(கா. ஆறுமுகம்)
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி அங்குத் தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தினான். அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி நடந்தான்.
அவனது விடாமுயற்சியைக் கண்டு வியந்த அந்த உடலில் இருந்த வேதாளம் மீண்டும் எள்ளி நகையாடியது. “நீ என்னை புதைக்கும் வரையில் மௌனமாகவே இருக்க வேண்டும், பேசினால் நான் மீண்டும் முருங்க மரம் ஏறி விடுவேன், அதேவேளை நான் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தும் அமைதியாக இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்” என்றது. விக்கிரமாதித்தின் கவனமாக நடந்தான். “கேள்விக்கு முன்பு ஒரு கதைச் சொல்கிறேன் கேள்” என்றது.
“மன்னா, ஒருவன் கட்டளையிட, இன்னொருவன் அம்பைவிட, யாரோ ஒருவன் இறந்து விடுகிறான். இறந்தவனை கொன்றது யார்? இதுதான் இறுதியில் வரும், கவனமாக கேள் கதையை” என்ற வேதாளம், “இறந்தது ஓர் அழகான பெண்” என்றது.
“கடலில்தான் கப்பல் செல்வதைப் பார்த்திருப்பாய், கடலுக்கு அடியிலும் செல்லும் கப்பலை வாங்க திட்டமிட்டான் மலைநாட்டின் தளபதி, நப்துராக். பின்னால் இவன்தான் மன்னராகவும் முடி சூட்டப்பட்டான். இவனது மனைவி ரோமாவுக்கு நன்றாக மகுடி வாசிக்கத் தெரியும். அதற்கு ஏற்றவகையில் நப்துராக் ஆடுவதாகவும் வதந்தி உண்டு.
கடலுக்கு அடியில் செல்லும் கப்பலை, நீர்முழ்கி என்பார்கள். அதைக்கொண்டு கடலுக்கு அடியில் இருந்து வேவு பார்க்கலாம், ஏவு கணைகளையும் அனுப்பலாம். நீருக்கு அடியில் சென்றுவிட்டால் அது எங்கு உள்ளது என்று யாருக்கும் தெரியாது. அதை வாங்குவதன்வழி, அது எங்குள்ளது என்று காட்டாமலேயே கருவூலத்தில் உள்ள பொற்காசுகளைச் சுருட்டலாம் என்ற வியூகம் இருக்குமோ என்று நப்துராக்கின் மக்கள் புலம்புவதுண்டு.”
வேதாளம் சொல்லும் கதையில் சூதுகள் உள்ளதை விக்கிரமாதித்தன் உணர, செவிகளைக் கூர்மையாக்கினான். வேதாளத்தின் கதையைக் கேட்க, அவனைப் பின் தொடர்ந்து பல நிறங்களில் அங்குச் சுற்றி திரிந்த வேதாளங்களும் பின் தொடர்ந்தன.
அதில் முதிர்ச்சியான ஒன்று முணுமுணுத்தது, அவன் காதுகளில் தெளிவாகவே கேட்டது, “அதிகாரத்தைக் கொண்டு பணத்தைச் சுருட்டி, அதை கொண்டு அதிகாரத்தைக் கொள்ளையிட, மக்களை முட்டாளாக்க வேண்டும்.”
“மன்னா, உனக்கு இன்று நம்மை பின் தொடரும் வேதாளங்களும் உதவக்கூடும். எனவே, நான் சொல்வதை மட்டும் கேட்காதே” என்ற பீடிகையோடு தொடர்ந்தது.
“நீர்மூழ்கி கப்பலை செய்யும் நாடு நீண்ட தூரத்தில் உள்ளது, ஒலி செல்வதற்கே மூன்று சாமம் எடுக்கும். எதிர்காலத்தில் தமிழர் என்ற ஓரினத்தின் பண்பாடு சீரழியும் காலக்கட்டத்தில், இந்த நாட்டில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அவர்கள் வாயைப் பிளந்து கொண்டு ரசிப்பார்கள்.”
