ஜொகூரில் ஹூடுட் சட்டம் அனைவருக்கும்; மஇகா மௌனம்!

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூலை 7, 2012.

அம்னோ ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் “உண்மையான ஹூடுட்” சட்டம் ஜொகூரில் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததை ஜொகூர் மாநில டிஎபி
அது தேசிய வளர்ச்சிக்கு உகந்ததல்ல, பாதகமானது என்று வன்மையாகக் கண்டித்தது.

அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் சமீபத்தில் விடுத்த ஓர் அறிக்கையில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாதார் அனைவருக்கும் “உண்மையான ஹூடுட்” சட்டத்தை ஜொகூர் மாநிலம் அமல்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஜொகூர் மஇகா தலைவர்கள் கோழைகள். தங்களுடைய அம்னோ எஜமானர்களுக்கு எதிராக அவர்கள் தங்களுடைய வாயைத் திறக்கவில்லை.

ஜனவரி 2011 இல் நடைபெற்ற தெனாங் இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி பெற்றால் இந்தியர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவர், பெண்கள் தங்களுடைய தலைக்கு முக்காடு போடும் கட்டாயம் வரும் என்று கூறி மஇகா தலைவர்கள் தோட்டங்களில் மற்றும் லாபிஸ் உட்பகுதிகளில் வாழும் இந்தியர்களிடம் கூறி அவர்களை அச்சுறுத்தினர். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தபோது பெண்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதோடு ஆதரிக்க மறுத்து விட்டனர்.

ஆனால், இன்று ஹூடுட் சட்டம் வேண்டும் என்று பாஸ் கோரவில்லை; அம்னோ சட்டமன்ற உறுப்பினர் அவ்வாறு கோருகிறார். மஇகா தலைவர்கள் சுண்டெலிகளைப்போல் மௌனமாக இருக்கின்றனர். அம்னோ சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட்டிற்கு எதிராக அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

இச்சம்பவத்திலிருந்து ஜொகூர் இந்தியர்கள் மஇகாவை ஓர் அம்னோ ஆமாம் சாமி அமைப்பு என்றும் அம்னோ மற்றும் தீவிரவாதிக்கு எதிராக எழுந்து நிற்பதற்கான முதுகெலும்பு இல்லாத ஒன்று என்றும் தெரிந்து கொள்வர். அம்னோ தலைவர்களிடமிருந்து மானியம் பெறுவதற்குதான் அவர்கள் அங்கிருக்கின்றனர். இத்தனை காலமாக அம்னோ/பிஎன்னிடமிருந்து மானியங்கள் பெற்ற பின்னர் அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராட முடியுமா? அவ்வாறான ஒரு எண்ணமே அவர்களை அச்சத்தில் ஆழ்த்திவிடும்.

பிஎன் கட்சிகளான மஇகா/பிபிபி ஆகியவற்றால் இந்திய சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. இரட்டை தண்டவாள செயல்திட்டம் தொடங்கியதும் தெனாங், கம்போங் வீரா மக்களுக்கு மாற்று நிலம் கொடுக்கப்படும் என்று மஇகாவும் மந்திரி புசாரும் மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள் அளித்தனர். இரு தேர்தல்களில் அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. மாற்று குடியேற்றத்திற்கான இடத்தில் ஒரு மாற்று நிலம்கூட காட்டப்பட்டது. ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் இரட்டை தண்டவாள பாதை அமைப்பதற்காக வீடுகள் உடைக்கப்பட்டபோது உதவி வழங்க எந்த மஇகா தலைவர்களும் முன்வரவில்லை. கலகத்தடுப்பு போலீசாரின் பாதுகாப்புடன் வீடுகள் உடைக்கப்பட்டன.

ஜொகூர் ஆட்சிக்குழு இந்திய உறுப்பினரும் லாபீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடுகள் உடைக்கப்படுவது தங்களுக்குத் தெரியாது என்று கூறினர்.

ஜொகூர் ஆட்சிக்குழு இந்திய உறுப்பினர் திரு அசோஜனை தொடர்பு கொள்ள மேற்கொண்ட அழைப்புகளுக்கு பதில் கிடைக்கவில்லை. அதுதான் அம்னோவின் ஏவலாளியான மஇகா.

அம்னோ மற்றும் மஇகா ஆகியவற்றின் உண்மையான நோக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஜொகூர் இந்தியர்கள் தங்களுடைய கண்களைத் திறப்பது அவசியமாகும். அம்னோவின் கோட்டையான ஜொகூரில் இந்தியர்கள் ஏழைகளாக்கப்பட்டு பின்தள்ளப்பட்டுள்ளனர். எழுச்சிப்பெற்று மாற்றம் காண வேண்டிய நேரம் வந்துவிட்டது.