பிடிபிடிஎன் சடுகுடுவில் பிஎன் கால் இடரியது!

-கா. ஆறுமுகம்

‘சிறுபிள்ளைத்தனமாக’ மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிலாங்கூர் பல்கலைக்கழகங்களுக்கான பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன்கள் முடக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டது. கல்லை தூக்கி காலில் போட்ட கதையாக முடிந்தது.

பிடிபிடிஎன் தேவையா?

நமது நாட்டை இதுவரை எத்தனை நாடுகள் படையெடுத்து வந்துள்ளன? சரவாக் இணைப்பு காலத்தில் 1963இல் இந்தோனேசியவின் கெடுபிடி நான்கு ஆண்டுகள் நீடித்தது. அதுவும் கிழக்கு மலேசியா சார்புடையது. அதன் பிறகு நமக்கு சவாலாக  உள்ளது அயல் நாட்டுப் போர் அல்ல, சாதாரண உள்நாட்டு திருடர்களும் தெருவோர வழிப்பறி கொள்ளயர்களும்தான்.

ஆனால், நமது நாட்டின் அறிவு ஜீவி தலைவர்கள் நாட்டின் வருமானத்திலிருந்து 2006 முதல் 2015 வரையில் ரிம 39.5 பில்லியனை இராணுவ தளவாடங்களுக்கும் போர்க் கருவிகள் வாங்கவும் ஒதிக்கீடு செய்தனர். அதேவேளை நமது குழந்தைகள் மேல்கல்விக்கு அவர்கள் தலையில் அரசாங்கம் சுமத்திய மொத்த கடன் (1997 முதல் 2012 வரையில்) ரிம 28 பில்லியன் ஆகும்.

நல்ல நகைச்சுவைதான்.

நாட்டின் எதிர்காலம் குழந்தைகள்தான். அவர்களுக்கு நல்ல தரமான கல்வியை இனமாக கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இந்த பிடிபிடிஎன் மூலம் கல்வியை வாணிபமாக உருவாக்கி  அரசாங்கம் தனது முக்கிய பொறுப்பை தனியார் மயமாக்கி விட்டது. அதனால் தற்போது உருவாகும் இளைய தலைமுறை கல்விக் கூடங்களை விட்டு வெளியேரும் போது தலையில் சுமத்தப்பட்ட கடனால் விழி பிதிங்கி நிற்கின்றனர்.

நல்ல மாணவர்களாக உருவாக வேண்டியவர்களில் பலர் இன்று நமக்கு தொல்லை தரும் சமூக பிரச்னைவாதிகளாகவே தோன்றுகின்றார்கள். இவர்களில் சாதாரண உள்நாட்டு திருடர்களும் தெருவோர வழிப்பறி கொள்ளயர்களும் அடங்கும்.

இவர்களுக்கு ஒதுக்க வேண்டிய பணத்தை போர் கருவிகள் வாங்க ஒதுக்குவதால் யாருக்கு என்ன நன்மை?

இந்த பிடிபிடிஎன் கடன்கள் எதற்காக? இதுபோல நமது மாணவர்களை கடனாளியாக்கி யார் இவர்களை இரானுவ போர்க்கருவிகளை வாங்கச்சொன்னது?

உதாரணமாக நமது நாடு வாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களின் மொத்த விலை ரிம 7.3 பில்லியன். இதை வைத்துக்கொண்டு நாடு எதை சாதிக்கப்போகிறது? நீரின் அடியில் வந்து நம்மை படையெடுக்கப்போவது யார்? அன்மைய காலங்களில் எங்காவது நீர்மூழ்கி கப்பல் கொண்டு அயல் நாட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளதா? அப்படியே நடந்தாலும் இரண்டு கப்பல்களை கொண்டு என்ன செய்ய முடியும்.

ஆனால் இந்த ரிம 7.3 பில்லியனைக்கொண்டு மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி போல் குளிர்சாதன மண்டபத்துடன் கூடிய 2,000 பள்ளிக்கூடங்களை அரசாங்கத்தால் கட்ட இயலும்.

நாடு எங்கோ போய் கொண்டுள்ளது! மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

TAGS: