“திருகுதாளத்திற்கு ஓர் எல்லை இல்லையோ, முருகா?”, ஒரு பக்தனின் வேண்டுகோள்

வா, முருகா! மலையேறி வா, முருகா! வேலேந்தி வா, முருகா! இந்த வீணர்களை வதம் செய்ய வா, முருகா!

முருகா, நீ யார்? நீ, தமிழ்க் கடவுள். நீ, பழனியில் மட்டும் இல்லை. நீ, இமயத்திலும் இருக்கிறாய்; மொகஞ்சதாராவிலும் இருக்கிறாய்; ஹரப்பாவிலும் இருக்கிறாய்; குமரியிலும் இருக்கிறாய். எங்கள் பத்துமலையிலும் இருக்கிறாய். நீ இல்லாத இடமில்லை. நீ காணாதது ஒன்றுமில்லை; காணமுடியாததும் ஒன்றுமில்லை.

நவம்பர் 25. உரிமைக்காகப் போராட கிளம்பிய உன் இனத்தினர், நீ குடிகொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்திற்கு வந்தனர். உன்னை நம்பி வந்தனர். உன் ஆசி பெற்று, போராட வந்தனர்.

உன் திருத்தலத்தில் உன்னிடம் ஆசி பெற வந்த உன் இனத்தினரை உன் பெயரைச் சொல்லி வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் நபர்கள் அந்நியனை அழைத்து உன் இனத்தாரை அடித்துத் துன்புறுத்த வைத்துள்ளனர். நீ குடிகொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்தை அந்நியரை அழைத்து அசுத்தப்படுத்தி விட்டனர். இவற்றை எல்லாம் நீ அறிவாய்.

செய்யக்கூடாததை எல்லாம் செய்துவிட்டு, உன்னைத் தேடிவந்தவர்கள் மீது பழியைப் போட்டு விட்டனர். நீ அங்கு நின்று கொண்டிருக்கிறாய் அவர்கள் வைத்த சிலையாக. நீ வெறும் சிலைதானே. அவர்கள் வைத்த சிலைதானே. அவர்கள் சொல்வதைத் தவிர வேறொன்றும் உனக்குத் தெரிய வாய்பு இல்லை என்பது அவர்களின் கணிப்பு.

உனக்கு எல்லாம் தெரியும் என்பதைக் காட்டி விட்டாய், முருகா! நீ விரும்புவதைத்தான் உன் பக்தர்கள் செய்வார்கள் என்பதைக் காட்டி விட்டாய், முருகா! அசுத்தப்படுத்தப்பட்ட உன் திருத்தலத்தை புறக்கணிக்கச் செய்து விட்டாய், முருகா!

பத்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்களைக் கண்ட உன்  திருத்தலம் இவ்வாண்டு மூன்று இலட்சத்திற்கும் குறைவானவர்களையே கண்டது. அது புறக்கணிப்பின் வெற்றி. அதனை, முருகா, நீ கண்டாய். உலகம் கண்டது.

முருகா, நீ சிலையாக அங்கு நிற்கலாம். உன் பெயரைச் சொல்லி வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் அந்த நபர்கள் உன்னை நாடி வரும் பக்கதர்களின் என்ணிக்கையில் குறைவேயில்லை என்று கூறுகிறார்கள். ஒரு தலைவர் மூன்றாவது மாடியில் நின்றுகொண்டு உன் முன்னே உனக்கு கணக்குச் சொல்கிறார், ஒன்பது இலட்சத்திற்கு மேல் திரண்டனர் என்று.

அந்தத் தலைவரின் கால்வருடிகள், பக்தர்களின் கூட்டம் அதிகமாகத் தெரியவில்லை என்பதற்கு காரணம் கூறுகிறார்கள்: அவர்கள் மேற்கொண்ட மேம்பாட்டுத் திட்டங்களால் உன்னைச் சுற்றியுள்ள நிலங்கள் பரந்து விரிந்து விட்டனவாம்; மரங்கள் வெட்டப்பட்டு விட்டனவாம்; கட்டடங்கள் அகற்றப்பட்டு விட்டனவாம். இவற்றால் உன் பக்தர்களின் கூட்டம் கரைந்து விட்டதாம்! உன்னைக் காண வந்த உன் பக்தர்களின் எண்ணிக்கையை கூட்டிப் பெருக்கி உன் சக்தியைவிட அவர்களின் வாய்வீச்சு வலியது என படாவியிடம் காட்ட முயன்றனர்.

முருகா, நீ ஒளவையாரை சோதித்தவன். உன்னைச் சோதிக்க இந்த கொட்டாங்குச்சிகள் யார்?

முருகா, நீ தூய்மையானவன். உனக்கும் உன் இனத்தவருக்கும் மிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிடும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உன் திருத்தலத்தை அந்நியரைக் கொண்டு அசுத்தப்படுத்தியதால் ஆத்திரமடைந்துள்ள உன் பக்தர்களை அவர்களின் பக்கம் திருப்ப மிட்டாய் கொடுத்தார்கள். உனக்காகத் திடீர் தைப்பூச விடுமுறை வழங்கினார்கள். உன் பக்தர்கள் மசியவில்லை. முருகா, நீ விரும்பியவாறு உன் பக்தர்கள் உன் திருத்தலத்தைப் புறக்கணித்துக் காட்டினர். அந்நியர்களை அழைத்து உன் திருத்தலத்தை அசுத்தப்படுத்தியவர்கள் அதிர்ச்சியில் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். உனக்கு தைப்பூச விடுமுறை மிட்டாய் கொடுத்து பிரதமர் உன் பக்தர்களைத் திருப்ப முடியும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்.

