“KUMPULAN WANG TENAGA BOLEH BAHARU”

இதனை எப்படி மொழிமாற்றம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது உடனடியாக உங்கள் வீட்டு மின்சார கட்டண சீட்டை எடுத்துப் பாருங்கள். இப்படி உங்களுக்கே புரியாத ஒரு வாக்கியம் அதில் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்.

பணிமனை மின்சார கட்டண சீட்டில் இதனை பார்த்தப் பிறகு கொஞ்சம் யோசிக்க வேண்டும் போல் தோன்றியது. இதனைப் பார்த்த பிறகு ஒரே மலேசியா கொள்கையின் கீழ் எல்லா மலேசிய மக்களுக்கும் TNB பங்குரிமை கொடுத்திருப்பதாகவும் இப்போது 20-களின் இறுதியில் இருக்கும் நாங்கள் இன்னும் 20 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி நிறுவனமான TNB-யில் கணிசமான அளவு பங்குகளை வைத்திருப்போம் என மனம் மகிழ்ந்து போனோம்.

என்னுடைய பணிமனை நிர்வாகி நேரடியாக TNB-க்குத் தொடர்பு கொண்டு அரசாங்கத்தின் இந்த பங்கு பங்கீடு எவ்வாறு வேலை செய்கிறது என விசாரிக்க தொடங்கி விட்டார். TNB-யின் அதிகாரி வழங்கிய விளக்கம்தான் என்னை இந்த சிறு கட்டுரையை எழுதத் தூண்டியது.

ஒவ்வொரு மின்சார கட்டண பில்லுக்கும் குறிப்பிட்ட மின்சார பயன்பாட்டிற்குப் பிறகு TNB ஒரு விழுக்காட்டு வரியை அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டுமாம். அந்த ஒரு விழுக்காட்டு வரியைத்தான் “KUMPULAN WANG TENAGA BOLEH BAHARU” என்ற பெயரில் TNB நம் ஒவ்வொருவரின் தலையிலும் மிக லாவகமாக சுமத்தியிருக்கிறது.

மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு ஆட்சியில் மக்களுக்கு இப்படி ஒரு அவலமா? எவனுடைய வரியை எவன் கட்டுவது. கோடி கோடியாய் பணம் கொழிக்கும் TNB கட்ட வேண்டிய வரியை நாம் ஏன் செலுத்த வேண்டும்?

10 மில்லியன் வீடுகளின் மின்சார கட்டணத்திலிருந்து 1 வெள்ளியை TNB பெறுகிறது என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் எந்தவொரு மேலதிக வேலையுமின்றி 10 மில்லியன் மக்கள் பணத்தை TNB நம்மிடம் வாங்கி அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறது. மிக அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வளவு அதிகமான வரியைச் செலுத்த வேண்டும். இதை ஒரு காரணமாக காட்டி உற்பத்தி பொருள்களின் விலை ஏற்றப்படாது என்பது எந்த வகையில் நிச்சயம்?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 காசுக்கு ஏற்றினாலே தே தாரிக், ரொட்டி சானாய் தொடங்கி எல்லா பொருள்களும் விலை ஏறுகிற ஏற்றப்படுகிற நிலையில் முதலாளி வர்க்கம் தனது அடுத்த கட்ட விலை ஏற்றத்தை என்று தொடங்கப் போகிறது.

இன்று மின்சாரத்திற்கு வரி… நாளை தண்ணீருக்கும் வரி விதிக்கப்படலாம். ஏழை மக்கள் தொடர்ந்து ஏழைகளாகிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் விழித்து கொண்ட மக்கள் மட்டும்தான் பிழைத்துக் கொள்ள முடியும்.

-தமிழினி