத்தில் எஞ்சிய ஒரு சிறிய நிலப் பகுதியும், 60 மில்லியன் ரிங்கிட் கடனும் இருந்தது.

 

பங்கு நிறுவனத்தை ஏமாற்றியதோடு, நிர்வாகத் தவறும் புரிந்த சாமிவேலுவும் அவரது சகாக்களும் விலகி நின்றனர். தவறு புரிந்தவர்களுக்கு, பாரிசான் நேஷனல் அரசங்கம் போலீஸ் பாதுகாப்பு அளித்தது. இப்போது அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என பிரதமர் இந்தியர்களைக் கேட்டுக்கொள்கிறார்.

 

பிரதமர் நஜிப் மைக்காவை கலைத்துவிட்டாலும், தங்களுக்கு துரோகம் இழைத்த ஒருவருக்கு பாதுகாப்பு அளித்ததோடு வெளிநாட்டுத் திட்டங்களுக்கு தூதராக நியமித்த அநீதியை மலேசிய இந்தியர்கள் மறக்கமாட்டார்கள். இது இந்திய சமூகத்துக்கு ஓர் அவமரியாதை!