முருகா, உன் பக்தர்கள் கொடுத்த புறக்கணிப்பு அடி இருக்கிறதே, அப்பப்பா, அதற்கு என்ன மதிப்பு!

இந்நாட்டில் தமிழ் இருக்கிறதா என்று ஓர் இனத்தவன் கேட்டிருந்தான். அந்த இனத் தலைவர்களில் ஒருவன் இப்போது தமிழும் படிக்க வேண்டும் என்கிறான்.

முருகா, உன் மொழியான தமிழைப் போதிக்க பள்ளிக்கூடங்களைக் கட்டுவது தமிழ்ச் சமூகத்தின் பொறுப்பு என்று ஒரு கல்வி அமைச்சர் கூறியிருந்தார். புறக்கணிப்பு அடிக்குப் பிறகு தமிழ்க் கல்விக்கு மானிய மழை பொழிகிறது, முருகா. தமிழ் அமைச்சர் ஒருவர் 23 பள்ளிகளுக்கு இரண்டு கோடி (20 மில்லியன்) மானியம் என்கிறார். அந்த அமைச்சர் அதோடு நிற்கவில்லை. அவர் வாயைத் திறக்கும் போதெல்லாம் மில்லியன், மில்லியன் என்று மிட்டாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ப்பள்ளியைத் தீண்டக்கூடாத, நன்ஹலால் பொருளாகக் கருதியக் கூட்டங்கள் மானியத்தை வாரி வீசுகிறார்கள். மாநில முதலமைச்சர்கள் கேட்காமலேயே மில்லியன் கணக்கில் மானியம் போடுகிறார்களாம். தெருவில் போகிறவன் வருகிறவன் எல்லாம் மானியம், மானியம் என்கிறான்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டும் அறிவிப்புகளைக் பார்த்தால் நாட்டில் கல் பற்றக்குறை ஏற்பட்டுவிடும் போல் தோன்றுகிறது, முருகா.

உன் பக்தர்கள் கொடுத்த பத்துமலை புறக்கணிப்பு அடியின் வலிமைதான் என்னவோ!

தமிழ் அமைச்சர் உன் இனத்தின் கோயிலை உடைக்கக்கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடி கொண்டிருக்கும் போதே கோயிலை உடைத்தவன், புறக்கணிப்பு அடிக்குப்பின் கோயில் கட்ட நிலமும் பணமும் தருகிறானாம், முருகா.

உன் இனத்தவருக்கு வேலை தருகிறானாம்; கடன் தருகிறானாம்; பயிற்சியும் தருகிறானாம்.

இருபத்தெட்டு ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் இரவும் பகலுமாக உழைத்து உன் இன மக்களுக்கு “நஹீன்” மட்டும் பெற்றுத்தந்த தமிழ் அமைச்சர் உன் பக்தர்கள் கொடுத்த பத்துமலை புறக்கணிப்பு அடிக்குப்பின் எட்டு மணி நேரத்தில் 30 மில்லியன் மானியம் பெற்று விட்டாராம். புறக்கணிப்பு அடியின் மகிமையே மகிமை!

உனக்குத் தெரியும், முருகா. காலையில் கூப்பிட்டாராம், இரண்டாவது நிதி அமைச்சரை, மாலை மணி 4.20 க்கு தமிழ் அமைச்சருக்கு 30 மில்லியன் கிடைத்து விட்டதாம்.

இந்தப் புறக்கணிப்பு அடியை 50 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி இருந்தால், எப்படி இருக்கும்?

படிக்கின்ற சீன மாணவர்களுக்கு மானியம். படிக்காத சீன மாணவர்களுக்கு 30 மில்லியன் மானியம்! இருக்கின்ற பள்ளிகளுக்கு மானியம். இல்லாத பள்ளிகளுக்கு நிலமும் மானியமும். ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பிஜே டாமன்சாரா சீனப்பள்ளி மீண்டும் திறக்கப்படும்.

எங்கு பார்த்தாலும் நிலப்பட்டா. எங்கு பார்த்தாலும் தார் சாலைகள். உன் இனத்தவரின் இடுகாட்டிற்கும் புத்தம் புதிய தார் சாலை, முருகா. புக்கிட் ரோத்தானில் உண்டு.

விருந்துகள் பல உண்டு. தணித்து வாழும் தாய்மார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேசைக்குக் கீழ் பணமும் உண்டு. இவை அனைத்தும் மிட்டாய்கள்; இவை அனைத்தும் இலஞ்சங்கள். இதனை நீ அனுமதிக்கக்கூடாது, முருகா!

இந்த வீணர்களை வீழ்த்தி இந்த நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க விரைந்து வா, முருகா!

 

-FROM SEMPARUTHI FILE:  ஜா. சுகிதா, செம்பருத்தி சிறப்பு இதழ், 2008