பின்தொடர்ந்த வேதாளங்களில் துடுக்கான ஒன்று. “அதன் இயக்குநர் பிரபுதேவா. அதில் நடித்த அன்சிக மொட்வானி ஆடைகள் போட்டிருந்தும் ஆடைகள் இல்லாத அளவிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்” என்று நாக்கை நீட்டியவாறு ஏளனமாக பார்த்தது.
“பிராஸ் என்ற அந்த நாட்டிடமிருந்து இரண்டு நீர்மூழ்கிகள் வாங்குவதற்கு திட்டம். இதற்கு மலை நாட்டின் முன்னாள் கருவூல அமைச்சர் ‘டாம்’ என்பவரின் நண்பர் இராகிம், பண்டா என்ற நப்துராக்கின் அந்தரங்க ஆலோசகரிடம் தொடர்பு கொண்டார். ஒருமுறை மலைநாட்டின் அண்டை நாடான சிங்கபுரத்தில் நடந்த வைர கண்காட் சிக்கு சென்றிருந்தபோது நப்துராக், தூயல்தான் என்ற தங்க நிறத்தினை கொண்ட வடிவான ஓர் அழகியை பண்டாவுக்கு அறிமுகப்படுத்தியதாக தகவல். திருமணமான பண்டா, தூயல்தானை தனது வைப்பாட்டியாகவும் வைத்துக் கொண்டான்”
வேதாளங்களில் ஒன்று “அந்த அழகியை நப்துராக் தானே வைப்பாட்டியாக… முடியாது… முடியாது… அதான்… ரோமா… மகுடி” என புலம்பியது.
இன்னொன்று, “அந்த மகுடியை ஒரு மலையாள மந்திரவாதி ரோமாவுக்கு கொடுத்ததாக, பெட்ரா என்ற ராஜா தனது மாயத்திரையில் காட்டியதாக நினைவு” என்றது.
‘மலைநாடு இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பிராஸ் நாட்டுடன் ஓலைச்சுவடி வழி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் சில வேலைகளை நுணுக்கமாக செய்து முடிக்க புறாவுக்கு பதிலாக மகோலியா அழகியான தூயல்தானை தூதுவிட்டனர். சொல்ல மறந்துவிட்டேன், தூயல்தானின் சொந்த ஊர் மகோலியா என்ற ஒரு நாடு. அழகான தூயல்தானுக்கு அறிவும் அதிகம். அவளால் சில காரியங்களைச் சாதிக்கவும் முடியுமாம்.”
பின்தொடர்ந்த வேதாளங்கள் அனைத்தும் ஒருமுறை அப்படியே நின்று, வாயை பிளந்துகொண்டு, தரையில் படுத்து மீண்டும் எழுந்தன. ‘பெண் என்றால் பேயும் இறங்குமாம்’ என்பதை செய்து காட்ட அப்படிச் செய்தன!
“ஓலைச்சுவடி ஒப்பந்தப்படி, பிராஸ் நாட்டின் நீர்மூழ்கி கப்பல் வியாபாரி, பண்டாவின் மனைவி கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு வியாபாரிக்கு இந்த நீர்மூழ்கி கப்பல்களைப் பட்டுவாடா செய்யும் பணியைக் கொடுத்தான். அதற்கு தரகு பணமாக இரண்டு யானை எடைக்கு சமமான தங்கத்தை கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் தற்செயலாக இதை செம்பருத்தி என்ற இதழில் படிப்பவர்கள் யூகிக்க அதன் மதிப்பை சுமார் 5,000 கிலோ தங்கமாக எடுத்துக் கொள்வார்கள்.”
