கடந்த வார இறுதியில் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் வளாகத்தில் நடைப்பெற்ற “நஜிப்பைக் கேளுங்கள்” நிகழ்ச்சியை முன்னிட்டு “Twitter meet up” நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்கள் உரையாற்றியிருந்தார்.
வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்கிற இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு, அவர்களுக்குத் தேசிய முன்னணி மட்டுமே ஏற்படுத்தித் தர முடியும் என்கிற மாதிரியான ஒரு ஒளிமயமான எதிர்காலம், மாறிவரும் இளையோர் சிந்தனை என்பவை பிரதமர் உரையின் முக்கிய சாரம்சமாக இருந்தன.
இதன்வழி, நாட்டின் தலையெழுத்தை தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய மிக முக்கியமான இடத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பிரதமர் மிக காலங்கடந்து உணர்ந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், அந்த வெற்றி வாய்ப்பை உண்மையாக உணர்ந்து நிர்ணயிக்கக்கூடிய தரத்தில் நமது இளைஞர்கள் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்புகிற பொழுது “இல்லை” என்கிற வருத்தமான பதிலை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.
அரசியல் விழிப்புணர்வு என்பது இளைஞர்களுக்கு இன்று வரையில் வழங்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வும், தேர்தலில் அவர்களின் முகாமைத்துவம் குறித்தும் பேசும் முன் அண்மையில் நான் நேரடியாக கண்ட மூன்று முக்கிய சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
காட்சி – 1
பரபரப்புமிக்க யூனிவர்சிட்டி விரைவு இரயில் நிலையத்தின் வெளிப்புறம். இளம் பெண் கைப்பையோடு சாலையைக் கடக்கிறாள். எங்கிருந்தோ விரைந்து வந்த 20-திலிருந்து 25 வயதிற்குள் மட்டுமே இருக்கும் இளைஞன் ஒருவன் அவள் கைப்பையைப் பறித்து கொண்டு ஓடுகிறான். அவள் கத்தி கூச்சலிடுகிறாள்; அந்த இளைஞன் இனத்தைச் சேந்தவர்களே அந்த இளைஞனைப் பிடித்து அடித்து உதைத்து இரத்தம் வழிய சாலையின் ஓரத்தில் கிடத்தி இருந்தார்கள். போலிஸ் வாகனம் நெருங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டபடி இருந்தது.
காட்சி- 2
கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலின் முன்புறம். ஒரு தாய் – குறைந்தது 45 வயதிருக்கும். கோவிலுக்குச் செல்வதற்காக சாலையின் ஓரமாக நடந்து வருகிறாள். எங்கிருந்தோ வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் அந்த தாயின் கழுத்திலிருக்கும் தாலிக் கொடியை எட்டிப் பறிக்கிறான். தாலிக் கொடி அறுந்து அவன் கைக்கு வரவில்லை. மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்துவிட்ட அவளையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறான். அருகிலிருந்தவர்கள் துரத்த இரத்தம் தோய மூர்சையாகிப்போன அந்த தாயை அப்படியே விட்டு தப்பி ஓடுகிறான்.
காட்சி -3
நெரிசல்மிக்க சிரி பெட்டாலிங் முதன்மை சாலை. ஒரு பெண் சாலை விளக்கு சந்திப்பில் தன் வாகனத்தில் இருக்கிறாள். எங்கிருந்தோ வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவள் பார்த்து கொண்டிருக்கும்போதே அவளது கார் கண்ணாடியை உடைத்து அவளது மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள். அந்த பெண்ணுக்கு முன்னும் பின்னும் வாகனத்தில் இருந்தவர்கள் அதை பார்த்தபடியே இருந்தார்கள்.
இவை எல்லாம் மிக அண்மையில் நான் நேரடியாக கண்ட சம்பவங்கள். இப்படி எண்ணற்ற இளைஞர்கள் எந்தவொரு இலக்குமின்றி இன மத பேதமின்றி நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி.
அண்மையில் இளைஞர் தினக் கொண்டாட்டத்திற்காக புத்ராஜெயாவில் திரண்ட மில்லியன் கணக்கான இளைஞர்களில் மேல் குறிப்பிட்ட இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தார்களா என்ற கேள்விக்கு யாராலும் பதில் கூற முடியாது.
நமது பிரதமர் எப்போதும் ஒன்றை மறந்து விடுகின்றார். கொண்டாட்டங்களுக்குக் கூடும் இளையோர் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் எந்தவொரு காலத்திலும் தூண்களாக விளங்கமாட்டார்கள். நிகழ்வுகள் நடக்கிற பொழுது மோட்டார் சைக்கிள்களில் கொடிகளை பறக்கவிட்டு கொட்டமடிப்பவர்களும் கத்தி கூப்பாடு போடுபவர்களும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதை நம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த விதிவிலக்குகளால் மட்டும் நாட்டின் முன்னேற்றத்தையும் மறுமலர்ச்சியையும் தீர்மானித்துவிட முடியாது. அதற்கு வெளியே கருப்புப் புள்ளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் அணிதிரள வேண்டும். அதற்கு என்ன செய்ய போகிறார் என்ற கேள்விக்கு மட்டும் இன்றைய நிலையில் பிரதமர் பதில் சொன்னால் போதும்.
இப்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்!
நஜிப்பை டிவிட்டரில் பின்தொடராததால் இந்த இளைஞர்கள் இப்படியான தளத்தில் இயங்கிக் கொண்டிக்கிடிறார்களா! நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
–தமிழினி