ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்

[கா. ஆறுமுகம்]

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி அங்குத் தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தினான். அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி நடந்தான்.

அவனது விடாமுயற்சியைக் கண்டு வியந்த அந்த உடலில் இருந்த வேதாளம் மீண்டும் எள்ளி நகையாடியது. “நீ என்னை புதைக்கும் வரையில் மௌனமாகவே இருக்க வேண்டும், பேசினால் நான் மீண்டும் முருங்க மரம் ஏறி விடுவேன், அதேவேளை நான் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தும் அமைதியாக இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்” என்றது. விக்கிரமாதித்தின் கவனமாக நடந்தான். “கேள்விக்கு முன்பு ஒரு கதைச் சொல்கிறேன் கேள்” என்றது.

வேதாளம் எள்ளி நகையாடியது. “விக்கிரமாதித்தா, சென்றமுறை நமது கதையை எதிர்காலத்தில் செம்பருத்தி என்ற இதழில் எழுதிய ஒரு வழக்கறிஞர், “தலை வெடித்ததா! அல்லது வெடிக்கப்பட்டதா!” என்ற வினாவோடு முடித்திருந்தார். இரண்டுமே நடக்கவில்லை. காரணம், நப்துராக்வுக்கு சூழல் சரியில்லை. ஏதாவது நடந்திருந்தால் மக்கள் கொதித்து விடுவார்கள் என்பதாலும் மாற்று சூதுக்காக காரியம் நடப்பதாலும் அப்படியே விட்டுவிட்டான்”

வாசகர்களை போலவே காத்திருந்த துடிப்பான ஆவிகளில் ஒன்று சொல்லக்கூடாததை உளறிக் கொட்டியது, “அதுல ஒரு எழுத்தை போட்டு நடக்குற வழக்கில நீதிமன்றமே கலக்குதாமே! சூது என்ற சொல்லுக்கு இடையே இன்னொரு எழுத்தை போட்டால் கிடைக்கும் விளையாட்டிற்கான ஐடியா கொடுத்த ‘அப்போ’ ஆமாம் இதைக்கூட ‘போ’-வை ‘கோ’-வா மாத்துனாதான் புரியும்” என்ற பீடிகையோடு வாலை சுருட்டி மறைந்தது.

“விக்கிரமாதித்தா, உனக்கு ஆண்ட இனம் அடிமையானது பற்றி நன்றாகவே தெரியும், அது ஒரு நீண்ட சோகக் கதையா, என்பதைவிட அதில் நடந்துள்ள மர்மங்கள் பற்றிய சிந்தனை நீண்டக்காலமாகவே உண்டு. வெளிச்சம் இருட்டை கவ்வும். இருட்டு வெளிச்சத்தை கவ்வுமா?” என்ற பீடிகை போட்டது வேதாளம்.

இந்த உரையாடல்களை நுண்ணிய அலைவரிசையால் அடுத்த கண்டத்தில் செவிமடுத்த தாடி வைத்த ஆவி ஒன்று திடுக்கிட்டது. “சூழ்ச்சி தங்குதல் தீது” என்ற எனது 671-ஐ மக்கள் மறந்து விட்டனரா!” என்றவாறு எழுந்தது.

மர்மங்கள் நிறைந்த கதை உருவாகப் போவதை கேட்டவுடன் துள்ளிக்குதித்து வந்தன ஆவிகள் பட்டாளம். இந்த ஆவிகளுக்கு ஆலோசனை சொல்லும் வகையில், “எனக்கு அப்பவே, தெரியும். என்கிட்ட வருகின்ற நோயாளிகளிடம் பேசறப்போ, அவர்கள் வெளிச்சத்தில் இருந்து வெளிச்சத்தை பார்த்தாலும், இருட்டிலிருந்து வெளிச்சத்தை பார்த்தாலும், அட்ரோ-வில் இருந்து வருகிற ‘சீரியல்’ என்ற வெளிச்சம் இவர்கள் உள்ளத்தில் எஞ்சியுள்ள வெளிச்சத்தை கவ்வி இருட்டாக்கிறது. அட்ரோ-வில் வருகின்ற வெளிச்சமே இருட்டுதானே?” என்றது அந்த ஆவி மருத்துவர்.

வேதாளம் தொடர்ந்தது, “மன்னா, சிலேம என்ற செல்வம் கொழிக்கும் நாட்டில், எல்லாம் இருந்தும் ஏமாந்து வாழும் ஓர் இனத்தின் கதை இது.”