“நீர்மூழ்கி கப்பலையே பார்க்காத, அதைப்பற்றி தெரியாத, அறியாத பண்டாவின் மனைவி, அவளின் வியாபாரி, அதன் தரகர் எப்படி இந்த ஒப்பந் தத்தைப் பெற்றார்கள், யாருக்காக இந்த இரண்டு யானை எடையளவு தங்கம் தாரை வார்க்கப்பட்டது என்பதெல்லாம் நப்துராக் செய்த நீதி நழுவிய நெடுங்கதையில் கள்வ னாய் காட்சியளிக்கும் போது தென்படுமா என் பதை நான் சொல்ல மாட்டேன்”
“இதில் பண்டா தனது வைப்பாட்டி தூயல்தா னுக்கு அவளது எடையின் பாதியளவுக்கு தங்கம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தான். ஒடியும் இடைகொண்ட அவளது எடை நூறு புறாவுக்குச் சமமானதாகும்.
எல்லா காரியங்களும் முடிந்து, நீர்மூழ்கி கப்பல்களும் பட்டுவாடா செய்யப் பட்டன. நப்துராக்கும் துணை மன்னராக முடி சூட்டப்பட்டான். எல்லா ருக்கும் என்ன சேர வேண்டுமோ, அவை சேர்ந்து விட்டது. ஆனால் தூயல்தானுக்கு மட்டும் ஒரு பிரச்னை.
ஒருநாள் பண்டாவை தேடி வந்த தூயல்தான், தனக்கு வேண்டிய தங்கம் வந்து சேரவில்லை என பண்டாவின் வீட்டுக் கதவுவரை வந்துவிட்டாள். பண்டாவின் வீட்டில் ஒரே பதற்றம். தூயல்தான் வெளிப்படையாகவே தான்தான் பண்டாவின் வைப்பாட்டி என்றும் தனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் போய் விடுவேன் என்றும் கெஞ்சினாள்.”
தொடர்ந்து வந்த வேதாளங்களில், சோகமாகவே காட்சியளித்த அழகான ஒன்றின் கண்கள் கலங்கின.
பண்டாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தூயல்தானோ விடுவதாகவும் இல்லை. உடனே, பண்டா தனது தலைவர் நப்துராக்குடன் தொடர்பு கொண்டான். அதற்கு, நப்துராக்கின் சேனாதிபதி “பயப்படாதே! நான் கவனித்துக் கொள்கிறேன். எனது ஆட்கள் வருவார்கள்” என்று ஆறுதல் சொன்னான்.
தூயல்தானே, தனது பாதுகாப்பு கருதி வாங் என்ற ஒற்றனை வேவு பார்க்க நியமித்தாள். அதேவேளை பண்டா, லாபா என்பனை ஒற்றனான வைத்திருந்தான்.
அந்த துயரமான நாளும் வந்தது. வாங், லாபா, சேனாதிபதியின் ஆட்கள் இப்படி ஒவ்வொருவரும் அன்று நடக்கவுள்ள ஒரு நிகழ்வு எப்படி நடந்தது என்பதை பின்பு ஒருநாள் நீதி நழுவிய மன்றத்தில் கூறினார்கள்.
தூயல்தானை சேனாதிபதியின் ஆட்கள் தங்களது சிகப்பு நிற புரோட்டன் என்ற குதிரையில் கடத்தி சென்றனர். அவர்கள் என்ன செய் தனர் என்பதை, அதில் சம்பந்தப்பட்ட ஒருவன் இப்படி விவரித்தான்.
“என் கையில் உள்ள எரி கக்கும் கருவியைக் கண்டவு டன், அவள் கெஞ்சி னாள். தன் வயிற்றில் சிசு ஒன்று வளர்கிறது என்றாள். எனது கை யாள் அவளை இழுத்து கீழே தள்ளினான். நான் எனது கருவியால் அவளது இடதுபுற நெத்தியில் சுட்டேன். பிறகு எனது கையாள் அவளது ஆடைகளை அகற்றி அதை ஒரு பையில் போட்டான். அப்பொழுது அவளது கையில் அதிர்வு இருந்தது. அதைக்கண்டு மீண்டும் ஒருமுறை சுட்டேன். பிறகு, அந்த உடலை காட்டில் வைத்து, அதன் கால், உடம்பு, தலை ஆகிய பகுதிகளில் வெடி மருந்து வைத்து அதை வெடித்தோம்”
உடன் வந்த வேதாளங்களில் கண்கலங்கியிருந்த ஒன்று ஓவென்று அலறியது. அதன் அலறல் இன்றுகூட மலைநாட்டின் தேர்தல் காலங்களில் ஒலிக்கிறதாம்.
