கடமையைத் தள்ள வேண்டாம், நஜிப்பிற்கு தமிழ்அறவாரியம் அறிவுறுத்து

தாய்மொழி கல்விக்கான திட்டங்களுக்கும் நிதியுதவிகளுக்குமான அரசின் கடமையை தனியாரிடம் தள்ளி விட வேண்டாமென பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 26 செப்டம்பர் அன்று சூதாட்டத்தின் வருவாயில் குறைந்தது ரி.ம 100 மில்லியனை ‘சமூக இதயம்’ என்ற நிதியமைப்பின் வாயிலாக தேவைபடும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுமென அறிவித்தார்.
 
இந்த நிதியமைப்பு பெரும் பணக்காரர்களின் கூட்டமைப்பில் வழங்கப்பட்ட நிதியில் நடத்தப்படுகிறது. T. ஆனந்தகிருஷ்ணனின் பான் மலேசியா நிறுவனம் கடந்த ஜுலையில் மட்டும் ரி.ம 2 பில்லியனை இந்நிதியமைப்புக்கு  வழங்கியுள்ளது. இவ்வமைப்பிற்கு கெந்திங் சூதாட்ட மையத்தின் லிம் கோக் தாய் தலைமை தாங்குவாரென சொல்லப்படுகிறது.

இதையொட்டி கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு.சி. பசுபதி அரசு தாய்மொழி பள்ளிகள் நலனில் அதிக அக்கறை கொள்வதோடு வெறும் வியாபார அமைப்புகளின் முதுகில் சவாரி செய்ய முயலக்கூடாதென அறிவுறுத்தினார்.

“இது சிறந்த நட்வடிக்கைதான், ஆனால் அரசு இன்னும் அதிகமான உதவிகளை தாய்மொழி பள்ளிகளுக்கு செய்ய வேண்டும். பொதுப்பள்ளி துறையை உயர்த்தும் கடமை அரசுக்கே உள்ளது. நஜிப் அதை இலகுவாக தனியாரிடம் தள்ளிவிடுவது சரியல்ல” என்றார் அவர்.

அவர் மேலும், இந்நிதி பள்ளியின் வசதிகளான கணினிகள், நூலகம்,  மனிதவள அலுவலகம் போன்றவற்றை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டுமே தவிர புதிய கட்டடம் கட்டுவதை எதிர்த்தார்.

“அது அரசின் கடமையாகும். கட்டடம் கட்டுவது போன்ற அடிப்படை வேலைகள் அரசின் தலையாய கடமையாகும்” என்றார் அவர்.

மீண்டும் சீனர் மற்றும் இந்தியர்களின் வாக்குகளை கவரும் முயற்சியை பற்றி திரு.பசுபதி சொல்லுகையில் நஜிப்பின் ஓட்டுகளை கவரும் நடவடிக்கைகள் உண்மையானதாக இருக்கவேண்டுமே தவிர இப்படி ‘துண்டுதுண்டாக’ இருக்க கூடாது என்றார்.

அவர் மேலும் தமிழ்ப்பள்ளிகளை நெடுங்காலமாக வாட்டி வதைக்கும் பிரச்சனையான – மாணவர் அதிகரிப்பால் ஏற்படும் வகுப்பறை பற்றாகுறையும் மாற்றிடத் தேவையைப் பற்றியும் கூறினார்.

நடுவண் அரசு இப்பிரச்சனையைத் தீர்க்க உண்மையாக பாடுபடவேண்டுமென கேட்டுக் கொண்டார் திரு.பசுபதி.

“எடுத்துக்காட்டாக, சிலாங்கூரின் பெரிய பள்ளியான கிள்ளானிலுள்ள சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியை எடுத்துக் கொள்வோம். அப்பள்ளி எப்பொழுதுமே கூடுதல் மாணவர்கள் எண்ணிக்கையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே மாநில அரசு தாமான் செந்தோசா அருகே வேறொரு பள்ளியை நிர்மாணிக்க நிலத்தை ஒதுக்கியிருந்தாலும் நடுவண் அரசு அப்பள்ளியைக் கட்டுவதற்கான உரிமத்தை இன்னும் வழங்காமல் இருக்கிறதென” கூறினார்.

அவர் அரசு இன்னும் தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படையான பிரச்சனைகளை இன்னும் சீரிய முறையில் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கலாமென மேலும் அறிவுறுத்தினார்.
 

‘படுமோசமான பாகுபாட்டிற்கான ஆதாரம்.’
 
இதற்கிடையில் 1983-லிருந்து சீனப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முனைவர் குவா கியா சூங், இந்நிதி வழங்குவதன் மூலம், தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளும் தேசியப் பள்ளிகளே என்ற உண்மையை அரசு பிரதிபலிக்கவில்லை என்றார்.

“வழக்கம்போலவே, தேசிய முன்னணி அரசு தன் குடிமைப் பொறுப்பை தன்னைச் சார்ந்திருக்கும் வணிகர்களிடம் தள்ளிவிடுகிறது” என்றார்.

அவர் மேலும் இந்நிதி போதுமானதாக இல்லையென்றும் ஏனெனில் இவை 2000 பள்ளிகளுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறதெனவும் கூறினார்.

திரு. பசுபதி அவர்களின் வகுப்பறை பற்றாக்குறை பிரச்சனையை வழிமொழிந்த அவர், ‘ சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் நிகழும் இந்த வகுப்பறை பற்றாக்குறை பிரச்சனை கல்வி அமைப்பில் நிகழும் ஊழல்’ எனவும் வர்ணித்தார்.

“மற்ற தேசியப்பள்ளிகளுக்கு தொழிலதிபர்களின் உதவி தேவைப்படாதபோது , ஏன் சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது ? இந்த நிதியுதவிகளும் புதிய பள்ளி கட்டட நிர்மாணிப்புகளும் அரசின் படுமோசமான பாகுப்பாட்டிற்கான ஆதாரம் இல்லையா ?”  என கேள்வி எழுப்பினார்.

குவா தொடர்ந்து நஜிப்பின் இந்நடவடிக்கைகள் ஓட்டுகளை கவராதென சந்தேகம் தெரிவித்ததோடு இப்பிரச்சனை நாம் எண்ணுவதை விட மிக ஆழமானதென்றார்.

“சீன மற்றும் தமிழ் சமூகங்கள் ‘இரட்டை வரி’-யை ( வருமான வரி மற்றும் கல்வி வரி) பல ஆண்டுகளாக செலுத்தினாலும் தங்கள் தாய்மொழி கல்வி தேசிய அமைப்பின் பகுதியாக மாறும் வரை திருப்தி அடையமாட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.  
 
-Tarani Palani – FREEMALASIATODAY.COM

[மொழிபெயர்ப்பு : சு.யுவராஜன்]