“ஐயோ! திரும்பவும் அதே பல்லவியா! “அலறியது ஒரு வாட்டசாட்டமான ஆவி. “என்னை பாரு. நான் எப்படி திறமையா, வாலை பிடித்து, காலை நாவால் தடவி, மானம் என்பது எமக்கில்லை என்ற மனநிறைவோடு கூஜா தூக்கி கௌரவமாக பிழைப்பு நடத்துகிறேன்” என அலறியது. அதை நேரடி வர்ணனையாக காடு முழுவதும் இருந்த “மானம் இல்லாத ஒரு கட்சியின் ஆவி தொண்டர்கள்” தங்களின் தலைவரின் கொள்கை உரையென இடியும் மின்னலும் வழி நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

“மன்னா, வரலாறு என்பதை வெல்பவர்களே எழுதுகிறார்கள், இதை உணர்ந்த அந்த இனத்தின் முன்னோர்கள், (சிலேம நாட்டை ஆண்டபோது) தங்களது வரலாற்று பதிவுகளை கல்வெட்டிலும், சிற்பங்கள் வடிவிலும் விட்டுச் சென்றனர். அதன் பின்னணியில் உள்ள வரலாற்று புதையல் சிலேம நாட்டிலும் உள்ளது. அதை கண்டுபிடித்த சிலேம நாட்டின் அரசாங்கம், அதற்கான விளக்கத்தை அசிங்கமாக வெளியிட்டது”.

துள்ளியெழுந்த ஒரு துடுக்கான ஆவி, “ஆண் குறியை வழிபடும் இழிவான மக்கள் இங்கே இருந்தது’னு போட்டு, அப்புறம் அது மானப் பிரச்சனைனு சத்தம் போட, அப்படியே எடுத்து அமுத்திட்டாங்க, இதான் வியூகம்கிறது” என்றது.

வேதாளம் தொடர்ந்தது, “அறிவும் ஆற்றலும், கொண்ட இனத்துடன் மரபணுவழி தொடர்பு கொண்டே அதே இனம் பின்பு மீண்டும் சிலேம நாட்டை மேம்படுத்த கொண்டு வரப்பட்டனர்.”

பலமுறை கேட்டு சலித்துப்போன கறுப்பாவிகள், “பாஸ்ட் பார்வர்டு” என்று முணுமுணுத்தன. அதிலிருந்த ஒரு மூத்த ஆவி, “எல்லாம் தெரிஞ்சதுபோல் ஆவிகளான நாமே பேசினால், இதையெல்லாம் எதிர்காலத்தில் செம்பருத்தி என்ற இதழில், இணையத்தளத்தில் வரும்போது படிப்பவர்கள் அவசரபடாமல் உண்மையை உள்வாங்க வேண்டும்” என உபதேசித்தது.

“அப்படி கொண்டு வரப்பட்டவர்களில், நால்வரில் ஒருவர் மட்டுமே உயிர்வாழ நேர்ந்தது, மற்ற மூவர் ஆவியானார்கள்” என்றது வேதாளம்.
“ஆவியானவர்களில் நானும் ஒன்று” என்றது மூத்த ஆவி. அதைத் தொடர்ந்து “நான்”, “நான்” என்ற குரல் காடு முழுவதும் கேட்டது.

எமனிடம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஓர் ஆவி, தனது மண்டை ஓட்டில் பதிவாகியிருந்த கணக்கை ஒப்பிட்டது. “சிலேம நாட்டில், தங்களது உடலை உரமாக்கிவிட்டு ஆவிகளாக வந்தவர்களின் கணக்கு விவரம் 1957-வரை என்னவென்றால்…”

“டும்.. டும்.. டும்..” என்று அதற்கு உதவியாக எமனிடம் வேலை பார்த்த இன்னொரு ஆவி தனது மண்டை ஓட்டை தட்டி ஆவிகளின் கவனத்தை ஈர்த்தது. வேதாளமும், விக்கிரமாதித்தனும் தங்களது செவியை கூர்மையாக்கினர்.

“மொத்த வருகை தந்த அவ்வினத்தினர் 42 லட்சமும், திரும்பவும் ஊருக்கே அனுப்பப்பட்டவர் 29.7 லட்சம், சிலேம நாட்டில் தங்கியவர்கள் 12.3 லட்சம். ஆனால், 1957 கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள்தொகை 8.6 லட்சம் மட்டுமே, இதில் சிலேம நாட்டில் பிறந்தவர்கள் 5.3 லட்சமாகும்.” என்றது.