விசாரணையின் முடிவில் சேனாதிபதியின் ஆட்களில் இருவரை கழுவேற்ற ஆணையிடப்பட்டது. தூயல்தானின் மறைவு குறித்து விசாரணையும் இதனால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக நப்துராக் அறிவித்தான். தனக்கு தூயல்தான் யாரென்று தெரியாது என்றும் சத்தியம் செய்தான்.”
விக்கிரமாதித்தன் நடந்த பாதையில் கிடந்த ஒரு முழு பூசணிக்காய் டக்கென்று ஒரு சிறிய இலையின் அடியில் ஒளிந்து கொண்டது.
கண்கலங்கி ஓவென்று அலறிய, அந்த அழகிய வேதாளம் விம்மி விம்மி அழுதது. “விக்கிரமாதித்தா, கதையை கவனமாக கேட்டிருப்பாய். இதில் திட்டம் போட்டவர்கள், திருடியவர்கள், துணை போனவர்கள், ஆணைக்கு அடி பணிந்து பணியாற்றியவர்கள் இப்படி பலவகையினர். தூயல்தான் என்ற கர்ப்பிணியைக் கொன்றதாக இரண்டு சேனாதிபதியின் ஆட்களைக் கழுவேற்றக் கட்டளை. இவர்கள்தான் கொன்றார்கள் என்றால், எதற்காக இவர்கள் அவ ளைக் கொல்ல வேண்டும். மலைநாட்டின் நீதியில் கொலை என்பதற்கு மதியள வில் ஒரு வேண்டுதல் உருவாக வேண்டும் (intention). கொலை என்பது செயல்வடிவம் (action) மட்டுமல்ல. எனவே, இவர் களுக்கு மதியளவில் ஒரு வேண்டுதல் அற்ற நிலையில் இவர்களை கழுவேற்ற இயலாது. அதற்கான மேல் முறையீட்டை (appeal) யாரும் செய்யாததும், இவர்களது விசாரணையின்போது, இவர்களது அடையாளம் காணதவாறு முக்காடு போட்டே கொண்டு வரப் பட்டதும் மர்மமாகவே உள்ளது. அப்படி யென்றால் அந்த உலக அழகி தூயல் தானை கொன்றது யார்?”
வேதாளம் அட்டகாசமாக சிரித்தது. அழுது கொண்டிருந்த வேதாளத்தின் கண்கள் சிகப்பாகி கனன்று கொண்டி ருந்தன.
கதையை நன்கு கணித்த விக்கர மாதித்தன், தனது நிலை மிகவும் தர்மசங்கடமாக உள்ளதை உணர்ந்தான்.
உண்மை தெரிந்துள்ளதால், அதைச் சொல்ல வேண்டும். சொன்னால் வேதாளம் மீண்டும் மரத்தின் மீதேறும். சொல்லாவிட்டால் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்.
உடன்வந்த வேதாளங்களில் அனுபவமிக்க ஒன்று, விக்கிரமாதித்தன் காதுகளில்,
“நீ உண்மையை சொன்னால், வேதாளம் மட்டும் மரத்தில் ஏறாது. இந்தக் கூட்டத்தில் சுற்றும் வேதாளங்களில் உள்ள சில நப்துராக்கின் ஒற்றர்கள் உன்னையும் வெடித்து விடுவார்கள்” என்று பிசுபிசுத்தவாறு நாசூக்காக நழுவியது.
கண்கள் சிகப்பாகி கனன்ற வேதாளம், தான் கண்ணகி வடிவமாகி மலைநாட்டை எரிக்க விசுக்கென்று பறந்தது.
விக்கிரமாதித்தனின் தலை வெடித்ததா? அல்லது வெடிக்கப்பட்டதா?