“அப்படியென்றால் 12.3 லட்சத்தில் 3.3 லட்சம் மட்டுமே உயிரோடு இருந்துள்ளனர், மீதம் 9 லட்சம் உரமாக்கப்பட்டனர்” என்ற மனக்கணக்கில் திறமையுள்ள ஒரு குட்டி ஆவி, “அதான் ஒவ்வொரு ரப்பர் மரத்திற்கு அடியிலும் நமது உடல் உள்ளது” என்றவாறு அருகில் இருந்த ஒரு ரப்பர் மரத்தடியில் மறைந்தது.

“நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்தனர் இவ்வினத்தினர். இவர்களது உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் மேம்பாட்டுக்கு உழைப்பு என்ற வகையிலே பெருமளவு உதவியது.” என்றவாறு தொடர்ந்த வேதாளம், “மன்னா, பிறகு இந்த நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளை தோல் கொண்ட அரசன் வெளியானபோது, சிலேம நாட்டிலிருந்த இனங்கள் அனுசரித்து வாழ ஓர் ஒப்பந்தத்தையும் செய்தான்.”

“அந்த ஒப்பந்தத்தை மாற்ற நாட்டு மக்களுக்கு சனநாயகம் என்ற வழி வழிமுறையையும் வகுத்தான். அதாவது நாட்டை எப்படி நிர்வகிக்கலாம், பாதுகாக்கலாம், மக்களை நன்னிலைப்படுத்தலாம் என்பதையெல்லாம் மக்களே முடிவு செய்து கொள்ளலாம்”

“இதைத்தான் மக்களாட்சி என்றார்கள். நாட்டின் மக்கள் தங்களுக்கு உகந்த வழிமுறைகளை ஒன்றாகக் கூடி முடிவு செய்து கொள்ளலாம். இதில் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதையே அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”

ஆவிகள் இதில் சூது கவ்வ வாய்ப்புள்ளதை உணர, “பிற்காலத்தில் தாங்கள் எப்படி ஆவிகளாக சென்று அதில் வாக்களித்தோம் என்ற புதிருக்கு விடை கிடைக்கும்” என்றவாறு தொடர்ந்தன.

சிலேம “நாட்டில் அப்போது மூன்று வகையான மக்கள், வெவ்வேறு மொழி பண்பாட்டை கொண்டிருந்தனர்.” வேதாளம் தொடர்ந்தது.

“அந்த நாட்டிலேயே வாழ்ந்ததாக கூறும் மாய் என்ற இனம், சீர் என்பதும், இயர் என்பதும் மற்ற இரண்டு இனங்கள். இவை வெள்ளையனுக்கு முன்பிருந்தே பண்பாட்டு தொடர்புகளை கொண்டிருப்பினும் அவர்கள் சிலேம நாட்டில் அந்நியராகவே காட்சியளிக்கும் வகையில் ஒப்பந்த சூழ்நிலைகள் உண்டாக்கப்பட்டு, அதில் அனைவரும் குடிமக்களாக வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது”

“மாய் இனத்தின் தலைவர்கள், சீர் மற்றும் இயர் இனங்களின் தலைவர்களோடு சேர்ந்து விடுதலைக்கு பின்னான நாட்டின் நிர்வாகத்தை நடத்தினர். முதல்கட்ட நடவடிக்கையாக நிர்வாகத்தை எதிர்ப்பவர்களை சிறையில் அடைத்தனர், நாடு கடத்தினர், கொன்றனர்.”

“ஏன் நிர்வாகத்தை எதிர்த்தோம் என்பதை நான் சொல்கிறேன்” என்ற தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஆவி, “சிலேம நாட்டை மக்களுடைய நாடாக கேட்டோம். உழைப்பவர்களுக்கு நியாயம் கேட்டோம், அனைத்து மக்களின் பண்பாடும், மொழியும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டோம்” ஆவியானலும் ஆவேசம் குறையாமல் பேசியது.

“வெள்ளைத்தோல் அரசன் சிலேம நாட்டை விட்டு வெளியேறும்போது அவன் நாட்டையையும் உழைப்பையும் கொள்ளையடித்து அங்கங்கே புதைத்து வைத்திருந்தான். அதைக் கட்டிக்காக்க மாய் இனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, அதன்வழி சீர் மற்றும் இயர் இனங்களை பிரித்தாளும் வகையை உண்டாக்கியிருந்தான்.”

விக்கிரமாதித்தன் முன் மாயை ஒளி மனத்திரையில் தீர்வு ஒன்று தோன்றுவதை கண்டான். அதை கதையின் இறுதியில் பார்ப்போம் என்று வாலால் திரையை ஒதுக்கிவிட்டு, வேதாளம் சொல்லும் கதையை கேட்கலானான்.

“மக்களாட்சி, சனநாயகம் என்பதெல்லாம் என்ன இன்னொரு மாயையா?” என பல்லில்லாத தனது வாயை பிளந்தது தரையில் கிடந்த ஒரு மண்டை ஓடு.

“சனநாயகம் இருந்தது. நாடும் வளர்ந்தது. செல்வமும் கொழித்தது. ஆனால், அவை அனைத்தும் அனைவரும் செழிப்பாக வளர உதவவில்லை. மாய், சீர், இயர் இவர்களிடையே பிரிவினைகளும், வேற்றுமையும் தொடர, இவைகளை மேய்க்கும் இடையர்களாக இம்மூன்று இனங்களின் தலைவர்களும் செயல்பட்டனர்…” வேதாளம் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்தது.

“மன்னா, இந்த இனங்களின் இடையர்களாக செயல்பட்ட தலைவர்கள், மக்களாட்சி என்ற பெயரில் நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்தனர். பதுக்கி வைத்தனர். அவ்வப்போது மக்களை அமைதிப்படுத்தத் தம்பட்டம் அடித்து செப்பு காசுகளை அள்ளி வீசினர்.”

“தானியங்களை பொறுக்கும் பறவைகள் போலவும், வாலாட்டும் நாய்களைப் போலவும், பொதி சுமக்கும் கழுதைகள் போலவும், வண்டி இழுக்கும் எருதுகள் போலவும்…” என்று கவி பாடும் ஆவியின் வாயை பொத்தியது அதன் ஆவித்தாய்.

“மக்கள் ஆட்டு மந்தைகள், நாய் கூட்டம், கோயில் யானை, பல்லில்லாத புலி, முயல் கூட்டம், எலி, ……..” தூரத்தில் விரக்தியில் ஆவியாகப் போகும் ஒரு மனிதன் புலம்பினான்.

வேதாளம் தொடர்ந்தது, “மன்னா வேலியே பயிரை மேயாது. ஆனால், வேலியை தாண்டினால் ஆடு மேயும், மாடு மேயும், பேயும் பிசாசும் பிடித்துவிடும் என்று மாயையான உருவகத்தை உருவாக்கி மக்களை தங்களது கட்டுப்பாட்டில் அடக்கி, வேலியின் உள்ளேயே எப்படி அடக்கமாக முட்டிமோதி வாழ்வது என்பதை நடைமுறைப்படுத்தினர். மீறுபவர்களை தண்டித்தனர். இதற்கான ஆதிக்க பொறுப்பை மாய் இனத்தினர் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுகள் வைத்துக்கொண்டனர்”

“இதன்வழி மாய் இனத்தினர் தங்களது பெரும்பான்மையை சாதகமாக பயன்படுத்தி, வெள்ளைத்தோல் மன்னன் வெளியாகும்போது போட்ட ஒப்பந்தத்தில் தங்களது இன பாதுகாப்புக்காகத் தக்க மாற்றங்களை செய்தனர். அதற்கு இடையர்களான சீர் – இயர் தலைவர்கள் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டினர். தஞ்சாவூர் பொம்மைகளாக இருந்தால்தான் இடையர்களாக முடியும் என்ற கட்டுப்பாட்டையும் போட்டனர்.

“புபொகொ… புபொகொ… புபொகொ… 40 வருடம்… 40 வருடம்…” என்று கத்தியவாறு மார் தட்டியது ஓர் ஆவி.

எதிர்காலத்தில் செம்பருத்தியில் படிப்பவர்கள் புபொகொ என்பது புதிய பொருளாதார கொள்கை என்றும் மகாதீரர் என்ற இனவாதி அரசனால் இக்கொள்கை தீவிரப்படுத்தப்பட்டது. என்பதை உணர்த்தவே மார் தட்டியது என்று புரிந்துகொள்வர் என்பதை விக்கிரமாதித்தனின் மாயத்திரை உடனடியாக காட்டியது.

“இவ்வாறாக சிலேம நாட்டில் இயரும் சீரும் நாட்டின் மக்களாக இருந்தும் மாய் இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்” என்று திடீரென்று கதையை நிறுத்தியது.

“மன்னா! ஒப்பந்தத்தில் நாட்டு மக்களென உள்ள இயர் இனத்தினர் உழைப்பாளிகளாவர். நாட்டு விசுவாசமும் கொண்டவர்கள். ஆனால், மக்களாட்சி எனப்படும் விடுதலைப் பெற்று சிலேம நாட்டிலே இவர்கள் அடிமையானதும் அதற்கு முன்பு இவர்களின் மரபணு தொடர்பில் அரசாண்டதும் அறிவாய். இதிலிருந்து விடுதலை பெற இந்த அடிமை இயர்களுக்கு என்ன வழி?” என்று வினவிய வேதாளம், “சரியான பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால், உனது தலை சுக்குநூறாக வெடித்துவிடும்” என்றவாறு காடே அதிரும்படி சிரித்தது.

தொடர்ந்து ஆவிகள், கப்சுப் என்று கன்னத்தில் கையை வைத்தவாறு விக்கிரமாதித்தனை பார்த்தன.

“அரிசி கஞ்சாகிவிட்டால், கூழ்தான் குடிக்க வேண்டும்” என்றவாறு விக்கிரமாதித்தன் தொடர்ந்தான்.

“வேதாளமே! உனது கதையிலும், ஆவிகளின் உரையிலும் இதற்கான பதில்கள் புதைந்துள்ளன” என்றவாறு தனது உடைவாலை சரி பார்த்துக் கொண்டன். இயர் கூட்டத்தின் இடையர்கள், தங்களின் ஒரே மாயயை (மாய்-யை) ஒரே சிலேம என்று கூவி இயரை வசப்படுத்தும் துரோக பிழைப்பில் மண் விழப் போவதை தடுக்க, குண்டர்களை கொன்று ஆவியாக ஏவக்கூடும் என்ற எச்சரிக்கை மாயத்திரையில் தோன்றி மறைந்ததே அதற்கான காரணம்.
“மக்கள் ஆட்சி என்பது சிலேம நாட்டில் கிடையாது. அதை மாய் ஆட்சி என்றே கொள்ளலாம். அதன்வழி கொள்ளை அடிக்கும் ஒரு கும்பலில் மாயின் அதிகாரம் கொண்ட மன்னனோடு சீரின் இடையர்களும் இயரின் இடையர்களும் நன்கு கொளுத்துவிட்டனர். இதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. மக்கள் ஆட்சி என்பதைக் கொண்டு மன்னனை தேர்வு செய்யும் வழிமுறையில் பெரிய சூது நடந்துள்ளது.” தொடர்ந்தான் விக்கிரமாதித்தன்.

“மன்னன் தஞ்சாவூர் பொம்மைகளாக இருக்கும் இடையர்களை தேர்வு செய்கிறான். இடையர்கள் மந்தைகளை கட்டி காக்கிறார்கள். மந்தைகளை நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நல்ல புற்களும் புண்ணாக்கும் போட்டு தண்ணீர் காட்டி தலையாட்ட வைக்கிறான். தலையாட்ட மறுக்கும் ஆடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பி வைக்கிறான்.”

“பழக்கமும் பயமும் ஒன்று சேர மந்தையில் உள்ள ஆடுகள் இடையனே தக்க பாதுகாப்பை கொடுக்க இயலும் என்ற நம்பிக்கையை பெற்று விடுகின்றன.”

அடுத்து என்ன பதில் கிடைக்கும் என்று ஆவிகள் கூட்டம் பிசுபிசுத்தன. “இடையனை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்றது ஒன்று. மற்றொன்று “வேலியை உடைக்க வேண்டும்” என்றது.

“வேதாளமே, இயர் இனத்தின் விடுதலை தொடங்கிவிட்டதை என்பதை நீயும் உணர்வாய். இடையர்கள் தேவையில்லை என்பதை மாய்-யும், சீர்-ரும் கூட வெகுவாக உணர்ந்துவிட்டனர். ஆவிகளின் முணகலில் விடையுள்ளதை நீயும் உணர்வாய்” என்றான்.

விக்கிரமாதித்தன் தனது மௌனத்தை கலைத்ததால், வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறியது.

“இனி செத்தாலும், ஆவி வாக்காளர்களாக போவப் போவதில்லை” என்று சபதம் எடுத்தன சில ஆவிகள். “அவைகளுக்கு மஞ்சள் காமாலை பிடித்துவிட்டது” என்றது ஒரு சுத்தமான ஆவி.